தமிழ்நாட்டின் நலனுக்காக மொய் விருந்து நடத்தும் அமெரிக்கத் தமிழர்கள்!

 

தமிழகத்துக்காக நிதி திரட்டும் மொய் விருந்து

 தமிழகத்தின்  சில மாவட்டங்களில் `மொய் விருந்து' வெகு பிரபலம். பணக்கஷ்டத்தில் உள்ள குடும்பத்தினர் மொய் விருந்து நடத்தி, பணம் திரட்டுவது வழக்கம். `சின்னக்கவுண்டர்' படத்தில் நடிகை சுகன்யா மொய் விருந்து நடத்துவதுபோல காட்சிகள் இடம் பெற்றிருக்கும். வழக்கமாக வைக்கும் மொய்யைவிட மொய் விருந்து நடத்தினால் உறவினர்கள், நண்பர்கள் கூடுதலாக மொய் வைப்பார்கள். அதேபோல, வறட்சியில் சிக்கிக்கிடக்கும் தமிழகத்துக்கு மொய் விருந்து நடத்தி, நிதி திரட்டியிருக்கிறார்கள் அமெரிக்கவாழ் தமிழர்கள். 

அண்ணா பல்கலைக்கழகத்தின் நெல்லை  மாவட்டக் கிளை, எய்ம்ஸ் இந்தியா அமைப்பு மற்றும் அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் இணைந்து இந்தப் பணியை முன்னெடுத்துள்ளன.கடந்த மே மாதத்தில் நியூஜெர்சி நகரில் விருந்து நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வாஷிங்டனில் ஜூலை 29-ம் தேதி  மொய் விருந்து நடைபெற்றது.  தமிழகத்தின் பாரம்பர்ய உணவு வகைகள், விருந்தில் பரிமாறப்பட்டன. விருந்து நிகழ்ச்சியில் இளைஞர்களும் யுவதிகளும் உற்சாகத்துடன் பங்கேற்றனர். அமெரிக்காவில் வசிக்கும் தமிழ் மக்கள் பலரும் குடும்பத்துடன் கலந்துகொண்டனர். தமிழ் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பாரம்பர்ய நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. 

 

அழிந்துவரும் பாரம்பர்ய விளையாட்டுகளான ஆடு புலி ஆட்டம், தாயம், கோலிக்குண்டு, பல்லாங்குழி, பாண்டி, உறியடி போன்றவற்றுக்கும் விழாக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். விளையாடத் தெரிந்தவர்கள் விளையாடி மகிழ்ந்தனர். விளையாடத் தெரியாதவர்கள் பார்த்து மகிழ்ந்தனர். பெரியவர்கள், இளைய தலைமுறையினருக்குத் தாய் நாட்டுப் பாரம்பர்ய விளையாட்டுகள் அறிமுகப்படுத்தி விளக்கிக் கூறினர். குழந்தைகள், ஊஞ்சல் ஆடிக் களித்தனர்.  நிகழ்வில், கிராமிய நடன நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.  குடும்ப விழாபோல அரங்கேறிய இந்த நிகழ்வுக்கு வந்தவர்கள், தமிழகத்தின் நல்வாழ்வுக்காக நிதியை அள்ளிக் கொடுத்தனர். 

திரண்ட நிதி எய்ம்ஸ் இந்திய அமைப்புக்கு வழங்கப்படுகிறது. அதன்வழியாக நெல்லை, கோவை, அரியலூர், கடலூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் தூர் வாறப்படவுள்ளன.  ``தமிழகம் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பது எங்களுக்கு வருத்தத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளுக்கு எங்களால் முடிந்த வரை ஆறுதலாக இருக்கவே விருந்து நடத்தி நிதி திரட்டியுள்ளோம்.  விவசாயத்தின் முதுகெலும்பான நீர்நிலைகள் முதலில் சீரமைக்கப்படும்'' என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார்.  அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில்  விருந்து நடத்தி தமிழகத்துக்காக நிதி திரட்ட முடிவுசெய்யப்பட்டுள்ளது.

 

சீரமைக்கப்படும் நீர்நிலைகளின் விவரம், எய்ம்ஸ் இந்தியா அமைப்பின் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே மருதூர் கீழ கால்வாய் செல்லும் பகுதியில் உள்ள நீர்நிலைகள், அரியலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி, தஞ்சை மாவட்டத்தில் விளாங்குடி நீர்நிலைகள் தூர் வாறப்படுகின்றன. மொத்த 100 ஏக்கர். பரப்பளவில் நீர்நிலைகள் தூர் வாறப்படும். இதனால் ஆறு கிராமங்கள் பயனடையும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!