சூரை மீன்களால் மகிழ்ச்சி! - தமிழக அரசுக்கு மீனவர்கள் முக்கிய கோரிக்கை! | Rameswaram Fishermen request to government

வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (01/08/2017)

கடைசி தொடர்பு:15:05 (01/08/2017)

சூரை மீன்களால் மகிழ்ச்சி! - தமிழக அரசுக்கு மீனவர்கள் முக்கிய கோரிக்கை!

குளிர்ப் பிரதேசத்தினர் விரும்பி உண்ணும் சூரை மீன்கள் வரத்தினால், பாம்பன் பகுதி மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே வேளையில் இவற்றிற்கு நல்ல விலை கிடைப்பதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு ஏற்படுத்தித் தரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சூரை மீன்

இறால் மீன் வரத்துக் குறைவு, இலங்கைக் கடற்படையினரின் கெடுபிடிகள் போன்றவற்றால், ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் தொழில் இழந்துவருகின்றனர். வருடத்தில் மூன்றில் ஒரு பங்கு நாள்களுக்கும் குறைவாகவே மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுவருகின்றனர். அவ்வாறு சென்றபோதிலும் போதுமான மீன்கள் சிக்குவதில்லை. இதனால், மீன்பிடித் தொழில் பாதிக்கப்படுவதுடன், பொருளாதார  இழப்பினையும் மீனவர்கள் சந்திக்க வேண்டியுள்ளது. இதனால் 1000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ள ராமேஸ்வரம் தீவு பகுதியில் நூற்றுக்கும் குறைவான படகுகளே உள்ளன. இந்நிலையில் தென்கடல் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் நாட்டுப்படகு மீனவர்களின் வலைகளில் அதிக அளவு சூரை மீன்கள் சிக்குகின்றன. இதற்கு ஏற்றாற்போல் சூரை மீன்பிடிப்பு முறையினை இப்பகுதி மீனவர்களுக்கு முறையாகக் கற்றுத்தரும் பயிற்சிகளை அளிக்க வேண்டும் எனவும், அவ்வாறு பிடிபடும் மீன்களைப் பதப்படுத்திக் கரைக்குக் கொண்டு வருவதற்கான வசதிகளையும் ஏற்படுத்தித் தரவேண்டும் என மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாம்பன் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பேட்ரிக், ''நலிந்துவரும் மீன்பிடித் தொழிலையும், மீனவர்களையும் காப்பதற்கு மத்திய அரசு ஆழ்கடல் மீன்பிடித் தொழிலுக்கான மானியத் திட்டத்தினை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் படி ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கான படகுகளை வாங்க மானியம் அளித்தால் மட்டும் போதாது. ஏனெனில் இறால் உள்ளிட்ட சிலவகை மீன்களை மட்டுமே பிடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தவர்கள் எங்கள் மீனவர்கள். இவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடுவதற்கான களப் பயிற்சியினை வழங்க வேண்டும்.

சூரை மீனுடன் மீனவர்

ஆழ்கடல் மீன்பிடிப்பின்போது பிடிபடும் சூரை மீன்களில்... சூரை, கிளை வாளை, எலிச்சூரை, சீலா சூரை எனச் சில வகைகள் உண்டு. இவற்றில் அதிக ரத்தமும் கொழுப்பும் இருக்கும். இதனால், சமவெளிப் பிரதேசத்திலும் அதிக வெப்பம் உடைய பகுதிகளிலும் இதனை  அதிக அளவு உண்ண மாட்டார்கள். எனவே, இதைக் கருவாடாக மாற்றி உண்பது வழக்கம். இந்தக் கருவாட்டுக்கு 'மாசி' எனப் பெயர். அதே நேரத்தில் மலைப் பிரதேசங்கள் மற்றும் குளிர்ப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள், இந்த மீனை அதிக அளவு விரும்பி உண்கின்றனர். குறிப்பாக கேரளா மற்றும் இலங்கைப் பகுதிகளுக்கு அதிக அளவில் இவை கொண்டுசெல்லப்படுகின்றன. இதேபோல குளிர்ப் பிரதேச நாடுகளுக்கும் இவை ஏற்றுமதியாகின்றன. அவ்வாறு ஏற்றுமதிசெய்யப்படும். இந்த வகை மீன்களுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டுமெனில், அவை கெட்டுப்போகாமல் இருக்க வேண்டும். அவ்வாறு கெட்டுப்போகாமல் இருப்பதற்கான வழிமுறைகளை எங்கள் பகுதி மீனவர்களுக்குப் பயிற்சி அளிப்பதுடன், அவற்றைப் பிடித்த பின் கெடாமல் கொண்டுவந்து சேர்ப்பதற்கான சாதனங்களையும் அரசு வழங்க வேண்டும். அப்படிச் செய்தால்தான், ஆழ்கடல் மீன்பிடிப்புத் திட்டம் முழுமையான பயனைத் தரும்" என்றார்.