Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஸ்டாலின் அமைதிகாக்கும் மர்மம் என்ன? ராமதாஸ் கேள்வி

மு.க.ஸ்டாலின்- ராமதாஸ்

நாகை, கடலூர் மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ள பெட்ரோலிய மண்டலத் திட்டம்குறித்து தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அமைதிகாக்கும் மர்மம் என்ன என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில், 45 கிராமங்களில் உள்ள 57,345 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்தி, பெட்ரோகெமிக்கல்ஸ் முதலீட்டு மண்டலம் அமைக்க பா.ம.க தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இந்தத் திட்டத்தால் பாதிக்கப்படும் கிராமங்களுக்கு, வரும் 5-ம் தேதி சென்று மக்களை சந்திக்கவிருக்கிறார் அன்புமணி. கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய மண்டலம் அமைக்க அனைத்துத் தரப்பிலும் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இந்தப் பிரச்னையில் தி.மு.க தரப்பில் கடைபிடிக்கப்பட்டுவரும் அமைதி, பல்வேறு ஐயங்களை எழுப்பியிருக்கிறது. கடந்த 22-ம் தேதி, செங்கம் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலினிடம்,‘நெடுவாசல் போராட்டம் நடந்துகொண்டிருக்கும் நிலையில், 45 கிராமங்களில் பெட்ரோலியப் பொருள்கள் தயாரிக்கும் ஆலை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதே’ எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், சம்பந்தமே இல்லாமல் குண்டர் சட்டம்குறித்து பேசினாரே தவிர, பெட்ரோலிய மண்டலம்குறித்து ஒரு வார்த்தைகூட உதிர்க்கவில்லை.

அடுத்த நாள், காஞ்சிபுரம் பகுதியில் பல இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலினிடம், பெட்ரோலிய மண்டலம்குறித்து மீண்டும் வினா எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஸ்டாலின், "கடலூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 45 கிராமங்களை பெட்ரோகெமிக்கல் முதலீட்டு மண்டலமாக தமிழக அரசு அறிவித்திருப்பது உள்ளபடியே அதிர்ச்சியளிக்கக்கூடிய செய்தியாக அமைந்திருக்கிறது.  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய பா.ஜ.க அரசு எதைச் சொன்னாலும் ‘எள்’ என்றால் ’எண்ணெய்’ என்பதுபோல மாறிக்கொண்டிருக்கிறார்’’ என்பதையே வேறு வேறு வார்த்தைகளில் மாற்றி மாற்றிக் கூறினார். ஆனால், பெட்ரோலிய மண்டலம் அமைப்பதை தி.மு.க ஆதரிக்கிறதா, எதிர்க்கிறதா. அதனால், கடலூர், நாகை மாவட்டங்களில் ஏற்படவுள்ள பாதிப்புகள் என்ன, இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டுமா அல்லது செயல்படுத்தலாமா என்பது குறித்தெல்லாம் மு.க.ஸ்டாலின் எதுவுமே கூறாமல் பேட்டியை முடித்தார். அதைத் தொடர்ந்து, 26-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் பேட்டியளித்த ஸ்டாலினிடம், மீண்டும் இதுபற்றி  செய்தியாளர்கள் கேட்டபோது, "இதனைக் கண்டித்து ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டுள்ளேன்" என்று கூறி, எந்தப் பதிலும் அளிக்க மறுத்துவிட்டார். உண்மையில், பெட்ரோலிய மண்டலம் அமைப்பதைக் கண்டித்து தி.மு.க-வோ, மு.க.ஸ்டாலினோ இன்று வரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. கடந்த 23-ம் தேதி பெட்ரோலிய மண்டலம்குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய வினாக்களுக்கு மழுப்பலாக பதிலளித்ததைத் தவிர, இந்தப் பிரச்னையில் ஸ்டாலின் இதுவரை ஒரு வார்த்தைகூட பேசவில்லை. தமிழகத்தின் நலன் சார்ந்த முக்கியப் பிரச்னையில் தி.மு.க., வாய் இருந்தும் ஊமையாகிவிட்டது ஏன்?

பெட்ரோலிய மண்டலத் திட்டத்தின்படி, பெருமளவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் எண்ணெய்க் கிடங்குகளும் அமைக்கப்பட்டால், அந்த இரு மாவட்டங்களும் வாழத் தகுதியற்றவையாக மாறிவிடும். இப்படி ஒரு மோசமான திட்டத்தை கடுமையான வார்த்தைகளால் கண்டிப்பதில் தி.மு.க-வுக்கு என்ன தயக்கம். இந்தத் திட்டம்குறித்து எந்த அறிக்கையும் விடாமல், அறிக்கை வெளியிட்டதாகக் கூறி மக்களை ஏமாற்ற முயல்வது ஏன் என்பன போன்ற வினாக்களுக்கு ஸ்டாலின்தான் விடையளிக்க வேண்டும். நாகை, கடலூர் மாவட்டங்களில் பெட்ரோலிய மண்டலம் அமைக்கும் திட்டத்துக்கான இடங்கள், கடந்த 2007-08-ம்  ஆண்டில், தி.மு.க ஆட்சியில்தான் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. தி.மு.க-வைச் சேர்ந்த மு.க.அழகிரி, மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சராக இருந்தபோது, 2012-ம் ஆண்டில்தான் இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. இப்படியாக, தங்களின் குழந்தையான நாகை, கடலூர் மாவட்ட பெட்ரோலிய மண்டலத்தை, நாமே எப்படி எதிர்ப்பது என்ற மன உறுத்தல் காரணமாகத்தான் இந்த விஷயத்தில் தி.மு.க அமைதி காக்கிறதா... என்பதை ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்.

இவற்றையெல்லாம் தாண்டி, முந்தைய தி.மு.க ஆட்சியில் பொதுப்பணித்துறைச் செயலாளராக இருந்து, ஆட்சி மாற்றத்துக்கு முன்பாக மிகவும் பாதுகாப்பான முறையில் விருப்ப ஓய்வு அளித்து அனுப்பிவைக்கப்பட்ட ராமசுந்தரம்தான் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் நாகார்ஜுனா உரம் மற்றும் ரசாயன நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரியாக இருப்பதால், அந்தப் பாசம்தான் இந்தத் திட்டத்தை எதிர்க்கத் தடையாக உள்ளதா என்பதை விளக்குவதும் நல்லது. நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டமாக இருந்தாலும் கைவிடப்பட்ட மீத்தேன் திட்டமாக இருந்தாலும், அவற்றுக்கு அனுமதி அளித்தது தி.மு.க அரசுதான். பெட்ரோலிய மண்டலம் அமைப்பதற்கு அனுமதி அளித்த பாவத்திலும் தி.மு.க-வுக்கு பங்கு உண்டு. அத்தனை அழிவுத் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டிவிட்டு, அதனுடன் தங்களுக்கு சம்பந்தமில்லை என்பதுபோல தி.மு.க நடத்தும் நாடகங்களை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள். நேரம் வரும்போது அ.தி.மு.க-வுடன் சேர்த்து தி.மு.க-வையும் மக்கள் தண்டிப்பர்" என்று கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close