வெளியிடப்பட்ட நேரம்: 19:27 (01/08/2017)

கடைசி தொடர்பு:19:27 (01/08/2017)

"கூடி வந்தால் கோடி நன்மை"- அ.தி.மு.க இணைப்பு குறித்து ஜெயக்குமார் சூசகம்

ராயப்பேட்டை அ.தி.மு.க அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், 'அ.தி.மு.க அணிகள் இணைய வேண்டும் என்றுதான் அனைவரும் நினைக்கிறோம். அனைவரும், கூடி வந்தால் கோடி நன்மை என்றே நம்புகிறோம்' என்று தெரிவித்துள்ளார். 

ஜெயக்குமார்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர், அ.தி.மு.க பல்வேறு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டுக்கொண்டு வருகிறது. சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த டி.டி.வி தினகரன், "இன்னும் 60 நாள்கள் பொறுமையாக இருப்பேன். அதுவரை அணிகள் இணையவில்லை என்றால் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பேன்" என்றார். 

இந்நிலையில், தினகரன் அளித்த 60 நாள் கெடு வரும் 4-ம் தேதியுடன் முடிகிறது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் இணைவது குறித்து அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது அணியினருடன் ராயப்பேட்டையில் இருக்கும் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்தக் கூட்டத்தில், அணிகள் இணைப்பு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கும் எனத் தெரிகிறது. இதே நேரத்தில், பன்னீர்செல்வம் தன் ஆதரவாளர்களுடன் தனது வீட்டில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். பொன்னையன், மதுசூதனன், மனோஜ் பாண்டியன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

தினகரன் வரும் 5-ம் தேதி மாவட்டச் செயலாளர்களின் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். அதற்கு முன்னதாக இரு அணிகளும் இணைப்பு குறித்து முக்கிய ஆலோசனையில் இன்று ஈடுபட்டுள்ளதால், இணைப்பு குறித்து முக்கிய முடிவுகள் எட்டப்படலாம் எனத் தெரிகிறது. மேலும் தினகரன், நாளை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவை நேரில் சென்று சந்திக்க உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. 

இந்நிலையில், ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின் ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார், 'எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா சிறப்பாக நடத்தப்பட வேண்டும் என்பதற்காகவே இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. எங்கள் தரப்பில் இருக்கும் அனைவரும் கூடி வந்தால் கோடி நன்மை என்று நம்புகிறோம். இதனால்தான் பேச்சுவார்த்தைக்கான கதவை திறந்தே வைத்திருக்கிறோம். அதனால், பல கட்டங்களாக தொடர் பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டுதான் இருக்கிறோம். இணைப்பு குறித்து முடிவு விரைவில் முடிவு எடுக்கப்படும். அனைவருக்கும் இது குறித்து தெரியப்படுத்தப்படும். மற்றவர்கள் குறித்து நாங்கள் பொருட்படுத்தப் போவதில்லை. கட்சியையும் ஆட்சியையும் வழி நடத்துவது எடப்பாடி பழனிசாமிதான் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்' என்று பேசியுள்ளார்.