வெளியிடப்பட்ட நேரம்: 09:06 (01/08/2017)

கடைசி தொடர்பு:09:06 (01/08/2017)

ஆட்டோ டயரை மட்டும் குறிவைக்கும் கும்பல்! – தேனியில் வினோதம்.!

தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் டயர்கள் இல்லாமல் ஒரு ஆட்டோ நின்றுகொண்டிருந்தது. பார்க்கப் புதிதாக இருந்த ஆட்டோவில் மூன்று டயர்களுமே இல்லை. பஞ்சர் பார்க்க எடுத்துச்சென்றிருந்தால் கூட மூன்று டயர்களையுமா கழட்டியிருப்பார்கள்? அவ்வளவு மோசமாகவா தேனி மாவட்டச் சாலைகள் இருக்கின்றன? சந்தேகமடைந்த நாம், அந்த ஆட்டோக்காரரிடம் விவரம் கேட்டோம்.

ஆட்டோ டயர் திருட்டு

``தேனியில் மட்டும் இது நாலாவது சம்பவம். பெரியகுளம், போடி, கம்பம், ஆண்டிபட்டி என எல்லா இடத்திலும் டயர் திருட்டு நடக்கிறது. இரவில் வீட்டு வாசலில் ஆட்டோவை நிறுத்திவிட்டு காலையில் வந்து பார்த்தால் ஆட்டோவில் டயர்கள் மட்டும் இருக்காது. தேனி மாவட்ட ஆட்டோக்காரர்கள் அனைவரும் பயத்தோடுதான் இரவில் ஆட்டோக்களை நிறுத்திவிட்டு தூங்கச்செல்கிறார்கள். இந்த சம்பவத்தால் சிலர் இரவில் ஆட்டோவிலேயே தூங்குகிறார்கள். டயர் திருடர்களின் தொல்லை தேனியில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. காவல்துறை உடனே டயர் திருடர்களைக் கண்டுபிடிக்க வேண்டும்`` என்றார். இதுதொடர்பாகக் காவல்துறை தரப்பிடம் கேட்டோம். ``டயர் தானே… விடுங்கள்..!`` என்றனர். டயர் இருந்தால்தானே வண்டி ஓடும்.!