வெளியிடப்பட்ட நேரம்: 08:22 (01/08/2017)

கடைசி தொடர்பு:09:56 (01/08/2017)

நரி கதை... நாய் கதை... பேய் கதை..! - ஓ.பன்னீர்செல்வம் மீட்டிங் கவரேஜ்

பன்னீர்செல்வம்

கோவையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, கடந்த சனிக்கிழமை அன்று, ஓ.பன்னீர்செல்வம் அணி நடத்திய அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி செயல்வீரர்கள் கூட்டத்திற்குத் திரண்ட கூட்டம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்தவர்கள் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது. 'ஓ.பி.எஸ். ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டார்' என்று  மேடைதோறும் பேசிவந்த எடப்பாடி அணியினர், இந்தக்கூட்டத்தைப் பார்த்து கிலி பிடித்துக் கிடக்கிறார்கள். 'இணைந்து விடுவோம்' என்று எடப்பாடி அணி சொல்லிக்கொண்டிருக்கும் நிலையில், 'இணைப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை' என்று அடித்துச்சொல்லி இருக்கிறது ஓ.பி.எஸ் தரப்பு. ஓ.பி.எஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் ஹைலைட்ஸ் இதோ...

மாட்டு வண்டியும்... படுகர் டான்ஸும்...!

ஓ.பி.எஸ்ஸுக்குக் கொடுக்கப்பட்ட வரவேற்பு என்பது உச்சக்கட்டம். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கும் கூட்டங்களுக்கு செய்யப்படும் ஏற்பாடுகளில் முக்கால்வாசி ஏற்பாடுகள் ஓ.பி.எஸ் கூட்டத்திற்கும் செய்யப்பட்டிருந்தது. தோரண நுழைவாயில், மேடையைச் சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த மின்விளக்கினாலான தட்டிகள், வழியெங்கும் பேனர்கள் என கிட்டத்தட்ட ஒரு மாநாடுபோல ஏற்பாடு செய்திருந்தனர். இவற்றில் ஹைலைட்டான விஷயம், மாட்டுவண்டி வரவேற்பும், படுகர் இன மக்களின் டான்ஸும்தான்.  'ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வாங்கி கொடுத்தவர் ஓ.பி.எஸ்' என்பதை மக்களுக்குச் சொல்லும்வகையில் 30-க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகளைக் கூட்டம் நடைபெற்ற கொடிசியா மைதானத்தின் நுழைவாயிலில் நிறுத்தியிருந்தார்கள். நீலகிரியிலிருந்து அழைத்துவரப்பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட படுகர் இன மக்கள், தங்கள் பாரம்பரிய நடனத்தை ஆடி சிறப்பித்துக் கொண்டிருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஓ.பி.எஸ்ஸுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்க நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். மேடையில் ஓ.பி.எஸ்ஸுக்காக தயாரிக்கப்பட்டிருந்த பிரத்யேக பாடல், வீடியோவோடு ஒளிபரப்பப்பட்டது. அதில், ஜெயலலிதா சடலத்தின் அருகில் அமர்ந்து ஓ.பி.எஸ் கண்ணீர்விடும் காட்சிகள் 'ரிப்பீட் மோடில்' வந்துகொண்டிருந்தது. இப்படி ஒரே அதகளம்.. அமர்க்களம்.

கோவையில் ஓ.பி.எஸ் நடத்திய எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா

கே.பி.முனுசாமிதான் எல்லாம்...  

கோவையில் ஓ.கே. சின்ராஜ், அருண்குமார் என இரண்டு எம்.எல்.ஏ-க்கள், ஓ.பி.எஸ் அணியில் இருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் கிணத்துக்கடவு தாமோதரன் உட்பட இன்னும் பல சீனியர்கள் ஓ.பி.எஸ் அணியில் இருக்கிறார்கள். எந்த ஊரில் எந்தக் கட்சி கூட்டம் நடந்தாலும் அந்த ஊர் நிர்வாகிகள்தான், 'ஆல்-இன்-ஆல்' ஆக இருப்பார்கள். ஆனால், இங்கு முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமிதான் எல்லாரையும் கன்ட்ரோல் செய்தார். மேடையில் யார், யாரை ஏற்றுவது என்பதைக்கூட மேடையில் இருந்தபடி கே.பி. முனுசாமியே முடிவு செய்தார். அவரின் இந்தச் செயல், உள்ளூர் நிர்வாகிகள் பலருக்கு எரிச்சலைக் கொடுத்தது.

கோவையில் ஓ.பி.எஸ் நடத்திய எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா

நரி கதை... நாய் கதை... பேய் கதை..!

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் யாரும் பெரிதாக, எம்.ஜி.ஆரைப் பற்றி பேசவே இல்லை. பொன்னையன் மட்டும் ஓரளவுக்கு எம்.ஜி.ஆர் பற்றிப் பேசினார். முன்னாள் அமைச்சர் தாமோதரன் பேச்சில் அனல் பறந்தது, “இந்தக் கூட்டத்தை எப்படியாவது நடக்கவிடாமல் தடுத்துவிட வேண்டும் என்று எடப்பாடி அணியினர், கடைசிநேரம் வரை எவ்வளவோ முயற்சி செய்தார்கள். அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கோவையைச் சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருந்தார். அமைச்சர்களின் பி.ஏ-க்கள் எங்கள் அணியில் இருப்பவர்களுக்கு போன்செய்து, 'எங்கள் பக்கம் வந்துவிடுங்கள், உங்களுக்கு எதுவேண்டுமானாலும் செய்து தருகிறோம்' என்று பேரம் பேசினார்கள். இது எல்லாவற்றையும் மீறி இந்தக்கூட்டம் நடந்து கொண்டிருக்கிறதென்றால், அதற்குக் காரணம் ஓ.பி.எஸ் அண்ணனின் மக்கள் செல்வாக்குதான். மக்கள் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள். மக்களைக் குழப்ப முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நரிக் கதையெல்லாம் சொல்கிறார். நரிக்கதை மட்டுமல்ல; நாய்க்கதை, பேய்க்கதை சொன்னாலும் நாங்கள் உங்களோடு இணைய மாட்டோம். அந்தப் பக்கம் இருப்பவர்கள் அனைவரும் மாறி, மாறிப் பேசக்கூடியவர்கள். முதலமைச்சராக சசிகலா வரவேண்டுமென்று சொல்லிவிட்டு, இப்போது எடப்பாடி பின்னால் போய்விட்டார்கள். அதற்குக் காரணம் பெட்டி. பெட்டிக்காக மட்டுமே அவர்கள் அங்கு இருக்கிறார்கள். நாங்கள் அப்படி இல்லை; எப்போதும் ஓ.பி.எஸ் பின்னால்தான். இங்கு ஒரே அணிதான். அது, ஓ.பி.எஸ் அணிதான்” என்று முடித்தார்.

கோவையில் ஓ.பி.எஸ் நடத்திய எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா

அம்மா வாய்ஸ்... அடுத்தது ஓ.பி.எஸ்...

இறுதியாக ஓ.பி.எஸ் பேசத் தொடங்கினார். ஓ.பி.எஸ் எழுந்து, பேசாமல் நின்று கொண்டிருந்தார். திடீரென்று, ஜெயலலிதா வாய்ஸ் ஸ்பீக்கரில் ஒலித்தது. கூட்டத்தில் ஒரே ஆரவாரம். ஓ.பி.எஸ்ஸை ஜெயலலிதா புகழ்ந்துபேசும் ஆடியோதான் அது. ஜெ. ரெக்கார்டட் பேச்சு முடிந்ததும் மைக் பிடித்த ஓ.பி.எஸ், "இந்த தர்ம யுத்தத்தின் இலக்கு என்ன என்பதை நாம் பல கூட்டங்களில் தெளிவாகச் சொல்லி இருக்கிறோம். அ.தி.மு.க என்ற இந்த மாபெரும் இயக்கம், என்றும் மக்கள் இயக்கமாக இருக்க வேண்டும். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், புரட்சித்தலைவி அம்மாவும் 45 ஆண்டுகாலம், பல்வேறு சோதனைகளைத் தாண்டி, இந்த இயக்கத்தைக் கட்டிக்காத்துள்ளார்கள். அவர்கள் இருவரும் தமிழகத்தில் மக்களாட்சியை நடத்தினார்கள். எம்.ஜி.ஆரும், புரட்சித்தலைவியும் என்றைக்குமே மக்கள் விரோதப்போக்கைக் கடைபிடித்தது இல்லை. அதனால்தான் தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் அம்மாவை மீண்டும் ஆட்சியில் அமர வைத்தார்கள். இப்போதைய ஆட்சியாளர்கள், மக்களைப்பற்றி கவலைப்படுவதில்லை. அம்மாவின் கொள்கைகள், கோட்பாடுகளைப் பின்பற்றுவதில்லை. நடிகர் கமல்ஹாசன் அவரின் கருத்தைச் சொன்னார். அந்தக் கருத்துக்கு எல்லா அமைச்சர்களும் மிரட்டுகின்ற தொனியில் பதில்சொல்கிறார்கள். அவர்களின் பதில், முகம் சுளிக்கும் வகையில் இருக்கிறது. முன்னாள் அமைச்சர் தாமோதரன் சொன்னதைப்போல, அவர்கள் பக்கம் இருப்பவர்கள் பணத்துக்காக மட்டுமே இருக்கிறார்கள். ஒன்றரைகோடி தொண்டர்களும், மக்களும் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள். அம்மாவுடைய ஆட்சி தமிழகத்தில் மீண்டும் மலர்வதற்கான காலம் வெகுதூரத்தில் இல்லை. அதற்கான காலம் கனிந்து கொண்டிருக்கிறது. அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி உறுதியாக வெற்றிபெறும்" என்று முடித்தார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்