வெளியிடப்பட்ட நேரம்: 15:54 (31/07/2017)

கடைசி தொடர்பு:15:54 (31/07/2017)

தமிழக அரசின் 85% இட ஒதுக்கீடு அரசாணை செல்லாது - உயர் நீதிமன்றம் அதிரடி

மருத்துவ கலந்தாய்வில்  85 % இடங்கள் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கும்  சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 15 % இடங்களும் ஒதுக்கப்படும் என்ற மாநில அரசின் அரசாணை செல்லாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

high court


நீட் தேர்வு முடிவுகளில், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் குறைந்த அளவிலே தேர்வானார்கள். இதனால், தமிழக அரசு  85 % இடங்கள் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 15 % இடங்களும் ஒதுக்கப்படும் என்ற மாநில அரசின் அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை எதிர்த்து சி.பி.எஸ்.இ மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி தமிழக அரசின் இந்த அரசாணையை ரத்து செய்தார். இந்த ரத்து உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

இதன் வழக்கு விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்தின் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பின்னர், உயர் நீதிமன்ற அமர்வு தனி நீதிபதியின்  ரத்து உத்தரவை உறுதி செய்தார். இதனால் மருத்துவ கலந்தாய்வில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு எந்தச் சிறப்பு ஒதுக்கீடும் கிடைக்காது. மேலும், மருத்துவ கலந்தாய்வை விரைந்து நடத்த தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. இதனால், மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் பலரின் மருத்துவக் கனவு சிதையும் நிலை உருவாகியுள்ளது.

நீட் தேர்வில் இருந்து ஒன்றிரண்டு ஆண்டுகளாவது விலக்கு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரைச் சந்திக்க டெல்லி சென்றிருக்கிறார் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

மருத்துவ கலந்தாய்வில் கலந்துகொள்ள 52,000 மாணவர்கள் விண்ணப்பித்து எப்போது கலந்தாய்வு நடக்கும் என்று காத்திருக்கிறார்கள். வழக்கு மேல் வழக்கு தொடர்ந்து நடப்பதும், மேல்முறையீட்டை ரத்து செய்திருப்பதற்கு எதிராக தமிழக அரசு அடுத்து என்ன செய்யப்போகிறது என்பதையும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள் மாணவர்கள்.