வெளியிடப்பட்ட நேரம்: 15:06 (01/08/2017)

கடைசி தொடர்பு:15:21 (01/08/2017)

அ.தி.மு.க பொதுச் செயலாளராகிறார் ஓ.பன்னீர்செல்வம்?

ஓ.பன்னீர்செல்வம்

அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவியை ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

டி.டி.வி.தினகரனால் கிளம்பிய புயல், முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் ஒன்றிணைக்க வைத்துவிட்டதாக, உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கூறுகையில், "சசிகலா குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் அ.தி.மு.க. இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி, தர்மயுத்தத்தில் ஈடுபட்டுவருகிறோம். சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை கட்சியிலிருந்து விலக்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் முடிவு செய்திருந்தனர். இரண்டு அணிகளும் ஒன்றிணைய நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், சுமுகத் தீர்வு ஏற்படாதவாறு சிலர் தடுத்தனர். தினகரன், கட்சி அலுவலகத்துக்கு வருவது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டோம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு பொதுச் செயலாளர் பதவியை வழங்க சம்மதம் தெரிவித்து, அது தொடர்பாக எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அதுதொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இன்று அல்லது நாளைக்குள் நல்ல செய்தி ஒன்று கட்சித் தலைமையிலிருந்து வெளிவரும்" என்றனர்.

இதற்கிடையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பொதுச் செயலாளர், துணை முதல்வர் பதவி வழங்கப்படுவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவல், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராயப்பேட்டை கட்சித் தலைமை அலுவலகத்தில், இன்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை நடத்துகின்றனர். அந்த நேரத்தில், ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய ஆதரவாளர்களை வீட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பின்போது, 'நல்ல செய்தியை உங்களுக்குச் சொல்கிறேன்' என்ற தகவல் சொல்லப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவி விவகாரம், தேர்தல் ஆணைய விசாரணையில் இருக்கிறது. இந்த விசாரணையின் முடிவுக்குப் பிறகே, பொதுச் செயலாளர் யார் என்பது தெரியவரும் என்கின்றனர், அ.தி.மு.க வழக்கறிஞர் அணியினர்.