பிசினஸ் மார்க்கெட்டிங்கில் ஜெயிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? | What all to be done in marketing for a successful business?

வெளியிடப்பட்ட நேரம்: 21:13 (31/07/2017)

கடைசி தொடர்பு:21:13 (31/07/2017)

பிசினஸ் மார்க்கெட்டிங்கில் ஜெயிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

ஒரு பிசினஸுக்கு மார்க்கெட்டிங், பிராண்டிங் ஆகியவை எந்த அளவுக்கு அவசியம் என்பதைச் சொல்லவேண்டியதில்லை. ஏர்டெல் விளம்பரத்தில் வரும் பெண் அடைந்த புகழும், வோடவோன் விளம்பரத்தில் வரும் பொம்மைகள் பெற்ற வரவேற்புமே இதற்குச் சான்று. இந்த இரண்டுக்கும் பின்னால் மிகப்பெரிய பிசினஸ் வெற்றி இருப்பதையும் மறந்துவிடாதீர்கள். 

பிசினஸ்

சில விளம்பரங்கள், சம்பந்தமில்லாத ஏதோ சொல்ல வருவதுபோலதான் இருக்கும். ஆனால், அந்த விளம்பரத்துக்குப் பின்னால் இருக்கும் பிசினஸ் போகப்போகத்தான் புரியும். இப்படி மார்க்கெட்டிங், பிராண்டிங் போன்றவற்றில் எவ்வளவோ உத்திகளும் சுவாரஸ்யங்களும் அடங்கியுள்ளன. அப்படிப்பட்ட மார்க்கெட்டிங்கை ஒரே நாளில் கற்றுக்கொள்ள முடியுமா என்ன? பிசினஸ் மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட்டுக்கு என எவ்வளவோ புத்தகங்கள் எழுதப்படுகின்றன; பல்வேறு பட்டப்படிப்புகளும் உள்ளன. அப்போதுகூட மார்க்கெட்டிங் வெற்றி குறித்த ரகசியம் பலருக்கும் வசப்படுவதில்லை. ஆனால், மார்க்கெட்டிங்கின் சில அடிப்படை விஷயங்களைப் புரிந்துகொண்டால், உங்கள் பிசினஸை ஓரளவாவது வளர்ச்சிப்போக்கில் கொண்டுசெல்லலாம். அடுத்தடுத்த வளர்ச்சிக்கான வழிகளையும் நீங்களே கண்டுபிடித்துக்கொள்ளலாம்.

ஒருகாலத்தில் நிறுவனங்கள் தங்களுக்கான உற்பத்தியில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தன. பிறகு, தொழில்நுட்ப வளர்ச்சிகளால் வாடிக்கையாளர்களுக்குப் பொருள்களைக் கொண்டு சேர்க்க உற்பத்தியைக் காட்டிலும் மார்க்கெட்டிங், பிராண்டிங் போன்றவற்றில் அதிகக் கவனம் செலுத்தவேண்டிய நிலை உருவானது. நுகர்வு அதிகரித்திருந்தாலும் போட்டியும் அதிகரித்ததால் மார்க்கெட்டிங் உத்திகள் மிகவும் அவசியமாக உள்ளன.  வாடிக்கையாளர்கள், நிறுவன தயாரிப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் உள்ளது. அது வாடிக்கையாளர்களைக் கவரும் மார்க்கெட்டிங் உத்திகளால் மட்டுமே முடியும். 

வாடிக்கையாளர்கள் என்பவர்கள், உங்களுடைய பொருள்களை வாங்குபவர்கள் மட்டுமல்ல; அவர்களும் உங்களுடைய மார்க்கெட்டிங் ஊழியர்களாக மாறவேண்டும். அதற்கேற்ப உங்கள் பொருளும் உங்களுடைய பிசினஸும் இருக்க வேண்டும். வாடிக்கையாளர்களின் மனநிலை, விருப்பம் மற்றும் உணர்வுகளை மையப்படுத்தி மார்க்கெட்டிங் உத்திகளை மேற்கொள்ள வேண்டும். 

மார்க்கெட்டிங்கில் ஆஃபர்கள், இலவசங்கள் ஆகியவற்றை, புத்திசாலித்தனமாகத் திட்டமிட வேண்டும். நீங்கள் கொடுக்கும் ஆஃபர்கள், இலவசங்கள் உங்கள் கையைக் கடிக்காமல் உங்களுக்கு கணிசமான லாபத்தைத் தரும் வகையில் இருக்க வேண்டும். லாபத்தை தியாகம் செய்யலாம். ஆனால், அதற்குப் பலனாக உங்களுடைய வாடிக்கையாளர் வட்டம் பெரிதாக வேண்டும். அப்போது மட்டுமே நீங்கள் செய்யும் தியாகத்துக்கு அர்த்தம் இருக்கும். 

பிசினஸ் செய்பவர்கள், எப்போதும் ஒன்றை மனதில் வைத்திருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள், உங்களை வாழவைப்பவர்கள். அவர்களை நீங்கள் நேசித்தே ஆகவேண்டும். ஏனெனில், நேசிப்பவர்களை மட்டுமே திருப்திப்படுத்த முயற்சிசெய்வோம். அதேபோல் போட்டியாளர்கள் உங்களுக்குக் கற்றுக்கொடுப்பவர்கள். போட்டி இல்லையென்றால், வெற்றி- தோல்வி என்பதையே அறிய முடியாது. எனவே, போட்டியாளர்களை மதிக்க வேண்டும். யாரையும் குறைவாக எடை போட்டுவிடக் கூடாது. 

வாடிக்கையாளர்கள் உங்களை எளிதில் அணுகும் வகையில் உங்கள் பிசினஸ் சிஸ்டத்தை உருவாக்குங்கள். சிஸ்டம் சரியில்லை எனச் சொல்ல வைத்துவிடாதீர்கள். வாடிக்கையாளர்கள் திருப்தியடைந்தால் அவர்கள் பத்து வாடிக்கையாளர்களை உங்களுக்குக் கொடுப்பார்கள். அதற்கு நீங்கள் என்ன தொழில் தொழில் செய்தாலும் அதை சேவை சம்பந்தப்பட்ட தொழிலாகக் கருதி செய்யுங்கள்.

மார்க்கெட்டிங் செய்யும்போது, சரியான இடமும் சரியான நபர்களும் அவசியம். நீங்கள் விற்பனை செய்யும் பொருள் யாருக்கானதோ அவர்களைச் சென்று சேரும் வகையில் மார்க்கெட்டிங் செய்ய வேண்டும். நியாயமான விலையில் தரமான பொருள்களையும் இன்முகத்துடனான சேவையையும் வழங்குங்கள். பிசினஸில் நீங்கள் நிச்சயம் வெற்றியடைவீர்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்