வெளியிடப்பட்ட நேரம்: 08:31 (01/08/2017)

கடைசி தொடர்பு:08:31 (01/08/2017)

ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் குப்பை மயம்... காய்ச்சல் பீதியில் ஓட்டம் பிடிக்கும் பொதுமக்கள் !


             ஆர்.டி.ஓ. அலுவலகம்

  ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் குப்பைகள் சூழ, நாற்றத்தில் கிடக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  ஏற்கெனவே டெங்குகாய்ச்சல் பீதியில் கிடக்கும் பொதுமக்கள், இதுபோன்ற  அரசு அலுவலகங்களுக்கு வருவதும் இதனால் குறைந்துள்ளது. ஏற்கெனவே, ஆர்.டி.ஓ. (வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள்) அலுவலகங்கள், ஊழியர் பற்றாக்குறையால்  நஷ்டத்தில் இயங்குகிறது என்ற குற்றச்சாட்டில் சிக்கியுள்ள நிலையில், சுகாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.

                குப்பைகள் சூழ அயன்புரம் ஆர்.டி.ஓ. அலுவலகம்

தமிழகம் முழுவதும் 139 ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் இயங்கிவருகின்றன. வாகனப் பதிவுச் சான்றிதழ்கள், ஓட்டுனர் உரிம அடையாள அட்டை, பயனாளிகளின் பெயர், முகவரி, வாகனப் பதிவு எண் போன்றவற்றைக் கையால் எழுதி 'காப்பி' எடுத்தது போய், அனைத்தும் 'டேட்டா'வாக  கணினியில் ஏற்றும் அளவுக்கு ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் நவீனமயமாகி உள்ளதாகச் சொல்லப்படுகிறது. நிர்வாகம் நவீனமாகிவிட்டாலும், அந்த அலுவலகங்கள் இன்னும் நவீனமாகவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். 


             அயன்புரம் ஆர்.டி.ஓ. அலுவலக கழிப்பறை

பல ஆர்.டி.ஓ. அலுவலகங்களைச் சுற்றிலும் மழை, வெயில் என்று எல்லா காலகட்டங்களிலும் நிரந்தரமாக குப்பைகள் கிடக்கின்றன. குப்பைகளுக்கு நடுவே காலி பாட்டில்கள், பல துண்டுகளாய் உடைந்த கழிப்பறைகள் இருக்கின்றன. பாதுகாப்பற்ற கோப்புக் கருவூலம்தான் உள்ளே இருக்கிறது என்பது போல ஆர்.டி.ஓ. கட்டடங்களின் நிலையும் பரிதாபமாக இருக்கிறது. இத்தனை சாட்சியங்களுடன் உள்ள சென்னை புளியந்தோப்பு, தண்டையார்பேட்டை மற்றும் அயன்புரம் ஆர்.டி.ஓ. அலுவலகங்களைச் சுற்றிப் பார்த்தோம். ஏதோ ஒரு இனம் புரியாத பீதியுடன்தான் பொதுமக்கள் அங்கே வந்து போகிறார்கள் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. அயன்புரம் ஆர்.டி.ஓ. அலுவலகம் இதில் முதல் மார்க் வாங்கிவிடும் போலிருக்கிறது...