வெளியிடப்பட்ட நேரம்: 20:26 (31/07/2017)

கடைசி தொடர்பு:11:17 (01/08/2017)

"என்னை மிரட்டி மலம் அள்ள வைத்தார்கள்.!’’ – போடி நகராட்சியில் இருந்து ஓர் அவலக்குரல்

''நீ மலம் அள்ளாவிட்டால்... உன் வேலையைப் பிடுங்கிக்கொண்டு உன்னை வீட்டுக்கு அனுப்பிவிடுவோம்'' என்று நகராட்சி அதிகாரிகள் மிரட்டுவதாகக் கலெக்டர் ஆபீஸுக்கு மனு கொடுக்க வந்திருந்தார் போடியைச் சேர்ந்த நகராட்சித் தொழிலாளி கோபி. 

கோபி

அவரிடம் பேசினோம். “என்னுடைய சொந்த ஊர் போடி.  நான் போடி நகராட்சியில், குப்பை அள்ளும் நிரந்தர ஊழியராகக் கடந்த 12 வருடங்களாக வேலைபார்த்து வருகிறேன். மூன்றாவது மண்டலத்தில் மொத்தம் நான்கு பொதுக் கழிப்பறைகள் உள்ளன. அதன் கழிவுகள் நேரடியாகச் சாக்கடையில் கலக்கப்படும். அதில் அடைப்பு ஏற்பட்டால், துப்புரவு ஆய்வாளர் பவுன்ராஜும், துப்புரவு மேற்பார்வையாளர் சுப்புராஜும் என்னை அதில் இறங்கி அதன் கழிவை அள்ளச் சொல்வார்கள். இதற்கு முதலில் நான் மறுத்தேன். 'மனித மலத்தை மனிதனே அள்ளக்கூடாது என்று நீங்கள்தானே நகராட்சி முழுவதும் நோட்டீஸ் கொடுக்கிறீர்கள். இப்போது, நீங்களே இப்படிச் செய்யச்சொல்வது நியாயமா' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'எங்களுக்கே நீ ரூல்ஸ் சொல்லிக்கொடுக்கிறாயா... நீதான் மலம் அள்ள வேண்டும், இல்லையென்றால் உன் வேலை போய்விடும்' என்று மிரட்டுவார்கள. நானும் அமைதியாக அந்த வேலையை முடித்துக்கொடுப்பேன். இப்படியே பல மாதங்கள் சென்றுகொண்டிருந்தது. ஒருநாள் திடீரென எனக்குக் கடுமையான காய்ச்சல் வந்தது. மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது, ’மர்மக்காய்ச்சல் போல இருக்கிறது. என்னவென்றே கண்டுபிடிக்க முடியவில்லை, நீங்கள் பார்க்கும் தொழிலால்தான் இதுமாதிரியான நோய்கள் வருகின்றன. நான்கைந்து மாதம் வேலைக்குச் செல்லாமல் ஓய்வெடுத்தால் தானாகச் சரியாகிவிடும்’ என்று மருத்துவர்கள் சொன்னார்கள். அதனால், நான் மருத்துவ விடுப்பு எடுத்துவிட்டு ஆறு மாதம் வேலைக்குச் செல்லவில்லை. விடுப்பு முடிந்து வேலைக்குச் சேர்ந்தபோது, 'நீ இல்லாமல், அந்த இடமே சுத்தமாக இல்லை. ஒருநாளைக்கு நூறு பேர் முனிசிபாலிட்டிக்கு போன் போட்டு கத்துறாங்க... நீ, உடனே அங்கே போய் அதைச் சுத்தம் பண்ணு' என்றார்கள். 'இந்த வேலை செய்ததால்தான் எனக்கு மர்மக்காய்ச்சல் வந்தது. இனி, என்னால் அந்த வேலையைச் செய்ய முடியாது' என்று சொல்லி மறுத்துவிட்டேன். அதற்கு அவர்கள், 'உன் வேலையைப் பிடுங்கிக்கொண்டு உன்னை வீட்டுக்கு அனுப்பிவிடுவோம்' என்று என்னை மிரட்டி அந்தச் சாக்கடைக்குள் இறங்க வைத்தனர். இதுதொடர்பாகப் போடி காவல் நிலையத்தில் புகார் செய்தேன். நான் முன்பகையின் காரணமாகத்தான் புகார் செய்தேன் என்று சொல்லி காவல் ஆய்வாளர் சேகர் அந்தப் புகாரை மூடிவிட்டார். வேலைக்குத் திரும்பிய என்னை மீண்டும் மிரட்டினார்கள். சில சமூக ஆர்வலர்கள் உதவியுடன், நேரடியாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தேன். வழக்குத் தொடர்பாக விசாரணை செய்ய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டப்பட்டது. கடந்த நவம்பர் 24-ல் போடப்பட்ட உத்தரவு, இன்றுவரை கிடப்பில் கிடக்கிறது. இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. 'மனித மலத்தை மனிதனே அள்ளக்கூடாது' என்று சொல்லும் இதே அரசாங்கத்தில் இருப்பவர்கள்தான் மலத்தை அள்ளச்சொல்கிறார்கள். இது, எந்தவிதத்தில் நியாயம்? என்னால் கோர்ட், கேஸ்னு போக முடியாது. நாள் முழுக்கக் குப்பை அள்ளினால்தான் என் பிழைப்பு ஓடும். இன்று, என்னை மலத்தை அள்ளச்சொன்னவர்கள், நாளை இன்னொருவரை மிரட்டி அள்ளச்சொல்வார்கள். அதற்காகத்தான் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க வந்தேன்” என்றார் ஆதங்கத்தோடு.

இதுகுறித்து போடி நகராட்சி ஆணையாளர் சுவாமிநாதனிடம் பேசினோம். ''இந்த விஷயம் பற்றி எனக்கு ஏற்கெனவே தெரியும். சம்பந்தப்பட்ட தொழிலாளி விளம்பரத்துக்காக இப்படிச் செய்திருப்பர் என்று அனைவரும் சொல்கிறார்கள். விசாரணையின் அடிப்படையிலேயே உண்மை தெரியவரும். ஆகையால், இரண்டு தரப்பையும் விசாரிக்க இருக்கிறேன்'' என்றார்.

 

 

 

சட்டம் என்ன சொல்கிறது?

மனித மலத்தை மனிதனே அள்ளுவதைத் தடை செய்யும் சட்டம் 2013-ன்படி, அபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. முதன்முறையாக இந்தக் குற்றத்தைச் செய்பவர்களுக்கு ஓர் ஆண்டு சிறைத் தண்டனையும் அல்லது 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் அல்லது அபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். இந்தக் குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்தால், இரண்டாண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தில், மனிதக்கழிவுகளை மனிதனே அள்ளும் குற்றத்தைச் செய்யத்  தூண்டுபவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஐந்து லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்க சட்டம் வகை செய்கிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டு, சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் முதல் மூன்று மாதங்களுக்கு எந்த நீதிமன்றத்தாலும் ஜாமீன் வழங்க முடியாது. இவ்வளவு கடுமையானச் சட்டங்கள் இருந்தும் தமிழகத்தின் பல இடங்களில் மறைமுகமாக மனிதக்கழிவுகளை மனிதனே அள்ளும் அவல நிலை நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது. அதனை வெளிக்கொண்டுவரும் 'கக்கூஸ்' ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி போன்ற சமூகப் போராளிகள் நசுக்கப்பட்டுக்கொண்டேதான் இருப்பார்கள்.


டிரெண்டிங் @ விகடன்