மாணவர்களுக்கும் நிலவேம்புக் கஷாயம் ! 'டெங்கு'வை கட்டுப்படுத்த தீவிரம்

..
டெங்கு போல் கொசுக்களை உருவாக்கக் காரணம் இதுதான்

 போலீஸாருக்கு  நிலவேம்புக் கஷாயம் வழங்கப்பட்டது போல அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. இதுபோல அனைத்து அரசு அலுவலகங்களிலும் நிலவேம்புக் கஷாயம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பரவிக்கொண்டிருக்கும்  ஏதோ ஒரு காய்ச்சலை,  'டெங்கு' காய்ச்சல்தான் என்று ஒப்புக்கொள்ளும் சூழ்நிலைக்கு தமிழக  சுகாதாரத்துறை வந்துள்ளது. 'சுகாதாரத்துறை தமிழகத்தில்  சீரழிந்துகிடக்கிறது' என்று எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் சுட்டிக்காட்டும் போதெல்லாம், "வீண் வதந்தி பரப்ப வேண்டாம், அவதூறு வழக்குப் பாயும்" என்று எச்சரிப்பதை மட்டுமே ஆட்சியாளர்கள் கடைபிடித்தனர். அண்டை மாநிலமான கேரளாவில் 'டெங்கு' பாதிப்பால் மக்கள்  அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் அங்கே இயல்பு நிலை திரும்பவில்லை. மக்களுக்கு வந்திருப்பது 'டெங்கு' காய்ச்சல்தான் என்பதை ஆரம்பத்திலேயே ஒப்புக்கொண்டுவிட்ட கேரள அரசு, அதற்கேற்ற மருத்துவ சிகிச்சைகளை வேகமாகவே தொடங்கிவிட்டது.தமிழகத்தில் 'டெங்கு'  காய்ச்சல் இல்லை என்று திரும்பத் திரும்ப அரசு சொல்லி வந்த வேளையில்,  சென்னையில் 4 போலீஸாரும், பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளும் 'டெங்கு' காய்ச்சலுக்கான சிகிச்சைபெற்றுவருகிறார்கள். சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர் அரசு மருத்துவமனைகளில், காய்ச்சல் பிரிவில் மட்டுமே ஆயிரக் கணக்கில் பொதுமக்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் ஏற்படத் தொடங்கியுள்ளது.  


                                                   டெங்கு பாதிப்பில் அனுமதிக்கப் பட்டவர்கள்

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில்  30 பேர், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 25 பேர், அரசு ஸ்டான்லி மருத்துவமனை குழந்தைகள் நலப் பிரிவில் 20 குழந்தைகள் என காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், பலருக்கு டெங்கு உறுதிசெய்யப்பட்டிருகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுராந்தகம் அரசு மருத்துவமனைகளில் இருவருக்கு  டெங்குவும், ஏழு பேருக்கு பெயர் தெரியாத மர்மக் காய்ச்சலும் இருக்கிறதாம். சென்னையைப் பொறுத்தவரை, ஆயுதப்படை காவலர்கள் பார்த்திபன், யோகராஜ், விபசார தடுப்புப்பிரிவு முதல்நிலைக் காவலர் ஷிபு, பட்டாலியன் காவலர் சக்திவேல் ஆகியோர், தொடர் காய்ச்சலால், அடுத்தடுத்து  அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். எஞ்சியிருக்கும் போலீஸாரை, 'டெங்கு' தாக்காமல் இருக்க, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், போலீஸாருக்கு 'நிலவேம்புக் கஷாயம்' கொடுக்கும் திட்டத்தைத் தொடங்கிவைத்திருக்கிறார். போலீஸ் கமிஷனரைப் போல வங்கி, மாநகராட்சி, மின்வாரியம், குடிநீர்வாரியம் உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை ஊழியர்களுக்கும் 'நிலவேம்புக் கஷாயம்' கொடுக்க  சுகாதாரத்துறை முடிவுக்கு வந்துள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'அரசு மாநகராட்சிப் பள்ளிகளுக்கும் இந்த நிலவேம்புக் கஷாயம் கொடுத்து, பள்ளிப் பிள்ளைகளைக் காக்க வேண்டும்' என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!