Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

''கடல்ல எண்ணெய் கொட்டுறவரைக்கும் பொழப்பு நல்லா இருந்தது!" - கொதிக்கும் எண்ணூர் மீனவப் பெண்கள் #Ennore

'லகத்தின் தூக்கம் கலையாதோ 

உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ 

உழைப்பவர் வாழ்க்கை மலராதோ 

ஒருநாள் பொழுதும் புலராதோ'... 

1964-ம் வருடம் வெளியான 'படகோட்டி' படத்தில் இடம்பெற்ற பாடலின் வரிகள் இவை. ஐம்பது ஆண்டுகளில் உலகத்தின் தூக்கமும் கலையவில்லை; உழைப்பவரின் பொழுதும் மலரவில்லை என்பதை தனது வேதனையான குரலின் வழியே குமுறலுடன் வெளிப்படுத்துகிறார் நட்சத்திரம். எண்ணூர் மீனவப் பெண். 

கடந்த ஜனவரி மாதம் எண்ணூர் கடலில் கச்சா எண்ணெய் ஏற்றிவந்த கப்பல் விபத்துக்குள்ளானதையும், மீன்களும் நண்டுகளும் ஆமைகளும் செத்து மிதந்ததையும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டோம். அன்றிலிருந்தே மீனவர்களின் வாழ்வாதரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆறு மாதங்கள் கழிந்தும் அதே நிலைதான் நீடிக்கிறது என்பதை முகத்தில் அறைந்து சொல்கிறது அங்குள்ள நிலைமை. எண்ணூர் மீனவ குப்பத்தில் ஒரு வலம் வந்தோம். 

நட்சத்திரம் மீனவப் பெண்

நட்சத்திரம் என்ற பெண்மணி, “அன்னிக்கே தலைவர் எம்.ஜி.யாரு எம்புட்டு பெரிய உண்மைய பாடிட்டுப்போயிருக்காரு பார்த்தியா தம்பி. நாட்டு சனங்கள்லாம் நல்லா வாழ விவசாயிங்க மூணு போகம் நெல் அறுக்கணும்னு நாங்க வேண்டுறோம். ஆனா, எங்க பொழப்பு கடல் படகாட்டம் அங்கிட்டும் இங்கிட்டும் தள்ளாடிட்டிருக்கு. கடல்ல எண்ண கொட்டுறதுக்கு முன்னாடி வரைக்கும் எங்க பொழப்பு நல்லாத்தான்யா ஓடிட்டிருந்துச்சு. என்ன பாவம் பண்ணினோமோ தெரியல. மீன் இல்லாம வருமானத்தை இழந்து நிக்குறோம். இன்னிக்காவது மீன் கெடச்சிடாதாங்குற நெனப்புல என் கூட்டாளு காத்தால நாலு மணிக்கே கடலுக்குப் போயிடுவாரு. திரும்பி வரும்போது நூறு ரூவாய்க்குகூட மீன் இருக்காது. அவரைச் சொல்லியும் ஒண்ணுமில்லே. பெரிய பெரிய படகுல போறவங்களுக்கே மீனுங்க சிக்க மாட்டேங்குது. எங்களுக்கு எப்படி கெடைக்கும்? புள்ள குட்டிய வளர்க்க அஞ்சுக்கும் பத்துக்கும் வட்டி வாங்கியாந்து குடும்பம் நடத்துறோம். கடைக்குப் போனா சீனி விலை ஏறிப்போச்சு, பாலு விலை ஏறிப்போச்சுன்னு சொல்றாங்க. நிம்மதியா காப்பி தண்ணிகூட குடிக்க முடியாம சனங்க வாடிப்போயி நிக்குதுங்கப்பா” என்றபடியே நகர்கிறார் நட்சத்திரம். 

மீனவப் பெண்கள்

“இந்தாடா, இந்தக் குப்பத்துக்கே நான்தான் கெழவி. இம்புட்டு வயசுலயும் நான் யாரையும் நம்பி குந்தலடா. அது அந்தக் கடலம்மா கொடுத்த வரமாக்கும். ஆனா, கொஞ்ச நாளைக்கு முன்னே உன்னைப்போல நாலு அஞ்சு பேரு வந்தாங்கோ. சும்மா குந்திக்கின்னு இருந்த என்னை போட்டா புடிச்சுப் போயி பேப்பர்ல போட்டாங்கோ, டி.வியில போட்டாங்கோ. அரசாங்கம் எங்களுக்குத் துட்டு கொடுக்கும்னு சொன்னாங்கோ. ஆனா, ஒண்ணும் கெடக்கலை. 

ஏன்டா, நாங்களா உங்களாண்ட வந்து துட்டு கேட்டோம். நீங்களே தாரேன்னு சொல்லிட்டு, இப்போ எங்க ஆளுங்களை அங்கே இங்கே இழுத்தடிக்குறீங்கோ. நான் ராணியாட்டம் குந்திக்கீனு இருந்தேன்டா. அஞ்சாயிரத்துக்கோசரம் என்ன லோல்பட வெச்சிட்டீங்களேடா. அன்னிக்கு எண்ணெய் கொட்டுனதும் மீன்களைத் துன்னக்கூடாதுன்னு சொல்லி எங்க பொழப்பைக் கெடுத்தானுங்க. இன்னிக்கு தாரேன்னு சொன்ன துட்டைக் கொடுக்காம வயித்துல அடிக்குறானுங்கோ. எங்கே போயி நாங்க அழட்டும்” என்று குமுறினார் செல்லம்மா பாட்டி. 

செல்லம்மா பாட்டிபோல அந்தக் குப்பத்தில் பலரும் தங்கள் வேதனையை வெளிப்படுத்துகிறார்கள். ஒரு பக்கம், கடலில் மீன்களே கிடைக்கவில்லை. மற்றொரு பக்கம் அரசாங்கம் தருவதாகச் சொன்ன நிவாரணத்தொகை கைக்கு வந்து சேரவில்லை என இரட்டை வேதனையில் இருக்கிறார்கள். 

சூரியகாந்தி மீனவப் பெண்

கருவாடு காயவைத்துக்கொண்டிருந்த சூரியகாந்தி என்பவர், “அன்னிக்கு மோதின கப்பலையே இந்நேரத்துக்கு புதுப்பிச்சு இருப்பாங்க தம்பி. ஆனா, எங்க சனங்கதான் கருவாடா வாடிட்டு கெடக்கோம். மீனுங்க செத்து மெதந்ததும் எங்க பொழப்பு பாழாயிடக்கூடாதேன்னு ஐயாயிரம் ரூபாய் நிவாரணம் கொடுக்குறோம்னு சொன்னாங்க தம்பி. அதை நம்பி அக்கம்பக்கத்துல உள்ள எல்லா சனங்களும் எழுதிக்கொடுத்தோம். கொஞ்ச பேருக்குதான் காசு வந்துச்சு. மத்தவங்க அலையா அலையறோம். அவங்க என்னிக்கு எங்களையெல்லாம் மனுசங்களா பார்க்கப் போறாங்களோ தெரிலப்பா. அரசாங்கம் கொடுக்க நெனச்சாலும், அதிகாரிங்க சுருட்டிக்கிறானுங்க. தின்னுட்டுப் போங்கடானு விட்டுட்டோம். இனியும் ராவும் பகலும் அலைய எங்ககிட்டே தெம்பில்லை தம்பி” எனக் கண்ணீரை துடைத்துக்கொண்டே அருகில் கிடக்கும் கருவாடுகளை எடுத்துக் கூடையில் போடுகிறார். 

'தரைமேல் பிறக்க வைத்தான்... எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான்' என்ற வரிகள் என்று பொய்யாகுமோ என்ற கனத்த இதயத்துடன் அங்கிருந்து கிளம்பினோம். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement