ராமச்சந்திரா மருத்துவமனை - ராம மோகன ராவ் ஐ.ஏ.எஸ் பற்றி புகார்களை அள்ளிவீசிய ஜெயவீரன்! | This man creates issue against Ramachandra hospital land

வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (01/08/2017)

கடைசி தொடர்பு:08:38 (02/08/2017)

ராமச்சந்திரா மருத்துவமனை - ராம மோகன ராவ் ஐ.ஏ.எஸ் பற்றி புகார்களை அள்ளிவீசிய ஜெயவீரன்!

ராமச்சந்திரா மருத்துவமனை, ramachandra hospital

"போரூர் இரட்டை ஏரிப்பகுதியில், சில பகுதிகளை முற்றிலுமாக ஆக்கிரமித்துள்ளது ஶ்ரீராமச்சந்திரா பல்கலைக்கழகம். அந்த இடத்தை மீட்டு, அதில் எய்ம்ஸ் மருத்துவமனையை நேரடியாகக் கொண்டுவர வேண்டும். ராமச்சந்திரா பல்கலைக்கழக நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்ததற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன” எனப் பல குற்றச்சாட்டுகளை அள்ளிவீசுகிறார் 'ஜஸ்ட் க்ரீன் ஃபவுண்டேஷனை' சேர்ந்த ஜெயவீரன்.

தமிழகத்தில் முக்கியமான மருத்துவப் பல்கலைக்கழகமாகவும், அதனுடன் இணைந்த மருத்துவமனையாகவும் செயல்பட்டு வருகிறது போரூரில் உள்ள ஶ்ரீராமச்சந்திரா மருத்துவமனை. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிரபல பத்திரிகை ஒன்று வெளியிட்ட 2017-ம் ஆண்டுக்கான சிறந்த மருத்துவக் கல்லூரிகளின் தரவரிசைப்பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது இந்தப் பல்கலைக்கழகம். 1985-ம் ஆண்டில், தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர் இருந்தபோது இம்மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. எம்.ஜி.ஆரின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்த என்.பி.வி.ராமசாமி உடையார்தான் இதன் நிறுவனர்.

இந்நிலையில், ஶ்ரீராமச்சந்திரா பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தும் ஜெயவீரன், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இந்த மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி முதலில் விருகம்பாக்கத்தில்தான் தொடங்கப்பட்டது. அப்போது 100 ஏக்கருக்குமேல் இடவசதி இருந்தால்தான் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி இயங்குவதற்கு அனுமதி தரமுடியும் என அகில இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவுறுத்தியது. அதைத்தொடர்ந்து, போரூர் இரட்டை ஏரியை ஒட்டியிருந்த தொளியார் அகரம், காரம்பாக்கம், வானகரம், செட்டியார் அகரம், துண்டலம், அய்யப்பன்தாங்கல் ஆகிய கிராமங்களை ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் கல்லூரி நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்தது. 1985-ல் சுமார் 122 ஏக்கர் நீர்நிலை புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்த ராமச்சந்திரா பல்கலைக்கழக நிர்வாகம் அந்தப் பகுதிகளில் வசித்த 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டனர். நீர்நிலை புறம்போக்குப் பகுதியை இவர்கள் ஆக்கிரமித்தது எம்.ஜி.ஆருக்குத் தெரியாது. அப்போதிருந்த அரசு அதிகாரிகள் இவர்களுக்குத் துணையாக நின்றனர். 

ராமச்சந்திரா, jayaveeran

1995-ல் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் இந்த இடம் 99 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு விடப்பட்டது. வருவாய்த்துறை மூலமாக இந்த இடம் குத்தகைக்கு விடப்பட்டபோது, நீர்நிலைப் பகுதி என்பதை மறைத்து விட்டார்கள். ஆனால், குத்தகையில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. 'அரசுக்கு எந்த நேரத்தில் அந்த இடம் தேவைப்பட்டாலும் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்' என அரசு ஆணையிலும் உள்ளது. தற்போது, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இடம் தேடும் தமிழக அரசு, அரசு ஆணையில் இருப்பதை பயன்படுத்தி, ராமச்சந்திரா மருத்துவமனையைக் கையகப்படுத்தி எய்ம்ஸ் மருத்துவமனையாக்க வேண்டும்” என்றார்.

"இத்தனை புகார்களைச் சொல்கிறீர்கள்.. இதுபற்றி அரசிடம் முறையிட்டீர்களா?"

"பல்வேறு அரசுத் துறைகளில் மனு கொடுத்திருக்கிறோம். தமிழக முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர் ஆகியோரிடம் இந்த விவகாரம் பற்றி விரிவான மனுவையும் அளித்தோம். ஆனால், இந்த விவகாரத்தில் மேல்மட்ட அரசியல் தலையீடுகள் உள்ளன. அரசு உயர் அதிகாரிகள், அரசியல் தலைவர்களின் சொந்தங்கள் இங்கு படிக்கிறார்கள். அவர்களும் இந்த மருத்துவமனையால் பயனடைகிறார்கள். பிரதமர் அலுவலகத்துக்கும் இந்த விவகாரம் தொடர்பாக மனு அனுப்பியிருக்கிறோம். எங்கள் மனுமீது எந்த நடவடிக்கையும் இல்லையென்றால், உயர்நீதிமன்றத்தை நாட இருக்கிறோம்".

ராமச்சந்திரா, ramamohanrao

"அப்போதைய மாவட்ட ஆட்சியர் உட்பட அரசு அதிகாரிகளுக்குத் தெரியாமல் இந்த விவகாரம் நடந்திருக்க வாய்ப்பில்லையே?"

"அப்போதிருந்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ராமமோகன ராவ், நிலம் குத்தகை முறைகேட்டில் ஈடுபட்டிருக்கிறார். அரசு அதிகாரிகள் பலரும் இதற்கு முழு உடந்தையாக இருந்துள்ளனர். 1995-ல் இந்த குத்தகை ஒப்பந்தம் நடந்தது. நீர்நிலை புறம்போக்குப் பகுதி என்பதை முற்றிலும் மறைத்தே குத்தகைக்கு எடுத்துள்ளனர். அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில், வருவாய்த் துறை அமைச்சராக எஸ்.டி. சோமசுந்தரம் இருந்தார். ஆனால், முதல்வர் ஜெயலலிதாவுக்கும், அமைச்சருக்கும் தெரியாமலேயே இந்த முறைகேட்டை நடத்தியிருக்கிறார்கள். ஐ.ஏ.எஸ் அதிகாரி ராமமோகன ராவ் நேரடியாக இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்".


டிரெண்டிங் @ விகடன்