Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

துரத்தும் போலீஸ், சோறு போடும் `சாப்பாடு சார்’... வானமே கூரையாகும் மெரினாவின் இரவுலகம்!

 

 

மெரினா கடற்கரை என்பது பலருக்குப் பொழுதுபோக்கும் இடம்; பலருக்கு வியாபாரம் செய்யும் தளம்; பலருக்குத்  திறந்தவெளி படுக்கையறை; பலருக்கு உடற்பயிற்சிக்கான தடம்; பலருக்குப் பாலியல் தொழிலுக்கான களம்.  இப்படி பற்பல காரணங்களுக்காக ஜனத்திரளை உள்வாங்கும் மெரினா, இன்னொரு பெருங்கூட்டமான பலருக்கு உறைவிடமாகவும் இருக்கிறது. வீட்டில் காற்றுவசதி இல்லையென்று படுப்பவர்களிலிருந்து வீடின்றி வாழும் பலருக்கும் இரவுநேர விடுதியாக, உறங்க அனுமதிக்கிறது. வந்துபோகும் மக்களின், வாகனங்களின் பேரிரைச்சல் அடங்கிய பின் மெரினாவின் இன்னொரு முகம் உருவெடுக்கிறது.

குல்பி ஐஸ் சாப்பிடுவதற்கும், கூட்டமாக காரில் வந்து ஜீரணப் பேச்சு பேசிச் செல்வதற்கும் படையெடுக்கும் கூட்டம் ஒருபுறமிருக்க, இன்னொரு புறம் கூடாரமடித்து அதிலிருந்து புகை கிளம்ப சமைத்துக் கொண்டிருக்கும் ஒரு பிரிவினரை நீங்கள் பார்த்திருக்கலாம். கூட்டத்துடன் ஒன்றாமல் கையிலிருக்கும் துணிப்பையை தலையணையாக வைத்து தன்னந்தனியாக ஒவ்வொரு மூலையில் படுத்துக் கொண்டிருக்கும் மனிதர்களையும் பார்த்திருக்கலாம். பிழைப்புக்காக சென்னைக்கு வந்து தெருத்தெருவாக வியாபாரம் செய்து, இரவு ஆனதும் மெரினாவில் வந்து தூங்க வருபவர்களே அங்கு அதிகம் வியாபித்து இருக்கிறார்களென்பது ஓர் இரவு அங்கே தங்கி அவர்களோடு புழங்கியபோதுதான் தெரிந்தது.

கொலுசு விற்பவர்கள், பிளாஸ்டிக் பூக்கள் விற்பவர்கள், பச்சை குத்துபவர்கள், தேன் விற்பவர்கள், வளையல் மணி விற்பவர்கள் போன்ற தரப்பினரின் கூட்டமே உறங்குவதற்காக மெரினாவுக்கு அதிகம் வருகிறார்கள். சொந்த ஊருக்கு வாரமொருமுறை செல்கிறார்கள். அதுவும் சென்னைதான் வியாபாரக் கேந்திரம் என்று இவர்கள் நிரந்தரமாக இங்கு வந்து தங்குவதில்லை. எந்தெந்த ஊர்களில் பெரிய திருவிழாக்கள் நடக்குமென்கிற விவரங்களைத் தெரிந்து வைத்துக்கொண்டு ஏற்றாற்போல் இடம்பெயர்கிறார்கள். சேலத்தில் நடக்கும் ஆடிப்பெருக்கு திருவிழா அதற்கடுத்து நாகப்பட்டினத்தில் நடக்கப்போகும் வேளாங்கண்ணி மாதா திருவிழா என அடுத்து இரண்டு மாதங்களுக்கான பயணத் திட்டத்தைத் தயாராக வைத்திருக்கிறார்கள். இவர்கள் மட்டுமின்றி சென்னையில் பணிபுரியும், வட இந்தியத் தொழிலாளிகளில் ஒரு பிரிவினருக்கும் இரவு நேரத்தில் மெரினாதான் வீடு. 

night time at marina

மெரினாவில் வந்து படுப்பவர்களுடன் மணலில் கூடியமர்ந்து பேசிக் கொண்டிருக்கையில் ஒரு வண்டியின் ஹார்ன் சத்தம் கேட்டதும் கூட்டம் சிதறியது. "என்னங்க எங்க போறீங்க?" என்றேன். "சாப்பாடு சார் வந்துட்டாருங்க" என்று நடையை வேகப்படுத்தினார் அந்த இளைஞன். அவர் பின்னாலயே சென்றேன். சிமென்ட் மூட்டை மாதிரி ஒரு மூட்டையைத் தன் வண்டி முன்னே வைத்துக்கொண்டு அதிலிருந்த உணவுப் பொட்டலங்களை விநியோகித்துக் கொண்டிருந்தார் அந்த மனிதர். 

அவரிடம் சென்று விசாரித்தபோது "ஒரு நாளைக்கு ஒரு எடத்துக்குனு டெய்லி சாப்பாடு கொண்டு வந்து கொடுக்கிறேங்க." என்றார்.

"எந்தெந்த ஏரியால இருக்கிற ஜனங்களுக்குப் போய் கொடுக்கிறீங்க?"

மெரினா கடற்கரை

"ப்ளான் பண்ணி போறதுலாம் இல்ல சார்..நேத்து மவுன்ட் ரோட் தர்கா கிட்ட இருக்கிறவங்களுக்குக் கொடுத்தேன். இன்னைக்கு பீச். நாளைக்கு ஈசிஆர் சைடு" அப்டியே வண்டி போற போக்குல" 

"நீங்க ஏதாவது அமைப்பு வெச்சு இருக்கீங்களா?"

"அமைப்புன்னுலாம் இல்ல சார். ப்ரெண்ட்ஸ் நாங்க ஒரு ஏழு பேரு. மாசம் மாசம் சம்பளத்துல இவ்ளோ தொகைன்னு ஒதுக்கி வெச்சு. இந்த மாதிரி ரோட் சைட்ல படுத்துட்டு இருக்கிறவங்களுக்கு சாப்பாடு பார்சல் பண்ணிக் கொடுக்கிறோம்"

அடுத்த கேள்வி கேப்பதற்கு முன், கூட்டம் அவரை சூழ்ந்து பார்சலை வாங்க ஆரம்பித்தது. எல்லோரும் வாங்கி முடித்ததும் திரும்பவும் அவரிடம் உரையாடலைத் தொடங்கும்போது "சரி சார் டைம் ஆய்டுச்சி. வரேன்" என்று வண்டியை இயக்கிக் கிளம்பி விட்டார். 

சாப்பாட்டுப் பொட்டலத்தை வாங்கி தங்களுடைய மொழியில் பேசிச் சிரித்து சாப்பிட உட்கார்ந்தார்கள் ஒரு பிரிவினர். ஏற்கெனவே சாப்பிட்டவர்கள் கூட மறுநாள் தேவைக்காக வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டார்கள். இன்னொருபுறம் வரிசையாகப் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தவர்களிடையே திடீரென ஒரு சலசலப்பு. 

தூங்க ஆரம்பித்தவர்களைக் காவலர்கள் வந்து எழுப்ப ஆரம்பித்தனர். ஏற்கெனவே தூங்கி விட்டிருந்தவர்களை லத்தியால் சீண்டி எழுப்பினர். இருபதுக்கும் மேற்பட்ட காவலர்கள் ஆளுக்கொரு பக்கம் சென்று அதட்டலுடன் தூங்கி இருப்பவர் அனைவரையும் எழுப்பிக் கொண்டிருந்தனர். பெருங்கூட்டம் அந்த இடத்திலிருந்து இடம்பெயரத் தயாரானது.

மெரினா கடற்கரையில் இரவு

கையில் பையுடன் தூக்கக் கலக்கத்தில் நின்றிருந்தவரிடம் பேசினேன் " என்னணா டெய்லி இப்டித்தான் வந்து எழுப்புவாங்களா?"  அவர் பதில் சொல்லவில்லை. அவர் பக்கத்திலேயே நின்றிருந்தேன். சில நிமிடங்கள் கழித்து கட்டை விரலை வாயருகே கொண்டுபோய் "தண்ணி இருக்குமா" என்றார். "தண்ணி இல்லணா வாங்க ஒரு டீ சாப்பிடலாம்" என அழைத்துச் சென்றபோது முன்னர் கேட்ட கேள்விக்கு அவரே பதில் சொன்னார். "போலீஸ்லாம் ரொம்ப நல்லவங்க. எந்தத் தொந்தரவும் இல்லாம தூங்கலாம் சார். ஜனவரி மாசம் இந்தப் பசங்கலாம் வந்து போராட்டம் பண்ணானுங்க பாருங்க அப்போ போச்சு நிம்மதி. போலீஸ்லாம் ரொம்ப மோசமா ஆய்ட்டாங்க. இந்த மாசம் சுதந்திரதினம் வருதுல அதுக்குத்தான் இப்போ கொஞ்சம் ஓவரா பண்றாங்க" என்று முதல் மிடறு தேநீரைச் சுவைத்தார்.

"நீங்க எவ்ளோ நாளாணா இங்க படுக்கிறீங்க?

"ஒன்றை வருஷமா சார்?"

ஃபேமிலியெல்லாம்?

"ஒரு பொண்ணு ஒரு பையன். திருவள்ளூர்ல இருக்காங்க. நா இங்க சிந்தாதிரிபேட்டைல வெல்டிங் வேல செய்றேன். வேல முடிச்சுட்டு நைட்டு வந்து இங்கப் படுத்துப்பேன்"

"பசங்கள பாக்க எப்போ போவீங்க?"

"ஊரு பக்கம் போறதுல்ல சார். அது ஒரு பிரச்னை ஆய்டுச்சு. வேணாம் விடுங்க" என்றார்.

"சரி. இப்போ எங்கப் போய் படுப்பீங்க?"

"அது ஒன்னும் பிரச்னை  இல்ல. கொஞ்ச நேரத்துல போலீஸ்காரங்க போய்டுவாங்க. ஒரு ஒன்னவர் அப்டியே எங்கயாச்சும் ஒக்காந்து இருந்துட்டு அப்புறம் வந்து படுத்துக்க வேண்டியதுதான்" என்றார்.

அவர் முகத்தில் எந்தத் துயரமும் இல்லை. தூங்குவதற்கான இடம் தேடும் அலைச்சல் தினசரி வாழ்க்கையின் அங்கமாகிவிட்ட ஒரு சகஜநிலையே அவர் முகத்தில் தேங்கியிருந்தது. அவர் மட்டுமல்ல. மெரினாவில் தூங்கிக் கொண்டிருந்து துரத்தி அனுப்பப்பட்டவர்கள் கூட சோகமாகவெல்லாம் கலைந்து செல்லவில்லை. காவலர்களுடன் கண்ணாம்பூச்சி ஆடும் மனநிலையிலேயே அங்கே சுற்ற ஆரம்பித்தார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement