வெளியிடப்பட்ட நேரம்: 12:24 (01/08/2017)

கடைசி தொடர்பு:12:24 (01/08/2017)

நான்கு நாள் பொறுத்திருந்து பாருங்கள்... சஸ்பென்ஸ் வைக்கும் தினகரன்!

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில், டி.டி.வி.தினகரன் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அந்நியச் செலாவணி மோசடி வழக்கில், தன்மீதான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தினகரன் தெரிவித்துள்ளார்.

ttv dinakaran
 

வழக்கை விசாரித்த எழும்பூர் பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்றம், தினகரன் மீது மேலும் சில புதிதாகக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தது. விசாரணை, 3 -ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தினகரனிடம் 3-ம் தேதி குறுக்கு விசாரணை  நடைபெறும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. 

வழக்கு விசாரணை முடிந்ததும் எழும்பூரில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தினகரன், ’நீதியின்மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நான் குற்றமற்றவன்; நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன். நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறுவதற்காக, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். பொதுமக்களைச் சந்தித்துப் பேச உள்ளேன். கட்சியின் வளர்ச்சிக்காக அயராது உழைப்பேன்’ என்றார்.

அ.தி.மு.க இணைப்பு தொடர்பாக இரு அணிகளுக்கும் 60 நாள் கெடு விதித்திருந்தார் தினகரன். அவர் விதித்த கெடு, வரும் 4-ம் தேதியுடன் முடிகிறது. இதுகுறித்து செய்தியாளர்கள் தினகரனிடம் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்த தினகரன், ‘இரண்டு அணிகளும் சுமுகமான முடிவு எடுக்கவில்லை. நான் என்ன செய்யப்போகிறேன் என்பதை வரும் 4-ம் தேதி வரை பொறுந்திருந்து பாருங்கள்.  நான் எதற்காக கால அவகாசம் கொடுத்தேனோ, அதில் எள்ளளவும் முன்னேற்றம் இல்லை. அ.தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளராக என் கடமையைச் செய்யவேண்டி உள்ளது. பொதுச் செயலாளர் இப்போது செயல்பட முடியாத சூழலில் இருப்பதால், கட்சியை வழிநடத்த வேண்டிய கடமை எனக்கு உள்ளது’ என்றார். 

கமல்குறித்து  செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த தினகரன், ’நடிகர் கமல் ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டும். அமைச்சர்கள், கமல் வைக்கும் குற்றச்சாட்டுகளை அரசியல்ரீதியாக அணுகிப் பதிலளிக்க வேண்டும். கமலை ஒருமையில் விமர்சிப்பது தவறு’ என்றார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க