முன்னாள் காதலியால் வீழ்த்தப்பட்ட லஸ்கர் கமாண்டர் அபுதுஜானா!

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ஹக்ரிபுரா என்ற சிறிய கிராமத்தில் லஸ்கர் இ தொய்பா கமாண்டர் அபுதுஜானாவைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இவரின் தலைக்கு அரசு ரூ.15 லட்சம் விலை நிர்ணயித்திருந்தது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் உள்ள கில்ஜித் பகுதியைச் சேர்ந்த இவர், 2010-ம் ஆண்டு காஷ்மீரில் நுழைந்து தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டு வந்தார். அபுதுஜானாவைப் பலமுறை பாதுகாப்புப் படையினர் குறிவைத்தும் தொடர்ந்து தப்பித்து வந்தார். 

லஸ்கர் இ தொய்பா கமாண்டர் சுட்டுக் கொலை

அபுதுஜானாவுக்குப் பல பெண்களிடம் தொடர்பு இருப்பது பாதுகாப்புப் படையினருக்குத் தெரியவந்தது. அவருடன் தொடர்பில் இருந்த பெண்களைப் பாதுகாப்புப் படையினர் ரகசியமாகக் கண்காணித்தனர். பெண் ஒருவர் அபுதுஜானாவால் ஏமாற்றப்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர். அந்தப் பெண்ணை இன்ஃபார்மராக மாற்றிக் கொண்டனர். ஹக்ரிபுரா பகுதியில் ருக்கியா என்ற பெண்ணை அபுதுஜானா திருமணம் செய்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. அந்தப் பெண்னுடைய வீட்டுக்கு வந்தபோது, அவரால் பாதிக்கப்பட்ட பெண் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் அளித்திருக்கிறார். காலை 4.55 மணிக்குப் பாதுகாப்பு படையினர்  வீட்டைச் சுற்றி வளைத்து, 7 மணி நேரத் துப்பாக்கிச் சண்டையில் அபுதுஜானாவைச் சுட்டுக் கொன்றனர். 

காஷ்மீர் போலீஸ் ஐ.ஜி முனீர் கான், '' அபுதுஜானா அந்தப் பகுதியில் எந்த வீட்டுக்குள்ளும் புகுந்து எதுவேண்டுமானாலும் செய்வார். இப்போது, பெண்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்கள்'' எனக் கூறியிருக்கிறார். கடந்தாண்டு கொல்லப்பட்ட ஹிஸ்புல் முகாஜிதீன் இயக்கத்தின் கமாண்டர் புர்ஹான் வானி கூட அவரின் காதலியால்தான் காட்டிக் கொடுக்கப்பட்டார் என்று சொல்லப்படுகிறது. தீவிரவாதி அபுதுஜானாவின் உடலை எடுத்துச் செல்லுமாறு பாகிஸ்தான் தூதரகத்தை இந்திய அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். பாகிஸ்தான் தூதரகம் உடலைக் கொண்டு செல்ல மறுத்ததால் இந்தியாவிலேயே முறைப்படி அடக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளனர். தீவிரவாதியின் உடலை எடுத்துச் செல்லுமாறு பாகிஸ்தானை இந்தியா கேட்டுக் கொண்டதும் இதுதான் முதன்முறை. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!