ஸ்டான்லி மருத்துவமனையில் 'உலகத் தாய்ப்பால் வார விழா' #WorldBreastfeedingWeek

லகத் தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு, சென்னை ஸ்டான்லி அரசுப் பொது மருத்துவமனையில் ஒருவார காலத்துக்கு விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள், கண்காட்சி, பேரணி, மனிதச் சங்கிலி, கலந்துரையாடல், விழாவையொட்டி நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

தாய்ப்பால் வார விழா பேரணி 

தாய்ப்பால் கொடுப்பதின் முக்கியத்துவம் குறித்து சர்வதேச அளவில் விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் நோக்கில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 முதல் 7-ம் தேதி வரை உலகத் தாய்ப்பால் வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதேபோல ஆண்டுதோறும் ஒரு மையக்கருவை அடிப்படையாகக் கொண்டு கடைப்பிடிக்கப்படுகிறது. 'தாய்ப்பால் ஊட்டுதலை ஒருங்கிணைத்து ஊக்குவிப்போம்' என்ற கருப்பொருளை அடிப்படையாகக்கொண்டு இந்தாண்டுக்கான தாய்ப்பால் வாரவிழா உலகம் முழவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. 

அதேபோல, தமிழகத்தில் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, தாய்ப்பாலின் அவசியத்தை எடுத்துரைப்பதற்காக சென்னை ராயபுரத்தில் உள்ள ஸ்டான்லி அரசுப் பொது மருத்துவமனையில் உலகத் தாய்ப்பால் வாரவிழா இன்று (ஆகஸ்ட் 1-ம் தேதி) தொடங்கியது. இதையொட்டி மருத்துவமனையில் இன்று காலை கண்காட்சி திறக்கப்பட்டு, விழிப்பு உணர்வுப் பேரணியும் மனிதச் சங்கிலியும் நடைபெற்றது. இவ்விழாவில், மருத்துவக் கல்லூரி முதல்வர் பொன்னம்பல நமசிவாயம், மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட தாய்மார்கள், பொதுமக்களும் பங்கேற்று விழிப்பு உணர்வுப் பதாகைகளை ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர். 

அதேபோல, நாளை (ஆகஸ்ட் 2-ம் தேதி)  காலை மருத்துவ மனையின் சார்பாக, பாரதி மகளிர் கலைக் கல்லூரியில் வருங்கால தாய்மார்களுக்கான விழிப்பு உணர்வு நிகழ்ச்சி என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெறுகிறது. நாளை மறுநாள் (ஆகஸ்ட் 3-ம் தேதி) இளநிலை, முதுநிலை, பயிற்சி மருத்துவர்களின் விழிப்பு உணர்வு நிகழ்ச்சியும். 4-ம் தேதி செவிலியர் மற்றும் செவிலியர் கல்லூரி மாணவிகளின் விழிப்பு உணர்வு நிகழ்ச்சியும், 5-ம் தேதி அங்கன்வாடி பணியாளர்களின் விழிப்பு உணர்வு நிகழ்ச்சியும் 6-ம் தேதி தாய்மார்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நிறைவு நாளான (7-ம் தேதி)  விழிப்பு உணர்வு போட்டிகள், அதில் வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசு வழங்குதலுடன் நிகழ்ச்சிகள் முடிவடைகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!