வெளியிடப்பட்ட நேரம்: 19:24 (01/08/2017)

கடைசி தொடர்பு:16:03 (02/08/2017)

'கோயில் திருவிழாவில், 'இவர்களுக்கு' உரிமை இல்லை' - சிவகங்கையை சீரழிக்கும் சாதியத் தீண்டாமை

    சாதி - கோயில்

 

சாதியத் தீண்டாமை, கோயில்களில் சம உரிமை புறக்கணிப்பு என புரையோடி காணப்படுகிறது சிவகங்கை மாவட்டம். இங்குள்ள உருவாட்டி கிராமத்தில், அட்டவணைப்பிரிவு மக்கள் கோயில் மண்டகப்படி உரிமை கேட்டு உரிமைப் போர் நடத்திக்கொண்டிருப்பதே இதற்கான சான்று.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் தாலுகா, புலியடிதம்பம் கிராமத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது உருவாட்டி கிராமம். இந்தக் கிராமத்தில்  பெரியநாயகி அம்மன் கோயில் பிரசித்திப் பெற்றது. இக்கோயிலின் மண்டகப்படி உரிமைக்காக கடந்த 25 ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள் இவ்வூரில் உள்ள அட்டவணைப்பிரிவு மக்கள். தங்களது கோரிக்கையை வென்றெடுக்க முதலமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட நிர்வாகம், போலீஸ் என அரசு நிர்வாகங்களை நம்பியிருந்தவர்கள் தற்போது, தங்களது மன வருத்தத்தை வெளிக்காட்டும்விதமாக தத்தமது வீடுகளில் கறுப்புக் கொடியேற்றி பட்டினிப் போராட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார்கள்.

தேவேந்திர குலவேளாளர் சமூகத்தைச் சேர்ந்த சந்திரன் இதுகுறித்துப் பேசும்போது...

 

 “இந்தக் கிராமத்தில், மறவர், தேவேந்திரகுல வேளாளர், அருந்ததியர், கோனார்,  ஆசாரி, பிள்ளைமார், செட்டியார், வண்ணார், நாயக்கர் என அனைத்து சாதியினரும் வசிக்கிறார்கள். இதில், மறவர் சமூகத்தைச் சேர்ந்த 300 குடும்பங்களும், அட்டவணைப்பிரிவு சமூகத்தைச் சேர்ந்த 260 குடும்பங்களும் ஏனைய சாதியினர் குறைந்த எண்ணிக்கையிலும் வசித்துவருகிறோம். இதில், ஒரு குடும்பம், இரண்டு குடும்பமென  இருக்கும் மற்ற சாதிகளுக்கு மண்டகப்படி உரிமை இருக்கும்போது, அட்டவணைப்பிரிவு மக்களாகிய எங்களுக்கு மட்டும் மண்டகப்படி உரிமை மறுக்கப்படுகிறது. எனவேதான் இப்பிரச்னைக்குத் தீர்வு கேட்டுப் போராடிவருகிறோம்'' என்றவர் தொடர்ந்து பேசுகையில்...

“இந்தக் கோயில், சிவகங்கை மன்னர் சண்முகராஜா காலத்தில் கட்டப்பட்ட கோயில். அந்தக் காலத்தில் எழுதப்பட்ட பட்டயத்தில், '18 அம்பலம், 22 குடும்பர்களுக்கு முதல் மரியாதை' என்று எழுதப்பட்டிருந்ததாக எங்கள் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.  கோயில் மரியாதையாக அம்பலகாரர்களுக்குத் தேங்காய் - பழம் கொடுப்பதும், குடும்பர்களுக்கு வெற்றிலை-பாக்கு வைத்துக் கொடுப்பதும் காலம்காலமாக தொடர்ந்து வந்துகொண்டிருந்தது. 1992-ம் ஆண்டுக்கு முன்புவரை எங்களிடம் கோயிலுக்கு வரி வாங்குவார்கள். வரி என்பது வெறும் 5 ரூபாய் 10 ரூபாய் இப்படித்தான் இருக்கும். மற்றபடி ஊர்க் கண்மாயில் உள்ள சீமைக்கருவேல மரங்களை 10 லட்சத்தில் இருந்து 15 லட்சம் ரூபாய் வரையிலும் ஏலம் விட்டு, அதில் கிடைக்கும் காசை வைத்து கோவில் திருவிழாவை சிறப்பாக நடத்திவிடுவோம்'' என்றார்.

''1992-ம் ஆண்டு மஞ்சுவிரட்டு நடந்தது. அந்த மஞ்சுவிரட்டில், ஒவ்வொரு சாதியினரும் துண்டு கொடுப்பது வழக்கம். அந்த உரிமையை நாங்களும் மன்றாடிக் கேட்ட பிறகு, எங்களில் 2 பேரை மட்டும் துண்டு கொடுக்க அனுமதித்தார்கள். அந்த 2 பேரும் எங்க ஊர் தலையாரிகள். வாடிவாசலில் நின்று துண்டு கொடுக்கும்போது சண்டை போட்டு எங்க ஆளுங்களை மண்டைய உடைச்சுட்டாங்க. உடனே,  ரெண்டு தரப்பும் மோதிக் கொண்டதில் எங்கள் மீதும், எதிர் தரப்பினர்  மீதும் பல்வேறு வழக்குகள் பதிவானது'' என்றார் தேவேந்திர குலவேளாளர் சமூகத்தைச் சேர்ந்த மாதவன்

ஜீவா நகரில் வசிக்கும் தேவேந்திர குலவேளாளர் சமூகத்தைச் சேர்ந்த மாதவனிடம் பேசும்போது....

''கோயில்ல தினமும் சாமி வலம் வரக்கூடிய சப்பரத்தை, தன்னோட சொந்தப் பணத்துல செஞ்சு கொடுத்தவரு எங்க சமூகத்தைச் சேர்ந்த சங்கரலிங்கம்தான். இன்னைக்கு வரைக்கும் பராமரிப்புச் செலவையும் அவருதான் செஞ்சுட்டு வர்றாரு.

சீமைக் கருவேலமரம் ஒவ்வொரு வருஷமும் ஏலம் விடுவாங்க. அதுக்கு தனியாக ஜாயின்ட் அக்கவுண்ட் இருக்கு. அந்த அக்கவுண்ட்ல எங்க சமூகத்தைச் சேர்ந்த ஒருத்தரும் இருக்காரு. இதுல ஒற்றுமையாக இருக்கோம். பல வருடங்களாக எங்களிடம் கோயில் வரி வாங்காமல்  ஏமாத்திக்கிட்டே வர்றாங்க. தைமாசம் பால்குடம் நடந்துச்சு. அப்பவே ஊர் முக்கியஸ்தர்களிடம் எங்களுக்கான மண்டகப்படி உரிமைக்கு சரியான முடிவு எடுங்க. கோயில் வரி வாங்குங்க.... இல்லாட்டி நாங்க அரசாங்கத்தை நாடவேண்டி இருக்கும்னு  ஊர் அம்பலகாரர்களிடம் சொன்னேன். ஆனாலும் கேட்கல... எங்க சமுதாய இளைஞர்கள் படிச்சு, விழிப்புஉணர்வாக இருக்கிறார்கள். ஆனாலும் நாங்க கோயில் திருவிழாவுல போய் நிற்கும்போது ஒதுக்கப்பட்டவர்களாகவே ஓர் அச்சத்தோடே நிற்க வேண்டியிருக்கிறது'' என்கிறார் வேதனையோடு.

இதே கிராமத்தைச் சேர்ந்த நாகம்மாளிடம் பேசும்போது,

''அட்டவணைப்பிரிவு சமூகத்தைச் சேர்ந்த  ராக்கம்மாள் பஞ்சாயத்துத் தலைவராக இருந்தார். அப்போது கோயில் திருவிழாவின்போது வீடுகளுக்கு கொடுக்கப்படும் தேங்காய் - வாழைப்பழம் (காளஞ்சி) மரியாதையைத் தலைவருக்குக் கொடுக்கவில்லை. மேலும், எங்க ஊர்  பள்ளிக்கூடத்தில், பஞ்சாயத்துத் தலைவர் ராக்கம்மாள் கொடியேற்றக்கூடாது, அதற்குப் பதிலாக பள்ளியின் தலைமை ஆசிரியர்தான் கொடி ஏற்ற வேண்டும் என்று ஊர் உத்தரவு போட்டுவிட்டது. அட்டவணைப்பிரிவு ஒருவர் பஞ்சாயத்துத் தலைவராக இருந்ததாலேயே இதுபோன்ற தடைகள்....'' என்று மனம் வெதும்பினார் இவர்.

 

தேவேந்திர குலவேளாளர் மக்கள் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் வேண்டி முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் மாப்பிள்ளைசாமியை பார்க்க அவரது வீட்டுக்குச் சென்றோம். அவர் இல்லாததால் ஊர் காவல்காரரான வீரகாளையைச் சந்தித்தோம்.

“எங்க ஊரில் சாதியத் தீண்டாமை என்பதே கிடையாது. அவுங்க சாதிக்காரப் பொண்ணுதான் பள்ளிக்கூடத்துல சமையல் செஞ்சு  போடுது. எங்க பிள்ளைகளும் சாப்பிடுறாங்க. மண்டகப்படி உரிமையை நாங்க கொடுக்கமுடியாது. காரணம் இது தேவஸ்தானம் கோயில். அங்கே போய்தான் இதுபற்றியெல்லாம் கேட்கணும். தேர் வடம் எல்லாம் அவுங்கதான் இழுக்குறாங்க. இப்படி இருக்கும்போது தீண்டாமை எங்கே வந்துச்சு? ஊருக்குள்ள இருக்கிற அய்யனார் கோயில் திருவிழா எல்லாரும் சேர்ந்துதான் நடத்துறோம்'' என்றார் சூடாக.

இப்பிரச்னையை கையிலெடுத்திருக்கும் சிவகங்கை மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலாளர் கந்தசாமியிடம், சாதீயத் தீண்டாமைப் பற்றிக் கேட்டோம்.

“சிவகங்கை மாவட்டத்தில், சாதியத் தீண்டாமை, ஆலய வழிபாட்டில் உரிமை மறுப்பு என்பது தொன்றுதொட்டு வரக்கூடிய விஷயமாக இருக்கிறது. இதற்குக் காரணம் நாடு என்கிற கட்டமைப்பில் இந்த மாவட்டம் இருக்கிறது. அந்தக் காலத்தில் உள்ள நடைமுறைகள் அப்படியே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் ஆதிக்க சாதியினர். அட்டவணைப்பிரிவு மக்கள் விழிப்புஉணர்வு ஏற்பட்டு உரிமை கேட்டு வீதிக்கு வந்ததும் அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சாதியத் தீண்டாமையின் பிடியில் இந்த மாவட்டம் இருக்கிறது என்பதற்கு மிகப்பெரிய உதாரணமாக  கண்டதேவி இருந்தது. தற்போது உருவாட்டி கிராமமும் இதில் சேர்ந்திருக்கிறது. அட்டவணைப்பிரிவு உரிமையை காக்க மாவட்ட நிர்வாகம் சரியாக செயல்படவேண்டும்''  என்ற கோரிக்கையோடு பேசிமுடித்தார்.

உருவாட்டி அட்டவணைப்பிரிவு மக்களுக்கு, மண்டகப்படி உரிமை கிடைக்க... அந்தப் பெரிய நாயகி அம்மன்தான் பெரியமனசு வைக்கணும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்