ராமநாதசுவாமி-அம்பாள் கந்தமாதன பருவதம் மண்டகப்படிக்கு எழுந்தருளல்

ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருகோயில் ஆடித் திருக்கல்யாணத் திருவிழாவின் ஒரு நிகழ்வான சுவாமி - அம்பாள் மறுவீடு செல்வதற்காக இன்று கந்தமாதன பருவதம் மண்டகப்படிக்கு எழுந்தருளினர்.
ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில் ஆடித் திருக்கல்யாணத் திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. திருவிழாவின் முக்கிய நாள்களில் ஶ்ரீ பர்வதவர்த்தினி அம்மன் நகரின் முக்கிய வீதிகளில் உள்ள மண்டகப்படிகளுக்கு எழுந்தருளியதுடன் வீதி உலாவும் நடைபெற்றது.

ராமநாதசுவாமி அம்பாள் மண்டகப்படிக்கு எழுந்தருளல்
 கடந்த 28-ம் தேதி மாலை ராமநாதசுவாமி-ஶ்ரீ பர்வதவர்த்தினி அம்மன் திருக்கல்யாண விழா சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து திருக்கல்யாண மண்டபத்தில் தினந்தோறும் சுவாமி-அம்பாள் திரு ஊஞ்சல்  நிகழ்ச்சியும் திருவிழாவின் 16-ம் நாளன்று சுவாமி தங்க நந்திகேசுவரர் வாகனத்திலும், அம்பாள் வெள்ளி யானை வாகனத்திலும் வீதி உலா வந்தனர்.
17-ம் திருநாளான இன்று காலை ஶ்ரீ பர்வதவர்த்தினி அம்மனின் தாய் வீடான கந்தமாதன பர்வத மண்டகப்படிக்கு சுவாமி-அம்பாள் தங்க கேடகத்தில் மறுவீடு சென்றனர். இதையொட்டி இன்று காலை 6 மணிக்கு ராமநாதசுவாமி திருக்கோயில் நடை சாத்தப்பட்டது. கந்தமாதன பருவத மண்டகப்படியில் மாலையில் சுவாமி-அம்பாளுக்குச் சிறப்பு தீபாராதனை நடைபெற்ற பின் கோயிலுக்குத் திரும்புவார்கள். இதன் பின்னரே கோயில் நடை திறக்கப்படும்.
கந்தமாதன பருவதம் மண்டகப்படிக்கு எழுந்தருளிய ராமநாதசுவாமி-ஶ்ரீ பருவதவர்த்தினி அம்பாளுக்கு வழியெங்கும் பக்தர்கள் தேங்காய் உடைத்து வழிபட்டனர். சுவாமி அம்பாளுடன் மண்டகப்படிக்குச் சென்ற பக்தர்களுக்கு நீர் மோர், பானக்கம் மற்றும் பிரசாதம் ஆகியன பொதுமக்களால் வழங்கப்பட்டன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!