Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மீண்டும் அரங்கேறும் கூவத்தூர் திட்டம்! தினகரனின்  கெடு... தவிக்கும் போலீஸ் !

ட்சியையும் ஆட்சியையும் தக்கவைக்க இன்னொரு 'கூவத்தூர் திட்டம்' உருவாகியுள்ளதாகக் கிடைத்த தகவலால், போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அ.தி.மு.க அம்மா அணி (தினகரன்) யின் துணைப் பொதுச்செயலாளரான டி.டி.வி. தினகரன், 'ஆகஸ்ட் 5-ம் தேதி முதல், கட்சிப்பணியாற்றப் போகிறேன்' என்று விதித்த கெடு முடிய இன்னும் இரண்டு நாள்களே உள்ளதால், 'ஐந்தாம் தேதி என்ன நடக்குமோ?' என்று  போலீஸார்  கவலையில் உள்ளனர்.

தினகரன்

இரண்டு அணிகளாகப் பிரிந்த அ.தி.மு.க-வை ஒன்றாக இணைக்க இரு தரப்பிலும் தலா ஏழுபேர் கொண்ட குழுக்கள் ஆறுமாதங்களுக்கு முன் அமைக்கப்பட்டன. ஆனால், பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏதுமில்லாமலே மாதங்கள் கடந்துவிட்டன. அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா (ஓ.பி.எஸ்) அணியின் அவைத்தலைவர் மதுசூதனனின் கோரிக்கைப்படி, ஏப்ரல் 26-ம் தேதி, அ.தி.மு.க அம்மா அணி பொதுச்செயலாளர் சசிகலாவின் பேனர்கள் கட்சி அலுவலகத்திலிருந்து அகற்றப்பட்டன.

பேனர் அகற்றப்பட்ட இரண்டாவது நாளே, "கட்சியை விட்டு விலகிக்கொள்கிறேன் என்று டி.டி.வி. தினகரன் அறிவித்தார். தினகரன் இப்படி திடீரென்று விலகுவதாகச் சொன்னதை, ஓ.பி.எஸ். தரப்பு முழுமையாக நம்பவில்லை. 'கட்சியைவிட்டு டி.டி.வி. தினகரன் ஒதுங்கிக் கொண்டதாக அறிவித்தாலும் ஆட்சியை மறைமுகமாக வழிநடத்துவது சசிகலா மற்றும் தினகரன்தான்' என்று  தொடர்ந்து சொல்லி வந்தனர்.  இந்நிலையில்தான், 'கட்சிப் பணியாற்ற ஆகஸ்ட், 5-ம் தேதி மீண்டும் வருகிறேன்' என்று டி.டி.வி. தினகரன் அறிவித்திருக்கிறார். தினகரனின் இந்த அறிவிப்பால், மீண்டும் அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. 

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்       

டி.டி.வி. தினகரன் மற்றும் சசிகலாவால் கூவத்தூர் சொகுசு விடுதியில் முடிவெடுத்து, மகுடம் சூட்டப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கும், தினகரன் தரப்புக்குமான உறவு நல்லமுறையில் இல்லை என்பதே இதற்குக் காரணம். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், கட்சியின் தலைமைக் கழகத்தில் நேற்று மாலை அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்ததும் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை எழுச்சியுடன் நடத்துவதுகுறித்துதான் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அணிகள் இணைய பேச்சுவார்த்தைக்கான கதவு திறந்தே உள்ளது. விரைவில் சுமுக தீர்வு எட்டப்படும் என நம்பிக்கையுடன் இருக்கிறோம். கட்சியையும் ஆட்சியையும் வழி நடத்துவது எடப்பாடி பழனிசாமிதான். அணிகள் இணைப்புகுறித்து இன்றைய கூட்டத்தில் எந்தப் பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை" என்றார்.

டி.டி.வி. தினகரன், ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் கட்சிப்பணிக்கு வர உள்ளதாக அறிவித்துள்ளாரே என்ற கேள்விக்கு, அ.தி.மு.க. அமைச்சர்கள் யாரும் பதில் கூறாமல் தவிர்த்தனர். ஆனால், அந்தக் கேள்விக்கு கட்சி அலுவலகம் அருகே ஏற்பாடுகளில் இருந்த தினகரன் ஆதரவாளர்கள் பதில் அளிக்கின்றனர்.


"அண்ணன் (தினகரன்) சைடில் 40 எம்.எல்.ஏ-க்கள் ஸ்ட்ராங்காக இருக்கிறார்கள். அண்ணனின் மாமியார் சந்தானலட்சுமி மறைவுக்கு அண்ணன்தான் யாரையும் வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார். அண்ணனுக்கு மாமியார் என்றால், பெரியண்ணன் திவாகரனுக்கும் இறந்துபோனவர் மாமியார்தானே? பெரியண்ணன் பக்கமும் ஏகப்பட்ட எம்.எல்.ஏ-க்கள், சீனியர் அமைச்சர்கள் இருக்கிறார்கள். பெரியண்ணனும் சின்ன அண்ணனும் கைகாட்டியவர்கள்தான் ஆட்சியிலும், கட்சியிலும் இருக்கிறார்கள், இருக்கவும் முடியும்.

கூவத்தூரில் இவர்களைத் தாய்க்கோழிபோல அடைகாத்து,  பாதுகாப்பாக கோட்டைக்குள் மீண்டும் அனுப்பி வைத்தவர்தான், அண்ணன். அன்று கூவத்தூரில் என்ன பார்த்தீர்கள், ஐந்தாம் தேதியன்று  நடக்கப் போவதை இங்கே இருந்து நேரிலேயே பாருங்கள்" என்று திகில் காட்டுகின்றனர். முதலமைச்சர் எடப்பாடி உத்தரவிட்டால், முதல்வர் என்ற முறையில் 'எதையும்' செய்ய போலீஸ் தயார் நிலையில் இருக்கிறது என்று நேற்று ஒரு தகவல் வெளியானது.

அப்போது,  'அப்படி ஏதாவது ஆகி நான் கைதானால் மகிழ்கிறேன்' என்று தினகரன் அளித்த பதில், அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் பதற்றத்தை உண்டு பண்ணியுள்ளது. தினகரனும், திவாகரனும் ஒன்றாகக்கைகோத்துள்ள நிலையில், முதலமைச்சரின் கருத்துப்படி நடப்பதா அல்லது யாருக்குக் கட்டுப்படுவது என்ற குழப்பம் போலீஸ் தரப்பில் உருவாகியுள்ளது. இன்னொரு கூவத்தூர் என்ற 'டோன்' பெரிதாய் ஒலிக்க ஆரம்பித்துள்ளதுதான் போலீஸு க்கு இப்போதுள்ள இன்னொரு தலைவலி.
 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement