Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கடந்த 20 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தலே நடக்காத கிராமம்!

ஊராட்சி

''ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போதும் ஊர்ல இருக்குற எல்லாரும் ஒண்ணாக்கூடிக் கலந்துபேசி ஓர் ஆளை நிப்பாட்டுவோம்... அவர்தான் பஞ்சாயத்துத் தலைவரு. அதை மீறி வேற யாரும் மனுத்தாக்கல் பண்ணமாட்டாங்க... இந்தக் கட்டுப்பாட்டாலதான் இருபது வருஷமா எங்க கிராமம் வளர்ச்சியை நோக்கிச் செல்லுது'' என அரியலூர் மாவட்டம் மேலணிக்குழி கிராமத்தைப் பற்றிப் பெருமைபொங்கச் சொல்கிறார் ஒரு பெரியவர். அவர் சொல்லும் பெருமையை அறிய நாமும் அந்தக் கிராமத்துக்குப் பயணித்தோம். 

''தம்பி... எங்க ஊருக்குனு ஒரு பழக்கம் இருக்குப்பா. இங்க, ஊராட்சி மன்றத் தேர்தல் எல்லாம் இருபது வருஷமா நடக்குறதே இல்லை'' என்ற பெரியவர் ஒருவர் சொன்னதைக் கேட்டு அப்படியே ஆச்சர்யமடைந்தோம். தொடர்ந்து அவர், ''இந்த ஊர் ஒரு சமத்துவபுரம் மாதிரி. இங்க எல்லாச் சாதியிலேயும் ஆளுங்க இருக்காங்க. ஊராட்சி மன்றத் தேர்தல் தலைவர் போட்டினு வந்துட்டா எங்களுக்குள்ள இருக்குற ஒற்றுமையெல்லாம் சாதிங்கிற ஒரு சின்ன விஷயத்துல சிதறிப் போய்டுமோ என்ற பயத்துலதான் நாங்க தேர்தலே வேணாம்னு முடிவுபண்ணிட்டோம். ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போதும் ஊர்ல இருக்குற எல்லாரும் ஒண்ணாக்கூடிக் கலந்துபேசி ஓர் ஆளை நிப்பாட்டுவோம்... அவ்வளவுதான். அதை மீறி வேற யாரும் மனுத்தாக்கல் பண்ணமாட்டாங்க. இதெல்லாம் எங்களுக்குள்ள இருக்குற ஒரு கட்டுப்பாடு. இப்படி ஒவ்வொரு முறையும் ஓர் ஆளை ஊரே சேர்ந்து தேர்ந்தெடுக்கும். அப்படித் தேர்ந்தெடுக்கப்படும் ஆளு, ஊருக்காகத் தன்னால் எவ்வளவு முடியுமே அவ்வளவு நன்மை செய்வாங்க. இதனால யாரையும் யாரும் குறைசொல்ல முடியாது" என்றவரின் கண்களில் தெரிந்த ஆனந்தக் களிப்புக்குப் பிறகு நாம்... அவரிடம், ''இப்படி நீங்க தேர்ந்தெடுத்த தலைவருங்க என்னவெல்லாம் ஊருக்குச் செய்திருக்காங்க'' என்று கேட்டோம். ''ஊருக்காக அவுங்க செய்யாத விஷயமே இல்லை'' என்றவர், அவர்கள் செய்த பட்டியலை வாசிக்க ஆரம்பித்தார். 

''சாலை போடுறது... மின்விளக்கு அமைக்குறது... குடிநீர் வசதி ஏற்படுத்தித் தருவது... இப்படிக் கிராமத்தோட அத்தியாவசியத் தேவை எதுலேயும் அவுங்க குறைவெச்சதே இல்லை. எவ்வளவு வறட்சி வந்தாலும், எங்க ஊருக்கு மட்டும் எப்பவுமே தண்ணிப் பஞ்சம் வந்ததே இல்லை. அரசோட திட்டங்கள் எதுவா இருந்தாலும் எங்க ஊருக்குத்தான் முதல்ல வரும். அரசியல்னா சம்பாதிக்குறது மட்டும்தான் குறிக்கோள்னு நினைச்சுகிட்டு இருக்குற அரசியல்வாதிங்களுக்கு மத்தியில முழுக்கமுழுக்க வெறும் சேவையாத்தான் நாங்க தேர்ந்தெடுத்த எல்லா தலைவர்களுமே செஞ்சுகிட்டு இருக்காங்க. அரியலூர் மாவட்டத்துல இருக்குற 201 பஞ்சாயத்துல, சிறந்த பஞ்சாயத்து எங்களோடுதானு நாங்க விருது எல்லாம் வாங்கியிருக்கோம்'' என்றவரிடம் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடுகிறது.  

''நீங்களா தேர்ந்தெடுக்கிற தலைவரால ஊருக்குள்ள சண்டையே வந்தது இல்லையா... இதனால, திறமையும் ஆர்வமும் இருக்குற மத்தவங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுறதா நினைக்க மாட்டாங்களா?'' என்று அதிரடியாக ஒரு கேள்வியைக் கேட்டோம். அதற்கு அவர், ''சண்டையா.... சண்டையே வரக்கூடாதுனுதான் நாங்க தேர்தலயே வேணாம்னு ஒதுக்கிவெச்சிருக்கோம். இங்க பதவி ஆசை பிடித்தவங்கனு யாருமே இல்லை. 'நான் இந்தத் தேர்தல்ல நிக்குறே'னு யாராச்சும் ஆர்வமா முன்னாடி வந்தாங்கனா... அவங்களுக்குத்தான் முதல்ல வழிவிடுவோம். அதுதான் எங்களோட பழக்கம். இதுல, போட்டியோ... பொறாமையோ... திறமை மறைக்கப்படுறதாகவோ யாருமே நினைச்சது இல்லை. இந்தமுறை இல்லைனா, அடுத்தமுறை இருந்துக்கலாம்னு நினைக்குற நல்ல மனசு எல்லார்கிட்டேயும் இருக்கு. எல்லாமே ஒரு புரிதல்தான்'' என்று சொல்வதிலேயே அவருடைய முழு சந்தோஷமும் அடங்கியிருப்பதைக் காணமுடிகிறது. 

ஊராட்சி

''இதுவரை இந்த ஊராட்சியில நடந்த ஆக்கபூர்வமான விஷயங்கள் எவை'' என்று அவரிடம் கேட்டதற்கு, ''நிறைய இருக்கு தம்பி'' என்றவர், தொடர்ந்து... ''இங்க கழிவறை இல்லாத வீடுகளே இல்லை. எல்லார் வீட்லேயும் கழிப்பறையும் கரன்டும் கட்டாயமா இருக்கு. அப்புறம், சுத்தம். அதனாலதான் அரியலூர்லயே சுத்தமான ஊராட்சினு பிரதமர் கையால எங்க ஊருக்கு அவார்டு கிடைச்சது. ஊர்ல இருக்குற எல்லாரும் தங்களோட வீடு மாதிரிதான் அனைத்து இடத்தையும் பாத்துப்பாங்க. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இங்க இருக்குற எல்லா மக்களுக்கும் கிடைக்குற மாதிரி வழி பண்ணியிருக்கோம். இங்க பள்ளிக்கூடம், பேருக்கு மட்டும்தான் அரசாங்கம் நடத்துது. மத்தபடி, ஊர்ல இருக்குற மக்கள்தான் எல்லாமே. சுற்றுவட்டாரத்துலேயே எங்க பள்ளிக்கூடம்தான் பெண் பிள்ளைகளுக்கு மிகவும் பாதுகாப்பானதா இருக்குனு சுத்தியிருக்கிற ஊர்ல இருந்தெல்லாம் பிள்ளைங்க படிக்க வர்றாங்க'' என்றார் மகிழ்ச்சிப் பொங்க.

''விவசாயத்துக்காக ஏதாவது செய்ததுண்டா'' என்று வினவினோம். ''எங்க கூட்டுறவுச் சங்கத்து மூலமா இங்க இருக்குற விவசாயிங்க எல்லாம், ஒண்ணுசேர்ந்து மானிய விலையில விவசாயக் கருவிகளை வாங்கி குறைஞ்ச பணத்துல வாடகைக்கு விடுறாங்க. தமிழ்நாட்டுலேயே இங்க மட்டும்தான் இப்படி நடக்குது'' என்று பெருமைபொங்க சொல்லும் அவரிடம், ''உள்ளாட்சி மன்றத் தேர்தல் இன்னும் நடக்காமல் தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறதே'' என்று வினவினோம். ''இந்த அரசாங்கம், ஏன் இப்படிச் செய்றாங்கனு தெரியலை. இதனால எங்களுக்கு நிச்சயம் நஷ்டம்தான். ஊருக்கு. வர்ற ஆண்டுல, தேர்ந்தெடுக்கப்பட இருக்குற தலைவரு சூரிய ஆற்றல் மூலமா மின்சாரம் எடுக்குற முறையை ஊருக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்தி... அதை, ஊர்ல செயல்படுத்தணும். அதுக்காகத் தேர்தல் ஆணையம், சீக்கிரமா தேர்தல் தேதியை அறிவிக்கணும்'' என்றவரிடம், ''அரசாங்கத்திடம் இருந்து முறையாக எல்லா உதவிகளும் கிடைக்குதா... அப்படி கிடைக்காதபட்சத்தில் என்ன செய்வீங்க'' என்றோம். ''நாங்க எல்லா சமயத்திலும் அரசாங்கத்தையே எதிர்பார்க்குறதில்லை. அரசாங்கத்திடமிருந்து உதவி கிடைக்கலைனு சொல்லலை. ஆனா, அப்படிக் கிடைக்கலைனா நாங்க அப்படியே சோர்ந்து போயிடுறதும் இல்லை. ஊருக்குத் தேவையான விஷயத்தை... நாங்களே பொதுவா வசூல் செய்து நிறைவேத்தியிருக்கோம்'' என்றவரிடம், ''உங்கள் கிராமத்துக்கு என்ன மாதிரியான விருதுகள் கிடைத்துள்ளன'' என்று வினவினோம். ''தமிழ்நாடு அரசு தூய்மை கிராம இயக்க விருது, மத்திய அரசின் நிர்மல் புரோஷ்கர் மற்றும் பஞ்சாயத்து ராஜ்ஜியத் துறையின் சிறந்த நிர்வாகத்துக்கான விருது, தூய்மை பாரத இயக்கம் சார்பாகத் தூய்மையான ஊராட்சி விருது, சிறந்த ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான விருதுகள் எனப் பலவற்றைப் பெற்றிருக்கிறோம்'' என்றவரிடம், இறுதியாக... ''உங்கள் ஊரின் பலம் எது'' என்று கேட்டோம். ''எல்லாரும் எப்பவும் ஒண்ணா இருக்கோம்... இருப்போம். அதுதான் எங்களது பலம்'' என்றார் நம்பிக்கையுடன்.

ஒரு கிராமத்து வளர்ச்சியில், நாட்டு முன்னேற்றமும் அடங்கியிருக்கிறது என்பதை அந்தக் கிராமமும் நமக்கு அடையாளம் காட்டியது அந்தப் பெரியவரின் துணையுடன்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement