வெளியிடப்பட்ட நேரம்: 01:27 (01/08/2017)

கடைசி தொடர்பு:01:27 (01/08/2017)

பேராசிரியர் ஜெயராமனுக்கு தி.மு.க துணை நிற்கும்: சிறையில் ஸ்டாலின் பேட்டி!

மு.க.ஸ்டாலின்

திருச்சி மத்தியச் சிறையில் மீத்தேன் திட்டத்துக்கு எதிராக போரடி சிறைசென்ற பேராசிரியர் ஜெயராமனை தி.மு.க. செயல் தலைவர் மு.க ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.

கதிரமங்கலம் போராட்டத்துக்கு ஆதரவு அளித்ததாக பேராசியர் ஜெயராமன் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு ஜூன் 30-ம் தேதி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். ஒரு மாதமாகச் சிறையில் இருக்கும் அவரை பல்வேறு அரசியல் தலைவர்கள், நேரில் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று பேராசிரியர் ஜெயராமனை திருச்சி மத்தியச் சிறையில் தி.மு.க செயல் தலைவர் மு.க ஸ்டாலின் சந்தித்தார்.

உடல்நலக்குறைவு காரணமாகக் கடந்த 10 நாள்களுக்கு முன்பு பேராசிரியர் ஜெயராமனின் தந்தை தங்கவேலு உயிரிழந்தார். இதையடுத்து, தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க மூன்று நாள்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி அளித்தது. அவருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன் முடிவடைந்தையடுத்து, ஜெயராமன் மீண்டும் திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ‘பேராசிரியரின் தகப்பனார் மறைந்ததற்காக, ஜாமீன் கேட்டபோது, அவருக்கு பரோல் கொடுக்கக்கூடாது என அரசும் காவல்துறையும் வாதாடியுள்ளது. அதையும் மீறி உயர்நீதிமன்றம் 3 நாள்கள் பரோல் கொடுத்தது. தற்போது சிறையில் இருக்கும் அவரைப் பார்த்துவிட்டு, தொடர்ந்து உங்கள் உணர்வுக்கும் போராட்டத்துக்கும் தி.மு.க துணைநிற்கும் எனக் கூறிவிட்டு வந்தோம்’ என்றார்.

மேலும், ‘தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்றால், குண்டர் சட்டம் பாயும் என சென்னை போலீஸ் எச்சரித்துள்ளதே’ என்கிற கேள்விக்குப் பதிலளித்த ஸ்டாலின், ’குட்கா விவகாரத்தைப் பொறுத்தவரையில், இந்த விவகாரத்தில் தொடர்புடைய அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் டி.ஜி.பி.ராஜேந்திரன், சென்னை முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்டோருக்கு எதிராகத்தான் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் போடவேண்டும். அப்படியானால், இதில் சம்மந்தப்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கரைதான் முதலில் கைதுசெய்ய வேண்டும். அமைச்சர் விஜய்பாஸ்கர் நீட் தேர்வு தொடர்பாக டெல்லி போய் வருவதாகத் தெரியவில்லை. அவருக்கு நெருக்கடியைத் தந்து கொண்டிருக்கும் குட்கா, வருமானவரித்துறை உள்ளிட்ட பிரச்னைகளுக்காவே அடிக்கடி டெல்லி போய் வருகிறார் என்றே தோன்றுகிறது” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க