அப்துல் கலாம் நினைவிடத்தில் பகவத்கீதை; மார்க்சிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம்

 ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள டாக்டர் அப்துல் கலாம் நினைவிடத்தில், பகவத்கீதையை வைத்து மத வெறியினைத் திணிக்கும் பாரதிய ஜனதாவின் மத்திய ஆட்சியைக் கண்டித்து, ராமேஸ்வரத்தில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில், ராமேஸ்வரம் அருகே உள்ள பேய்க்கரும்பில், மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமிற்கு நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவகத்தில், கலாம் வீணை வாசிப்பது போன்ற வெண்கலச் சிலையும் அதன் அருகில் வார்க்கப்பட்ட பகவத்கீதை மாதிரியும் வைக்கப்பட்டிருந்தது. மதச் சார்பற்ற மக்கள் தலைவரின் நினைவிடத்தில், ஒரு மதத்தின் புனித நூலாகக் கருதப்படும் பகவத்கீதை வைக்கப்பட்டதற்கு ஸ்டாலின், வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன்  உள்ளிட்ட  பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு பைபிள் மற்றும் குரான் நூல்களும் வைக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த இந்து மக்கள் கட்சியினர், கலாமின் பேரன் சலீம் மீது காவல் நிலையத்தில் புகார்செய்துள்ளனர்.

அப்துல்கலாம் நினைவிடத்தில் பகவத் கீதை கண்டித்து மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

 இந்நிலையில், மத வேறுபாட்டைக் கடைபிடிக்காத ஒரு தலைவரின் நினைவிடத்தில், பகவத்கீதை நூலை வைத்து மதவாத அரசியலில் ஈடுபடும் பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அரசைக் கண்டித்து, ராமேஸ்வரம் பேரூந்து நிலையத்தில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வட்டச் செயலாளர் சுடலைகாசி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் காசிநாததுரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செந்தில்வேல், கருணாகரன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கருணாமூர்த்தி, வட கொரியா உள்ளிட்ட ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!