வெளியிடப்பட்ட நேரம்: 13:12 (01/08/2017)

கடைசி தொடர்பு:13:12 (01/08/2017)

ஜெயலலிதாவுக்கே சிம்மசொப்பனம்... எஸ்மா, டெஸ்மாவை எதிர்த்த முத்துசுந்தரத்தின் கதை!

அரசு ஊழியர் ஆர். முத்துசுந்தரம்

ஒரே கையெழுத்தில் ஒன்றரை இலட்சம் அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பினார் என வரவேற்பும் எதிர்ப்புமாக பெயர் வாங்கியவர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஊழல் வழக்கில் குற்றவாளியாகத் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவின் பெரிதாகப் பேசப்பட்ட ஆட்சிக்காலத்தில், அரசு ஊழியர்களின் குரலாகச் செயல்பட்டவர்களில் ஒருவரான ஆர்.எம்.எஸ் எனப்படும் ஆர். முத்துசுந்தரம்(65) கடந்த 29ஆம் தேதி காலமானார். அவருக்கு மனைவி, மகள், மகன் ஆகியோர் உள்ளனர். முத்துசுந்தரத்தின் விருப்பப்படி அவரது உடலானது சென்னை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது. 

மதுரை மாவட்டம் சமயநல்லூரைச் சேர்ந்த முத்துசுந்தரம், கல்வித்துறைப் பணிக்காக ஈரோடு மாவட்டத்திற்குச் சென்றார். வட்டார அளவில் அரசு ஊழியர் சங்கத்தில் தீவிரமாகச் செயல்பட்ட அவர், படிப்படியாக உயர்ந்து, கல்வித் துறை சங்கத்தில் மட்டுமல்லாமல், அதையும் உள்ளடக்கிய அனைத்துத் துறைளின் பொதுவான சங்கத்துக்குச் செயலாளர் ஆனார். பின்னர் அதே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்துக்குப் பொதுச்செயலாளராகவும் முத்துசுந்தரம் ஆனார். அந்தக் காலகட்டத்தில்தான், ஒரே கையெழுத்தில் ஒன்றரை இலட்சம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தார், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா. அதை எதிர்த்து சட்டபூர்வமாகவும் போராட்டவழிகளின் மூலமாகவும் எதிர்த்துநின்றவர், முத்துசுந்தரம். குறிப்பாக, எஸ்மா- டெஸ்மா நடவடிக்கையை எதிர்த்து கடுமையாகப் போராடி வெற்றிபெற்றது வரலாற்றுப் பதிவாகும். 

ஜெயலலிதா ஆட்சியின் அந்தக் கடும் நடவடிக்கையால் தலைமைச்செயலக ஊழியர்களில் பெரும்பாலனவர்களும் பாதிக்கப்பட்டனர். அப்போது கோட்டை ஊழியர்கள் சங்கத்திலும் முத்துசுந்தரத்துடன் அரசு ஊழியர் சங்கத்தில் தலைவராகவும் பணியாற்றிய என்.எல்.சிறீதரன், இப்போது ஓய்வூதியர் சங்கத்தின் தலைவராக இருக்கிறார். அவரின் நினைவுக்குறிப்புகள்:

அரசு ஊழியர் என்.எல்.சிறீதரன்மறக்கமுடியாத போராட்டக்காலம் அது. 2003 ஜூன் 30ஆம் தேதி நள்ளிரவு. அரசு ஊழியர்களின் போராட்டத்தைச் சமாளிக்கமுடியாத ஜெயலலிதா ஆட்சி, சங்கத் தலைவர்கள் உட்பட எல்லா மாவட்டங்களிலும் அரசுப் பணியாளர்களைக் கைதுசெய்தது. ஒரு இலட்சத்து 42ஆயிரம் பேரை ஒரேயடியாக பணிநீக்கம் செய்து, ஜெயலலிதா உத்தரவிட்டார். 12..13 நாள்கள் அரசு ஊழியர்களுக்கு மிகக் கடுமையான காலம்...! அப்போது அரசு ஊழியர் சங்கத்துக்கு நான் தலைவர், முத்துசுந்தரம் பொதுச்செயலாளர். தலைமறைவாக இருந்தே நாங்கள் வருவதற்குள் எல்லா மாவட்டங்களிலும் உள்ள தோழர்களுக்குத் தகவலைத் தெரிவித்து, உரிய முடிவுகளை முன்வைத்து, நெருக்கடிநிலையிலும் தீவிரமாகச் செயல்பட்டவர். பணிநீக்கம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் டி.கே.ரங்கராஜன் மூலமாக வழக்குப்போட வைத்தவர். அதன் தீர்ப்புப்படி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மூவரைக் கொண்ட அமர்வு, 999 அரசு ஊழியர்களை விசாரித்தது. எஸ்மா, டெஸ்மா வழக்கு பிரச்னை முடிய ஆறேழு மாதங்கள் ஆகிவிட்டன. சில சங்கங்கள் அவற்றின் உறுப்பினர்களுக்கான பாதிப்பைக் கண்டுகொள்ளவில்லை. அந்தச் சூழலில் கேரளம், மேற்குவங்கம் என வெளிமாநில அரசு ஊழியர் சங்கங்களுக்கும் பிரச்னை எடுத்துச்சென்று ரூ.2 கோடி அளவுக்கு வசூலித்தோம். பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு உதவியாக வழங்கப்பட்டது. அதில் முத்துசுந்தரத்தின் பங்கு முக்கியமானது. ஓய்வுக்குப் பிறகும் அவர் அகில இந்திய அரசு ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளராகப் பணியாற்றினார். அதற்குத் தேவையாக இந்தியைக் கற்றுக்கொண்டு வட மாநிலங்களில் இந்தியிலேயே கூட்டங்களில் பேசும் அளவுக்கு மாறினார். அவருடைய கணீர்க்குரல் இன்றும் காதில் ஒலித்தபடியே இருக்கிறது” என்றார் சிறீதரன். 

அதிமுக ஆட்சியில் பணியாளர் நலத்துறை அமைச்சராக பலரும் வந்துபோன நிலையில், அந்தத் துறையின் செயலாளர்களுடன்தான் பெரும்பாலும் அரசு ஊழியர் சங்கத் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தவேண்டிய நிலை இருந்தது. கடந்த ஆட்சியில் அதுவும் இல்லாமல் போனது என்பது தனிக்கதை. அந்தப் பேச்சுகளில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் தன் கேள்விகளால் திக்குமுக்காட வைப்பதில் முத்துசுந்தரம், கெட்டிக்காரர் எனப் பெயர்பெற்றவர். அவரைவிட பேச்சுவார்த்தைக்கு வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தயாரிப்பாக வரவேண்டியிருந்தது என்பதை பல அதிகாரிகளும் ஒப்புக்கொள்கிறார்கள். 

திமுக ஆட்சியின்போது ஆற்காடு வீராசாமி போன்ற அமைச்சர்களிடமும் அரசு ஊழியர்களின் தரப்பை எடுத்துவைப்பதில் முத்துசுந்தரத்துக்கு தனி இடம் உண்டு என்பதை இரங்கல் நிகழ்வின்போது பலரும் நினைவுகூர்ந்தனர். 


டிரெண்டிங் @ விகடன்