வெளியிடப்பட்ட நேரம்: 12:35 (01/08/2017)

கடைசி தொடர்பு:12:44 (01/08/2017)

குற்றாலம் 'சாரல் விழா'வில் தொடரும் குழப்பங்கள்!

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில், சீசன் களை இழந்த நிலையிலும் சாரல் விழா நடைபெற்றுவருகிறது. ஏற்கெனவே, படகுப் போட்டி ரத்துசெய்யப்பட்ட நிலையில், ஓவியப் போட்டிகளை நடத்துவதிலும் குழப்பம் ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.

குற்றாலத்தில் ஜூன் மாதம் தொடங்கிய சீசன், ஓரிரு வாரங்களிலேயே களையிழந்துவிட்டது. மெயின் அருவி, ஐந்தருவியைத் தவிர பிற அருவிகளில் நீர் வரத்து நின்றுவிட்டது. மெயின் அருவி மற்றும் ஐந்தருவியிலும் குறைவான தண்ணீரே வந்துகொண்டிருக்கிறது. குற்றாலத்தில், தமிழக அரசு சார்பாக வருடந்தோறும் நடத்தப்படும் சாரல் திருவிழாவை சற்று தாமதமாக நடத்தியிருந்தால், ஒருவேளை மழைபெய்ய வாய்ப்பு இருந்திருக்கலாம். ஆனால், தற்போது வெயில் வாட்டும் நிலையில், சாரல் விழா நடத்தப்படுவதால், சொற்ப எண்ணிக்கையிலேயே சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். 

ஓவியப் போட்டி

இதற்கிடையே, படகுக் குழாம் அமைந்துள்ள வெண்ணமடைக் குளத்தில் தண்ணீர் இல்லாததால், படகுப் போட்டி ரத்துசெய்யப்பட்டது.  முறையான அறிவிப்பு இல்லாததால், போட்டியில் பங்கேற்க வந்த பயணிகள் ஏமாற்றமடைந்து திரும்பிச்சென்றனர். இந்த நிலையில், 31-ம் தேதி சுற்றுச்சூழல் பாதுகாப்புகுறித்த ஓவியப்போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

குற்றாலம் பராசக்தி கல்லூரியில், காலை 10 மணிக்கு அறிவிக்கப்பட்ட இந்தப் போட்டிகுறித்து தென்காசி மற்றும் சுற்றுப்புறக் கல்வி நிறுவனங்களுக்கு முறைப்படி அறிவிக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால், ஒரு சில பள்ளிகளிலிருந்து மாணவர்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக, இந்தப் போட்டி இரண்டு மணிநேரம் தாமதமாகத் தொடங்கியது. இதனால் போட்டியில் பங்கேற்க  வந்த மாணவர்கள், நீண்ட நேரம் காத்திருக்கவேண்டிய சிரமத்துக்குள்ளாகினர். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு, மாலையில் நடந்த விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர், கிராமியக் கலை நிகழ்ச்சிகள், பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பரிசளிப்பு

இந்த நிலையில், சாரல் விழாவின் 6-ம் நாளான இன்று, கோலப்போட்டியும் கொழுகொழு குழந்தைகள் போட்டியும் நடக்க உள்ளது. இதில் வெற்றிபெறுபவர்களுக்கு, மாலையில் நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. அதைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக, மாற்றுத் திறனாளிகள் வழங்கும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.