வெளியிடப்பட்ட நேரம்: 19:01 (01/08/2017)

கடைசி தொடர்பு:19:01 (01/08/2017)

ஓயாத கிணறு விவகாரம்: ஓ.பன்னீர்செல்வம் மனைவிக்கு நோட்டீஸ்

நிலத்துக்கு விவசாய பயன்பாட்டுக்கென்று வழங்கப்பட்டுள்ள மின் இணைப்பைத் துண்டிக்க உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலெட்சுமி பதில் அளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தேனி லெட்சுமிபுரத்தைச் சேர்ந்த ரெங்கசாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தேனி அருகே லெட்சுமிபுரம் என்ற கிராமம் உள்ளது. இந்தக் கிராம மக்கள் 5,000 ஏக்கர் விளை நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்கள். மேலும், குடிநீர் தேவைக்காக இரண்டு கிணறுகள் வெட்டப்பட்டன. அதில் ஒன்று பொதுமக்கள் பங்களிப்பில் வெட்டப்பட்டது. இந்நிலையில் லெட்சுமிபுரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலெட்சுமிக்கு சொந்தமான நிலத்தில் கிணறு தோண்டப்பட்டது. அப்பொழுது எங்கள் கிராம மக்கள் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் எனப் போராடினார்கள். அப்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டால் கிராம மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் என உறுதி கூறப்பட்டது. மேலும், அவர்கள் அதிக திறன்கொண்ட போர்வெல்களை அமைத்தார்கள். இதிலிருந்து குழாய் மூலம் சுற்றி உள்ள பகுதிகளுக்கு குறிப்பாக ஒரு வருவாய் கிராமத்திலிருந்து மற்றொரு வருவாய்க் கிராமத்துக்கு குழாய் மூலம் தண்ணீரைக் கொண்டு செல்கின்றனர். இது மின்வாரியத்தின் விதிகளுக்கு எதிரானது.

இந்த நிலையில், புதிதாக 60 x 60 அளவில் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவிக்குச் சொந்தமான நிலத்தில் தோண்டும் முயற்சி நடைபெறுகிறது. இதை எதிர்த்து லெட்சுமிபுரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த இடத்தை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு செய்து கிணறு தோண்டும் பணிக்குத் தடை விதித்துள்ளார். மேலும், இந்தக் கிணறு தோண்டுவதன் மூலமாக  லெட்சுமிபுரம் உள்ளிட்ட 5 கிராம மக்களின் விவசாய குடிநீர் தேவைகள் பாதிக்கப்படும். மின்வாரிய விதிமுறைப்படி ஆற்றின் கரையோரம் 200 மீட்டருக்கு அப்பால் உள்ள விளை நிலங்களுக்குதான் விவசாய பயன்பாட்டுக்கான மின் இணைப்பு வழங்கப்படும் என உள்ளது. ஆனால், வரட்டாற்றின் கரையிலிருந்து 15 மீட்டர் தூரத்தில் உள்ள விஜயலெட்சுமியின் நிலத்துக்கு விவசாய பயன்பாட்டிற்கான மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த மின் இணைப்பைத் துண்டிக்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மனைவி பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.