வெளியிடப்பட்ட நேரம்: 15:29 (01/08/2017)

கடைசி தொடர்பு:15:29 (01/08/2017)

சுதந்திர தினத்தை இந்த மைதானத்தில்தான் கொண்டாட வேண்டும்- கலெக்டருக்கு கோரிக்கை

சுதந்திர தினக் கொடியேற்று விழாவை பாளையங்கோட்டையில் உள்ள வ.உ.சி. மைதானத்தில் நடத்த வேண்டும் என நெல்லை மாவட்ட கலெக்டருக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் அமைப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர். 

சுதந்திர தினத்தையொட்டி நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள வ.உ.சி மைதானத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வந்தன. நகரின் மையப்பகுதியில் இருப்பதுடன், பார்வையாளர்கள் அமர்வதற்கான கேலரி, போக்குவரத்துவசதி என அனைத்து அம்சங்களுடன் இந்த மைதானம் உள்ளது. கடந்த 5 வருடங்களுக்கு முன்பு, இந்த மைதானத்தில் உள் விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டதால், தற்காலிகமாக அந்த வருடத்துக்கான கொடியேற்றும் நிகழ்ச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்துக்கு மாற்றப்பட்டது. 

வ.உ.சி மைதானம்

அதன் பின்னர், அங்கேயே அடுத்தடுத்த வருடங்களிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அண்ணா விளையாட்டு அரங்கில் பார்வையாளர்களுக்கு போதிய வசதிகள் இல்லாததால், ஆயுதப்படை மைதானத்துக்கு இந்த நிகழ்ச்சி மாற்றப்பட்டது. ஆனால், ஆயுதப்படை மைதானத்தில் பார்வையாளர் கேலரி வசதி கிடையாது. அத்துடன், பொதுமக்கள் செல்வதற்கான போக்குவரத்து வசதியும் இல்லாததால் மக்கள் செல்ல முடியாத நிலை உருவானது. அதனால் அதிகாரிகள் மட்டுமே இந்த மைதானத்துக்குச் சென்று நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர். 

ஆலோசனைக் கூட்டம்

இந்த நிலையில், சுதந்திர தின விழாவை மீண்டும் வ.உ.சி மைதானத்துக்கே மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது. இது தொடர்பாக சட்டப் பஞ்சாயத்து இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மாவட்ட ஆட்சியரிடம் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட மனுவில், ’’பொதுமக்களுக்கு வசதியான வ.உ.சி.மைதானத்திலேயே விழாவை நடத்த வேண்டும். அத்துடன், சுதந்திர தினவிழாவின்போது பிளாஸ்டிக் கொடிகளைப் பயன்படுத்தவும் தடை விதிக்க வேண்டும்’ என வலியுறுத்தினர்.

காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியின் நெல்லை மாநகர மாவட்டத் தலைவரான சங்கரபாண்டியனும் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ’வ.உ.சி மைதானத்தில் விழாவை நடத்தினால், வெளியூர்களில் இருந்தும் மக்கள் வருவதற்கு வசதியாக இருக்கும். மைதானத்தில் உள்ள கேலரியில் 6000 பேர் அமர்வதற்கு வசதி இருக்கிறது. அதனால் அங்கேயே விழாவை நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்’ எனக் கூறினார். 

இதனிடையே, விழாவை ஆயுதப்படை மைதானத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, அதிகாரிகளுடன்  ஆலோசனை நடத்தினார். அப்போது, சுதந்திர தின விழாவுக்காக ஆயுதப்படை மைதானத்தை விரைவாக தயார் செய்யுமாறு வலியுறுத்தினார். அதனால், இந்த ஆண்டும் வ.உ.சி மைதானத்தில் கொடியேற்று விழா நடப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.