’சிவாஜி சிலை அதே இடத்தில் நீடிக்க வேண்டும்’- திருநாவுக்கரசர்

’நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலை அதே இடத்தில் நீடிக்க வேண்டும்’ என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

சிவாஜி சிலை

தி.மு.க. ஆட்சியின்போது, மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகே, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் முழு உருவ வெண்கலச்சிலை அமைக்கப்பட்டது. அந்தச் சிலை, ’போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது; அதை அகற்ற வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. சிலையை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்றமும் கூறியது. இந்நிலையில், கடற்கரை சலையில் உள்ள சிவாஜி சிலையை அகற்றி, அடையாறு அருகே கட்டப்படும் சிவாஜி மணிமண்டபத்தில் வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதை எதிர்த்தும், அகற்றப்படும் சிவாஜி சிலையை, மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் காந்தி - காமராஜர் சிலைகளின் வரிசையில் மாற்றி அமைக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் 'நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை' சார்பில் வழக்குத் தொடர்ந்தனர்.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பெரியார், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர், அம்பேத்கர் உள்பட எல்லா தலைவர்களுக்குமே மணிமண்டபம் அல்லது நினைவிடம் தனியாகவும், சிலைகள் தனியாகவுமே உள்ளது. அதுபோல் சிவாஜி கணேசனுக்கும் மணிமண்டபமும் சிலையும் தனித்தனியாக அமைவதுதான் பொருத்தமாக இருக்கும். அதோடு, தலைவர்கள், அறிஞர்களின் சிலைகள் பொதுமக்கள் பார்வையில் படும்படியான இடத்தில் அமைப்பதுதான் சிறப்பு. அதுமட்டுமின்றி, சிவாஜிகணேசனுக்கு சென்னையில் அமைந்துள்ள ஒரே சிலையாக இது உள்ளது. எனவே, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், நடிகர்திலகத்தின் சிலையை தற்போதிருக்கும் இடத்திலிருந்து மாற்றியமைக்கும்போது, சென்னை, கடற்கரை சாலையிலேயே, காந்தி சிலைக்கும் காமராஜர் சிலைக்கும் நடுவில் மாற்றி அமைக்கவேண்டும் என்றும்  மணிமண்டபத்தில், நடிகர்திலகத்தின் வேறு சிலையை அமைக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!