வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (01/08/2017)

கடைசி தொடர்பு:16:57 (01/08/2017)

தொடர்ந்து குற்றச்செயல்! இரண்டு வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது!

மகேஷ் குமார் அகர்வால்

தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த இரண்டு வாலிபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை காவல்துறை ஆணையர் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மதுரை கைத்தறி நகரைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரின் மகன் செல்வபாண்டி (18). மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சார்ந்த சையது இப்ராஹிம் என்பவரின் மகன்  யாசின் முகமது அலி (20). இவர்கள் இரண்டு பேரும் கொலை வழக்குகளில் காவல்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வந்தனர். தொடர்ந்து இரண்டு பேரும் பொதுமக்களுக்கு தொல்லைகொடுத்து அச்சுறுத்துவது போன்ற பல செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில், பொது பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாகச் செயல்பட்டு வந்த இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் யாசின் முகமது அலி, செல்வபாண்டி ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, இரண்டு பேரும் புதுக்கோட்டையில் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்.

மதுரையில்  இந்த ஆண்டு 30-க்கும் மேற்பட்டவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் தமிழ்நாட்டில் அதிகப்படியான நபர்கள் மதுரையில்தான் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க