வெளியிடப்பட்ட நேரம்: 15:29 (31/07/2017)

கடைசி தொடர்பு:15:29 (31/07/2017)

போலந்து பல்கலைக்கழகத்தில் விவாதமான 'உறியடி' படம்!

`உறியடி', சாதி அரசியலை மையமாக வைத்து சமூக அக்கறையுடன் தயாரிக்கப்பட்ட படம். இதனால், படம் வெளியானது முதலே பலரின் கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்றதோடு, பல விருதுகளையும் குவித்தது. இந்நிலையில், போலந்து நாட்டில் இயங்கிவரும் `வ்ரோக்ஸ்வாக்ஸ்' என்ற பல்கலைக்கழகத்தில் `அரசியல் அறிவியல்' படிக்கும் மாணவர்களுக்கு `உறியடி' படம் திரையிட்டு, படம் தொடர்பான விவாதமும் நடத்தப்பட்டது.  

விஜயகுமார்

`உறியடி' படத்தின் இயக்குநர் விஜயகுமார் இதுகுறித்துப் பேசியபோது, `` `உறியடி'க்கு பல அங்கீகாரங்கள் கிடைப்பது மிக்க மகிழ்ச்சி. போலாந்து நாட்டில் செயல்பட்டுவரும் `வ்ரோக்ஸ்வாக்ஸ்' பல்கலைக்கழகத்தில் படித்துவரும் `அரசியல் அறிவியல்' மாணவர்களுக்கு படத்தைத் திரையிட, படத்தை அனுப்பிவைக்குமாறு கேட்டார்கள். `மானே... மானே...' பாடல் இல்லாத வெர்ஷனை அனுப்பிவைத்தேன். படத்தைப் பார்த்த மாணவர்கள், `திரைமொழியே புதுமையா இருக்கிறது' என்றனர்.

சாதி பற்றிய படம் என்பதால், படம் முடிந்ததும் விவாதத்தை நடத்தினார்கள். நேர்மையான எண்ணத்துடன் படம் எடுத்தால் தேசங்கள் தாண்டியும் கொண்டாடப்படும் என்பதற்கு `உறியடி' மிகச்சிறந்த உதாரணம்'' என்ற விஜயகுமார், ``அடுத்து இரண்டு கதைகள் தயார். இவற்றுக்கான எழுத்து மற்றும் திட்ட வேலைகள் முடிந்தவுடன் படப்பிடிப்புக்குச் செல்லவேண்டிதுதான்'' என்கிறார் உற்சாகமாக.