Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’நீதித்துறை மீது எதிர்மறை சிந்தனை உருவாக இவைதான் காரணம்!’ - பட்டியலிட்ட உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி

நீதிபதி இந்திரா

திருப்பூரில் நவீன வசதிகளுடன் கூடிய மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடம் கட்டுவதற்காக, மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகப் பகுதியில் 10 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அதில், 33.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மூன்று தளங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடம் கட்டப்பட இருக்கிறது. அதற்கான பூமி பூஜையை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்வில் தமிழகச் சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவர் ஹூலுவாடி ஜி.ரமேஷ், உயர் நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், டி.கிருஷ்ணகுமார், ஏ.எம்.பஷீர் அகமது, சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய இந்திரா பானர்ஜி, ''கடந்த 2009-ம் ஆண்டு கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் அடங்கியிருந்த சில பகுதிகளை இணைத்து உருவாக்கப்பட்டது திருப்பூர் மாவட்டம். சேர, சோழ மற்றும் விஜயநகரப் பேரரசுகளின் ஆட்சிக் காலத்திலும் இந்த நகரம் முக்கியப் பங்காற்றி உள்ளது. அதேபோன்று தற்போதும் நாட்டின் ஏற்றுமதியில் திருப்பூர் முக்கியப் பங்கினை வகித்து வருகிறது.

இது, பொருளாதார நகரமாக மட்டும் அல்லாமல், நீதித் துறையின் செயல்பாட்டுக்கும் ஒரு முக்கிய மையமாகவும் விளங்குகிறது. திருப்பூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைய அனைவரது கூட்டு முயற்சியே முக்கியக் காரணமாகும். திருப்பூரின் வரலாற்றில், இது ஒரு முக்கியமான நிகழ்வு. நவீன வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளும் ஏற்படுத்த இருப்பது வரவேற்கத்தக்கது. அதனுடன் சேர்த்து மூன்றாம் பாலினத்தவருக்கும் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இங்குக் கிடப்பில் போடப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் ஐந்து ஆயிரத்திற்கும் மேலாக இருப்பது குறிப்பிடத்தக்கது. வழக்குகள் நீண்டநாள்களாக நிலுவையில் இருக்கும்பட்சத்தில், நீதிமன்றங்களை நாடும் பொதுமக்கள், அதிக பொருளாதாரச் செலவுகளால் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இதனால் நீதித் துறையின்மீது எதிர்மறையான எண்ணங்கள் உருவாக நேரிடும். தாமதமாக வழங்கப்படும் நீதி, தண்டனைக்குச் சமமானது. அதேநேரத்தில், விரைவாக வழங்கப்படும் நீதியில் தரம் குறையக் கூடாது. எனவே, வரும் 2018-ம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு இருக்க வேண்டும் என்பதை ஓர் இலக்காக வைத்துச் செயல்பட வேண்டும். நியாயமான வாதங்கள் தரமான நீதிக்கு வழிவகுக்கும். வழக்குரைஞர்களும், சட்டத்தின் நடைமுறையில் மேற்கொள்ளப்படும் புதிய புதிய மாற்றங்கள் குறித்து அறிந்து வைத்திருக்க வேண்டும். நிலுவையில் உள்ள வழக்குகளில் விரைவாகத் தீர்வு காண மாற்று நடவடிக்கைகளும் தேவைப்படுகின்றன. அரசு அதிகாரிகள், நீதித் துறையின் சுமையைக் குறைக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கடைசியாகத் தேசிய அளவில் நடைபெற்ற லோக் அதாலத் மூலம் தமிழகத்தில் மட்டுமே ஒரு லட்சத்து அறுபத்தெட்டாயிரம் வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு இருக்கிறது. அதில், தமிழ்நாடுதான் அதிகமான வழக்குகளில் தீர்வு கண்ட முதல் மாநிலமாகத் திகழ்ந்து இருக்கிறது'' என்றார்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement