வெளியிடப்பட்ட நேரம்: 16:56 (01/08/2017)

கடைசி தொடர்பு:16:56 (01/08/2017)

திருச்சி ரயில் நிலையத்தின் பிளாட்பாரம் டிக்கெட் 20 ரூபாய்!

திருச்சி ரயில் நிலையத்தின் பிளாட்பாரம் டிக்கெட்டின் விலை இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது, பயணிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

திருச்சி ரயில்வே ஜங்கசன்தமிழகத்தின் மையப்பகுதியாக விளங்கும் திருச்சி, பல்வேறு மாநில, மாவட்ட மக்கள் வந்து செல்வதற்கு சுலபமாக இருப்பதால், திருச்சி ரயில்வே ஜங்ஷனுக்கு, வருகைதரும், வெளிமாவட்ட, மாநில மக்கள், திருச்சி வழியாகத்தான் கடந்து செல்வது வழக்கம். அதோடு, வேளாங்கண்ணி, ஶ்ரீரங்கம், திருவானைக்காவல், மலைக்கோட்டை, கும்பகோணம் என ஆன்மிக பயணங்களுக்கும் திருச்சி வழியே செல்ல வேண்டும் என்பதால், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் எப்போதும் பயணிகளின் எண்ணிக்கை கூடுதலாகவே இருக்கும்.

இந்நிலையில் திருச்சி மட்டுமல்லாமல், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், திருவாரூர், கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட திருச்சி ரயில்வே கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட்டுகளின் விலையை இரண்டு மடங்காக உயர்த்தி மக்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. தற்போது பிளாட்பாரம் டிக்கெட்டின் விலை 20-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

நேற்று மாலை அறிவிக்கப்பட்ட இந்த விலை உயர்வு, இன்று காலை முதல் திருச்சி ரயில் நிலையத்தில் அமலுக்கு வந்துள்ளது. இந்தக் கட்டண உயர்வு வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். அதுமட்டுமல்லாமல், திருச்சியைத் தவிர்த்த மற்ற பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களில் வருகிற 15-ம் தேதியில் இருந்து ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் விலை உயரும். ரயில் பயணிகளுடன் வரும் பார்வையாளர்கள் இல்லாமல், ரயில் நிலையங்களில் தேவையில்லாமல் வருகை தருபவர்களின் கூட்டத்தைக் குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திருச்சி ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

வழக்கத்தைவிட இரண்டு மடங்கு உயர்த்தியுள்ள பிளாட்பாரம் டிக்கெட் விலை அறிவிப்பை, ரயில்வே நிர்வாகத்தின் முன்னறிவிப்பில்லாமல், உயர்த்தி உள்ளது, பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க