வெளியிடப்பட்ட நேரம்: 12:55 (01/08/2017)

கடைசி தொடர்பு:12:55 (01/08/2017)

இன்ஜினீயரிங் உதவல... விவசாயம் உதவல... மாடு வளக்க வழியில்லை..! டெல்டா இளைஞரின் சோகம்

மாடு

"எல்லோரும் கூடி ஜல்லிக்கட்டு நடக்க போராடுனீங்க, சந்தோஷம். 'நாட்டு மாடுகளை வளருங்க'ன்னு வீர வசனம் பேசுனீங்க. ஆனால், தீவனம் இல்லாம வீட்டுல வளர்க்குற மாடுகளை காவந்து பண்ண முடியாது போலிருக்கு. வயலெல்லாம் காய்ஞ்சு பாலைவனமா கெடக்கு. ஒண்ணுரெண்டு வயல்கள்ல போர்வெல்லை வச்சு விவசாயம் பண்ணின விவசாயிகளும் ஒரு ஏக்கர்ல விளைந்த வைக்கோலை பத்தாயிரம் வரைக்கும் கொள்ளை விலை வச்சு விக்கிறாங்க. ஏற்கெனவே தண்ணீர் இல்லாம வயலைக் கருக விட்டுட்டு மருகி நிக்கயில, அவ்வளவு பணத்தைக் கொடுத்து எப்படி வைக்கோலை வாங்குறது? வீட்டுல நிக்கிற நாலு மாடுகளும் தீனி இல்லாம செத்துபோறதுக்குள்ள வித்துபுடலாம்ன்னு இருக்கேன். டெல்டா முழுக்கவே இந்த நிலைதான்" என்று கண்ணீரும் கம்பலையுமாக டெல்டா நிலவரத்தின் ஒற்றை சோக சாட்சியாக நின்று கதறுகிறார் வீரபாண்டியன். 

தஞ்சை மாவட்டம்,ஆழியவாய்க்காலை சேர்ந்த அவர் இயந்திரவியல் பொறியியல் பட்டதாரி. அவரின் பெற்றோர் வட்டிக்குக் கடன் வாங்கி ஆறு லட்சம் வரை செலவு செய்து இவரை படிக்க வைத்திருக்கிறார்கள். சென்னை, பெங்களூரு என்று இவர் கடந்த இரண்டு வருடங்களாக வேலை தேடி அலைந்திருக்கிறார். காலில் மாட்டியிருந்த செருப்பும், மனசில் கிடந்த நம்பிக்கையும் ஒருசேர தேய, 'இனி நம் குலத்தொழிலான விவசாயத்தையும், கால்நடைகள் வளர்ப்பையும் பார்ப்போம்' என்று யோசித்திருக்கிறார். அவரிடம் இருந்த மூன்று ஏக்கர் நிலத்தில் எழுபதாயிரம் வரை வட்டிக்குக் கடன் வாங்கி பயிர் செய்தார். கூடவே, இன்னும் ஐம்பதாயிரம் கடன் வாங்கி வீட்டில் நின்ற ஒரு பசுமாட்டிற்கு துணையாக இன்னும் இரண்டு பசு மாடுகளையும், ஒரு காளை மாட்டையும் வாங்கி இருக்கிறார். படிச்ச படிப்பு கைகொடுக்கலை. காலம்காலமாக தந்தை, தாத்தா, பாட்டன், பூட்டன் செய்த குலத்தொழிலான விவசாயத்தின் மூலம் கரையேறிவிடலாம் என்ற கனவோடு வயலில் கால் பதித்திருக்கிறார். ஆனால் மூன்று ஏக்கர் நிலத்திலும் போட்ட பயிர்கள் தண்ணீரின்றி கருக, முதலுக்கே மோசம்போன அல்லலில் நிற்கிறார். எதிர்காலமே இருண்ட நிலைக்குத் தள்ளப்பட்ட அவரது வாழ்க்கை திக்கத்து நிற்கிறது. 'இருக்கும் மாடுகளை வளர்த்து பொழைச்சுக்கலாம்' என்று அவர் மனதின் ஓரத்தில் நிற்கும் நம்பிக்கை மேலெழ நினைத்தாலும்,அந்த மாடுகளை மேய்க்கவோ எந்த நிலத்திலும் மருந்துக்கும் பயிர் பச்சை இல்லை. சரி,வெளி ஆட்களிடம் வைக்கோல் வாங்கி போட்டு காபந்து பண்ணலாம் என்றால், ஏக்கர் வைக்கோல் பத்தாயிரம் வரை விலை விண்ணுக்கு ஏற, 'இனி வட்டிக்குக் கடன் கொடுப்பார் யாருமில்லை' என்று அனைத்துக் கதவுகளும் அடைக்கப்பட்ட கொடுமையின் பிடியில் சிக்கி,சோகம் தொக்கி நிற்கிறார் வீரபாண்டியன். கொஞ்சநஞ்சமாக வயலில் தண்ணீரின்றி காய்ந்து கிடக்கும் நெற்பயிர்களில் தனது மாடுகளை மேயவிட்டபடி, முகத்தில் கவலையை நெய்தபடி பரிதாபம் காட்டி நின்ற வீரபாண்டியனிடம் பேசினோம்.

 மாடு

"எல்லாம் போச்சு சார். 'நாங்க செய்த இந்தக் கருமாயப்பட்ட விவசாயத்தை நீயும் செய்ய வேண்டாம். காடு, கழனியில கெடந்து அல்லாட வேண்டாம். எங்க தலையை வித்தாவது உன்னைப்  படிக்க வைக்கிறோம். உன் தலைமுறைனாச்சும் கரையேறட்டும்'ன்னு வட்டிக்குக் கடன் வாங்கி என்னை இன்ஜினீயரிங் படிக்க வச்சாங்க. நானும் நல்லா படிச்சு, 65 சதவிகித மார்க்கோடு பாஸ் ஆனேன். ஆனால், இப்போதுதான் விவசாயிகளுக்கு உள்ள மதிப்புதான் இன்ஜினீயர்களுக்கும் கிடைக்குதே. எங்கேயும் வேலை கிடைக்கலை. வேலை தேடி இரண்டு வருஷமா அலையவே ஐம்பதாயிரம் வரை செலவாயிட்டு. என் படிப்புக்காக எங்க அம்மா, அப்பா தலைமேல ஏழு லட்சம் வரை கடன் இருக்கு. வேலை கிடைக்கலையேன்னு சும்மாவும் இருக்க முடியலை. வீட்டுல இருக்குற மூன்று ஏக்கர் நிலத்துல விவசாயத்தையாவது பண்ணுவோம். கூடவே மாடுகள் வளர்ப்போம்ன்னு முடிவெடுத்தேன். கடந்த போகத்துல வட்டிக்குக் கடன் வாங்கி விவசாயம் பண்ணினேன். கூடவே, மேற்கொண்டு கடன் வாங்கி மூன்று மாடுகளை வாங்கினேன். ஆனால், காவிரியில் தண்ணீரும் வரலை. மழையும் பெய்யலை. இதனால், வயல்ல போட்டிருந்த பயிர் கருக தொடங்கிட்டு. பக்கத்துல இருந்த  போர்க்காரங்ககிட்ட பணத்துக்குத் தண்ணீர் பாய்ச்சினேன். ஆனால், பாலையாக மாறிய நிலத்துக்கு போர்வெல்லை வச்சு தண்ணீர் பாய்ச்ச முடியலை. இதனால், மனசை கல்லாக்கிட்டு வயல அப்படியே விட்டுட்டேன். மாடுகளுக்கு வைக்கோலும் வயல்மூலமா கிடைக்குமேன்னுதான் விவசாயம் பண்ணினேன். அதுக்கும் வழி இல்லாம போயிட்டு. 

வயல்ல கருகத் தொடங்கிய பயிர்களை என் மாடுகளை விட்டு மேயவிட்டுட்டேன். இரண்டு நாளுக்குகூட என் வயல்ல இருந்த பயிர்கள் மாடுகளுக்குப் போதாது. 'மாட்டை வச்சாவது குடும்ப செலவுக்குனாச்சும் வருமானம் பார்ப்போம்'ன்னு நெனச்சேன். ஆனால், வயல்கள்ல இன்னும் வாரத்துக்கூட புல் இல்லை. வைக்கோலும் இல்லை. இதனால், அடுத்த போகம் விவசாயம் பண்ற வரை மாடுகளுக்குத் தீனி போட வெளியில் வைக்கோல் வாங்கலாம்ன்னு போனா, எந்த வருஷமும் இல்லாத அளவுக்கு ஒரு ஏக்கர் வைக்கோல் விலை பத்தாயிரம் வரை சொல்றாங்க. ஒரு ஏக்கர் வைக்கோல் நாலு மாடுகளுக்கு ஒருமாதத்திற்குகூட வராது. இன்னும் 10 மாசத்துக்குத் தேவையான வைக்கோலை வாங்கணும்ன்னா, எண்பதாயிரம் வரை செலவாகும். அவ்வளவு வைக்கோலும் கிடைக்க வாய்ப்பில்லை. எனக்கு தெரிஞ்சவர்கிட்ட போய்  'உங்க வயல்ல ஒரு ஏக்கர்ல நட்டிருக்கிற நெல்பயிர்களை நானே என் செலவுல அறுத்துக் கொடுத்து, நெல்லை விற்கிற களம் வரைக்கும் கொண்டுபோகும் செலவு அனைத்தையும் நான் செய்றேன். ஆனால், பதிலுக்கு உங்க வயல்ல சேர்ற வைக்கோலை நான் எடுத்துக்கிறேன்'ன்னு கேட்டேன்.

மாடு

அதுக்கு அவர் உடனே மறுத்துட்டார். இதனால்,இப்போ என்ன பண்றதுன்னே தெரியலை. படிச்ச படிப்பும் பலன் தரலை. ஆதித் தொழிலான விவசாயமும் பொய்த்துப்போச்சு. மாடுகளை வச்சாவது முரண்டு பார்க்கலாம்ன்னா, அதுக்கும் பேரிடி விழுந்துட்டேன்னு மனசு கலங்கி நிற்கிறேன் சார். கடன்காரன் வேற கழுத்தை நெறிக்கிறான். மாடுகள் வேற மேய்ச்சல் பத்தாம எலும்பும், தோலுமா மாறுது. வைக்கோல் விலை யானை விலை, குதிரை விலை விற்பதால், வைக்கோல் சுருட்டவே மெஷின் வந்துட்டு. வெளிமாவட்டம், வெளி மாநிலத்தில் இருந்தெல்லாம் வந்து இங்க கொஞ்சம்நஞ்சமா இருக்கிற வைக்கோலையும் கூட விலை கொடுத்து வாங்கிட்டு போயிடுறாங்க. அவங்களாலதான் இப்படி வைக்கோல் விலை கன்னாபின்னாவென்று ஏறிட்டு. ஏழ்மைபட்ட நான் என்ன பண்றதுன்னே தெரியாம பித்து பிடிச்சுப் போய் நிக்கிறேன். வீட்டுல சாப்பாட்டுக்கூட வழியில்லாத நிலைமை வேற. அதனால், மனசை கல்லாக்கிட்டு நாலு மாடுகளையும் வித்துடலாம்ன்னு இருக்கேன். நான் மட்டுமில்ல, எங்க ஊர்ல, பக்கத்து ஊர்கள்லயும் இதே நிலைமைதான். பலரும் ஆசை ஆசையாக வளர்த்த மாடுகளை அடிமாடா விக்கிறாங்க. இதான் தருணம்ன்னு எங்க நிலைமையை தெரிஞ்சுகிட்டு, மாடுகளை சல்லி ரேட்டுக்கு விலை பேசுறாங்க மாட்டு வியாபாரிங்க. எனக்கு விபரம் தெரிஞ்சு எங்க வீட்டிலேயே இருபது மாடுகள் வரை நின்னுச்சு. எங்க ஊர் மட்டுமல்ல, டெல்டா மாவட்டங்கள் முழுக்கவே இப்படிதான் வீட்டுக்கு வீடு பத்து, இருபது மாடுகள்ன்னு நிக்கும். அது சன்னமா குறைஞ்சுபோய், இந்த வருஷம் வரலாறு காணாத வறட்சியினால ஒருமாடுகூட வச்சுக்க முடியாத துர்நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கோம். அரசாங்கமும் இதுக்கு வழி சொல்லாது. ஜல்லிக்கட்டுக்காகப் போராடும் இளைஞர்கள்தான் இப்படி வெளியில் தெரியாமல் வீட்டுக்கு வீடு நாட்டு மாடுகளை விற்கும் கொடுமைக்கு வழி செய்ய போராடனும்" என்று முடித்தார்.


டிரெண்டிங் @ விகடன்