இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்! 344 மாணவ - மாணவிகளின் ஏக்கம் இதுதான்! 

                              

உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தக்கோரி மாணவ, மாணவிகள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்ட சம்பவம் கல்வித் துறைக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சோழன்குடிக்காடு கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. நடுநிலைப் பள்ளியாக இருந்த இந்தப் பள்ளி கடந்த 2006-ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் அயன்தத்தனூர்,  மணப்பத்தூர், படைவெட்டிக்குடிக்காடு, சித்துடையார், உகந்தநாயகன் குடிக்காடு, சோழன்குடிக்காடு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 344  மாணவர்கள் படித்து வருகின்றனர். பத்தாம் வகுப்பு தேர்வில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக தொடர்ந்து 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்று வருகிறது இந்த அரசுப் பள்ளி. அரசு வகுத்துள்ள அனைத்து தகுதிகளையும் இப்பள்ளி பெற்றுள்ளது. மேலும், அரியலூர் மாவட்டத்தில் சிறந்த பள்ளிக்கான காமராஜர் விருதையும் இப்பள்ளி பெற்றுள்ளது.

இப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் வைத்தார்கள் பொதுமக்கள். 2012-ம் ஆண்டு
2 லட்சம் ரூபாய், அரசுக்கு பள்ளியின் பங்குத் தொகையாகச் செலுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக அரசின் பார்வைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லாததால் இப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகத்  தரம் உயர்த்தாத அரசைக் கண்டித்து 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களுக்கு ஆதரவாகப் பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட சமூக ஆர்வலர் கணேசன் பேசுகையில், அரியலூர் மாவட்டம்  படிப்பறிவில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக இருந்து வருகிறது. தொடர்ந்து இம்மாவட்டம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பின்நோக்கியே சென்றுகொண்டிருக்கிறது. ஆனால், தொடர்ந்து இப்பள்ளி சென்டம் எடுத்துக்கொண்டிருக்கிறது. இந்தப் பள்ளியை தரம் உயர்த்தாமல் இருந்தால் இங்குள்ள பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்த்துவிடுவார்கள். அரசு வகுத்துள்ள அனைத்து தகுதிகளும் இருக்கிறது. ஆனால், ஏன் இந்தப் பள்ளியைத் தரம் உயர்த்தாமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இப்பள்ளியை உடனே தரம் உயர்த்த வேண்டும். இல்லையேல் அரசைக் கண்டித்து தொடர் போராட்டம் நடத்துவோம்" என்று எச்சரித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!