வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (02/08/2017)

கடைசி தொடர்பு:02:00 (02/08/2017)

கரூரின் அம்மா பூங்காத் திறப்பு விழா..!

                         
 


கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திலுள்ள மாயனூர் செல்லாண்டியம்மன்கோவில் அருகில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அம்மா பூங்கா திறப்பு விழா நாளை நடைபெற இருக்கிறது. அதைதொடர்ந்து, மூன்றாம் தேதி ஆடிப்பெருக்கு விழாவும் நடைபெறவுள்ளது. அந்தப் பூங்காவை பார்வையிட்ட கரூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ், பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, "கரூர் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள், குழந்தைகளின் மனமகிழ்ச்சிக்காக பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அம்மா பூங்கா ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. மாயனூர் செல்லாண்டியம்மன்கோவில் அருகில் அமைக்கப்பட்டுள்ள அந்தப் பூங்காவில் சிறுவர்கள் விளையாடுவதற்கு ஏதுவாக சிறுவர் விளையாட்டுப் பூங்கா, சிற்றுண்டியகம், நடைப்பயிற்சிப் பாதை, சிறிய அளவில் விழாக்கள் நடத்துவதற்கான எம்.ஜி.ஆர் நூற்றாண்டு கலையரங்கம், கழிப்பறை வசதி, பார்வையாளர்கள் மாடம், செயற்கை நீரூற்று ஆகிய வசதிகளுடன் கூடிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதை, 2.8.2017 அன்று மாலை நான்கு மணி போல் மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை, போக்குவரத்துத்துறை அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்று திறக்க இருக்கிறார்கள். 

இதேபோன்று, காவிரிக்கரையோரம் மாயனூர் பூங்காவில் ஆண்டுதோறும் தொன்றுதொட்டு நடந்து வரும் ஆடிப்பெருக்கு விழாவை, இனிமேல் ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாட ஏதுவாக அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து 3.8.2017 அன்று ஆடிப்பெருக்கு விழாவின் தொடக்கவிழா நடைபெறவுள்ளது. இவ்விழாக்களில் அரசின் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து துறைச் சார்ந்த திட்டங்களை பொதுமக்களுக்கு விளக்கிட ஏதுவாக கண்காட்சி அரங்குகளும், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் சிறப்பு புகைப்படக் கண்காட்சியும் நடத்தப்படவுள்ளது. மேலும், இவ்விழாவை சிறப்பிக்கும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், அரசு அலுவலர்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகள், தென்னக கலைப்பண்பாட்டுத் துறை சார்பில் தப்பாட்டம், கோலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம் எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. எனவே, கரூர் மாவட்ட பொதுமக்கள், அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள், விவசாயச் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பெருந்திரளாக பங்கேற்று, இவ்விழாக்களை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.