பாக் நீரிணை பகுதியில் பாதுகாப்பு நிதி ஆலோசகர் ஆய்வு!

பாக் நீரிணை மற்றும் வங்காள விரிகுடாவில் பாதுகாப்பு பலப்படுத்தல் குறித்து பாதுகாப்புத் துறை நிதி ஆலோசகர்,  தனுஷ்கோடி அரிச்சல் முனைப் பகுதியில் இன்று ஆய்வு செய்தார்.

இந்திய கடல் பகுதிகளில் அந்நிய ஊடுருவல்கள், கடத்தல் நடவடிக்கைகள், அகதிகள் வருகை போன்றவை அவ்வப்போது நடந்து வருகிறது. இதைத் தடுப்பதற்காகவும், அந்நிய ஊடுருவல்களை தடுப்பதற்காகவும் இந்தியக் கடற்படை மற்றும் கடலோர காவல் படைகள் முகாம்கள் நாட்டின் கடலோரப் பகுதிகளில் இயங்கி வருகிறது. கடந்த 2 தினங்களுக்கு முன் குஜராத் கடற்பகுதியில் பல கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களை கடத்தி வந்த கப்பலை கடற்படையினர் பிடித்தனர்.

பாதுகாப்பு நிதி ஆலோசகர் ஆய்வு


 இந்நிலையில், பாக் நீரிணை மற்றும் வங்கக் கடல் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் மற்றும் அவற்றுக்குத் தேவையான நிதிகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்பு நிதி ஆலோசகர் சுனில் குமார் கோஹ்லி இன்று விசாகப்பட்டினத்திலிருந்து தனுஷ்கோடி இடையிலான கடல் பகுதியில் ஹோவர் கிராஃப்ட் கப்பலின்  மூலம் ஆய்வு மேற்கொண்டார்.

கடலோர காவல் படையின் ஹோவர் கிராப்ஃட் கப்பல்


தனுஷ்கோடி அரிச்சமுனைப் பகுதியைப் பார்வையிட்ட அவர், தற்போது தனுஷ்கோடி அரிச்சல் முனைப் பகுதி வரை சாலை வசதி உள்ளதால், அங்கு செல்லும் சுற்றுலா பயணிகளுடன் அந்நிய நாட்டினரோ அல்லது கடத்தல்காரர்களோ ஊடுருவல் செய்துவிடாமல் தடுக்கும் வகையில் இலங்கை- இந்தியா இடையேயான கடல் பகுதியில் உள்ள மணல் திட்டுக்களில் கண்காணிப்பு நிலையங்கள் அமைப்பது குறித்தும், தற்போது ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு குறித்தும் கடலோரக் காவல் படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  பின்னர் ராமேஸ்வரம் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்த அவர் ஹோவர் கிராஃப்ட் மூலம் விசாகப்பட்டினம் சென்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!