மர்ம காய்ச்சலால் சேலத்தில் மாணவர் பலி!

சேலம் சின்னக்கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் உமா-செல்வமணி தம்பதி. இவர்களுக்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.  இவர்களுக்கு தருண், விஜய் என இரண்டு ஆண் குழந்தைகள்.  தருண் (வயது 9) சின்னக்கொல்லப்பட்டியில் உள்ள மவுன்மேரிஸ் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். இரண்டாவது மகன் அஜய் (வயது 4)  யு.கே.ஜி. படித்துக்கொண்டிருக்கிறான்.

உமாவுக்கு பத்து நாள்களுக்கு முன்பே தொடர் காய்ச்சல் இருந்திருக்கிறது. உடனே மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றதால் குணமானார். அதையடுத்து, 5 நாள்களுக்கு முன்பு மூத்த மகன் தருணுக்கு காய்ச்சல் வந்திருக்கிறது. தனியார் மருத்துவமனையில் 3 நாள்கள் தங்கி சிகிச்சை பெற்றுவந்தார். அவர்கள் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினார்கள்.
இதையடுத்து, தருணுக்கு சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவமனை தனிப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.  

தருணின் அம்மா உமா

ஊர் பொதுமக்கள்


இதுபற்றி தருணின் அம்மா உமாவிடம் பேசியபோது, ''எங்க வீட்டுக்காரர் கட்டட தொழிலாளி. நாங்கள் கூலி வேலை செய்து அதில் கிடைக்கிற வருமானத்தில்தான் வாழ்ந்து வருகிறோம். என் மூத்த குழந்தை தருணுக்கு 5 நாள்களாக தொடர்ந்து காய்ச்சல் இருந்துவந்தது. மாத்திரை கொடுத்தபோதும் காய்ச்சல் நிற்கவில்லை. சிலர் டெங்கு காய்ச்சல் என்கிறார்கள். ஆனால், மருத்துவமனை வட்டாரத்தில் டெங்கு இல்லை மர்மக் காய்ச்சல் என்று சொல்லுகிறார்கள்.

எங்க பகுதியில் சுகாதாரம் இல்லாமல் இருக்கிறது. சாக்கடையை வாருவதில்லை. குடிநீரில் சாக்கடை கலந்த நீர் வருகிறது. இதனால் தான் காய்ச்சல் வந்து என் குழந்தை இறந்துவிட்டது. இனி என் குழந்தையை எப்போ பார்ப்பேன்'' என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதார்.

இதுபற்றி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையின் டீன் கனகராஜிடம் விசாரித்தபோது, ''அது என்ன காய்ச்சல் என்று இன்னும் தெரியவில்லை. ரிப்போர்ட் அனுப்பி இருக்கிறோம். வந்த பிறகுதான் தெரியவரும். டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறியும் இருக்கிறது. தற்போதைக்கு அது மர்மக் காய்ச்சலாகத்தான் இருக்கிறது. தொடர்ந்து காய்ச்சல் இருந்தால், உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். காய்ச்சல் வந்தால் சாதாரணமாக நினைத்து வீட்டில் இருக்கக் கூடாது '' என்றார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!