வெளியிடப்பட்ட நேரம்: 16:33 (31/07/2017)

கடைசி தொடர்பு:16:33 (31/07/2017)

கலெக்டரிடம் சைகை காட்டி கொதித்த மாற்றுத்திறனாளி!

திங்கள்கிழமை தோறும் அனைத்து மாவட்டங்களைப்போல சேலம் மாவட்டத்திலும் இன்று மக்கள் குறைத்தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத் தலைமையில் அவருடைய அலுவலகத்தின் முதல் தளத்தில் நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் தங்களுடைய புகார் மனுக்களைக் கலெக்டரிடம் கொடுத்தார்கள். மாற்றுத்திறனாளிகள் முதல் மாடி மீது ஏற முடியாது என்பதால் நுழைவுவாயில் அறையிலேயே தனிச் சேர்கள் போடப்பட்டு அமர வைக்கப்படுவார்கள். கலெக்டர் முதல் மாடியில் பொதுமக்களின் புகார் மனுக்களைப் பெற்று கீழே இறங்கி வந்து  நுழைவுவாயில்  அறையில் அமர்ந்திருக்கும் மாற்றுத்திறனாளிகளைத் தனித் தனியாகச் சந்தித்து அவர்களின் புகார் மனுக்களைப் பெறுவது வழக்கம். பிறகு, புகார் மனு கொடுக்க வந்திருக்கும் பொதுமக்களையும் மாற்றுத் திறனாளிகளையும் இலவச வாகனத்தின் மூலம் அழைத்துச் சென்று பஸ் நிலையத்தில் விட்டு வருவது வழக்கம்.

அதேபோல இன்றும் பொதுமக்களிடம் புகார் மனுக்களைப் பெற்றுவிட்டு நுழைவு வாயிலில் அமர்ந்திருக்கும் மாற்றுத்திறனாளிகளை சந்தித்து மனு பெற்றுக்கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு மாற்றுத்திறனாளி கலெக்டரின் அருகில் வந்து கை நீட்டி, நீட்டி மொழி தெரியாத வார்த்தைகளில் கத்திக் கத்திப் பேசி மீசையை முறுக்கினார். அவர் என்ன பேசினார் என்று புரியவில்லை என்றாலும், கலெக்டரை கண்ட மேனிக்கு திட்டுகிறார் என்பது மட்டும் புரிந்தது. உடனே அதிகாரிகள் ஓடிப் போய் அவரை விசாரித்தபோது அவர் வாய் பேச முடியாத பிறவி ஊமை என்பது தெரியவந்தது. அவர்கூட வந்திருந்தவர்களிடம் விசாரித்தபோது, ''இவர் பெயர் சஞ்சய்காந்தி. அவர் தந்தை பெயர் முத்துகருப்பன். சஞ்சய்காந்தி சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டியைச் சேர்ந்தவர். இவர் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவர் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை பெறுவதற்காகக் சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணப்பித்திருந்தார்.

இவருடைய விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்த சமூகப் பாதுகாப்பு அதிகாரிகள், இவருக்கு உதவித் தொகை கொடுக்க ஆணை பிறப்பித்து அதற்கான கடிதத்தை 4.11.2016-ம் தேதி கொடுத்துவிட்டார்கள். ஆனால், இதுவரை அவருக்கு உதவித் தொகை வரவில்லை. இதனால் விரக்தி அடைந்த சஞ்சய் எங்களோடு கலெக்டரைப் பார்க்க வந்தார். இவரைக் கவனித்துகொள்ள ஆட்கள் இல்லை. இவுங்க அப்பா, அம்மாவுக்கும் வயதாகிவிட்டது. செலவுக்கு காசு இல்லாமல் பரிதவித்து வருகிறார். இதனால், கோபம் அடைந்த சஞ்சய் கலெக்டரைத் திட்டிவிட்டார். வாய் பேச முடியாதவர்கள் அடிக்கடி மீசையை முறுக்குவது வழக்கம். இதைப் பெரிதுபடுத்தாமல் அவருக்கு கிடைக்க வேண்டிய உதவித் தொகையைக் கொடுக்க வேண்டும்'' என்றார்கள்.

இதுபற்றி கலெக்டர் சம்பத்திடம் கேட்டதற்கு, ''வாய் பேச முடியாதவர்கள் எப்போதும் சத்தமாகவும் கைகளை நீட்டி, சைகை மூலமாகவும்தான் பேசுவார்கள். அதை நான் பெரிதுபடுத்தவில்லை. மேலே இருந்து இவர்களுக்கான நிதி வராததால்தான் கொடுத்திருக்க மாட்டார்கள். மேலே இருந்து இவர்களுக்கான நிதி வந்துவிட்டால் மொத்தமாகக் கொடுத்துவிடுவார்கள்'' என்றார்.