டி.டி.வி.தினகரனின் மாஸ்டர் பிளான் என்ன?

 

.தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர்செல்வம் அணிகளுக்கு இடையிலான கண்ணாமூச்சி விளையாட்டு கிளைமாக்ஸை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஜூன் 4-ம் தேதி பெங்களூரு ஜெயிலில் சசிகலாவைப் பார்த்துவிட்டு நிருபர்களைச் சந்தித்த அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ''கட்சியில் தொடர்ந்து நீடிக்கிறேன். பொதுச்செயலாளர் சசிகலாதான் என்னை நியமித்தார். அவரைத் தவிர, என்னை வேறுயாரும் நீக்க முடியாது. 60 நாள்கள் பொறுத்திருக்குமாறு சசிகலா சொல்லி இருக்கிறார். ஆகஸ்ட் 5-ம் தேதிக்குப் பின், கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபடுவேன்'' என்று அதிரடியாகப் பேட்டி கொடுத்தார். ஆகஸ்ட் 4-ம் தேதியோடு தினகரன் அளித்த அந்த 60 நாட்கள் கெடு முடிகிறது. எனவே, "இனி என்ன செய்யப்போகிறார் தினகரன்?" என்று அ.தி.மு.க-வின் அனைத்து கோஷ்டிகளும் புருவத்தை உயர்த்திப் பார்க்கத் தொடங்கி இருக்கின்றன.

டிடிவிதினகரன்

 

எடப்பாடி பழனிசாமி அணியையும், ஓ.பன்னீர்செல்வம் அணியையும் இணைப்பதற்கானப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க, இரு அணிகளும் குழுக்களை அமைத்து இருந்தன. அதில், ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பிலான குழுவை அவர் ஏற்கெனவே கலைத்துவிட்டார். ஆனால், எடப்பாடி பழனிசாமி அணி அமைத்த குழு இன்னும் அப்படியேதான் இருக்கிறது. ஆனாலும், இரண்டு அணிகளுமே வெளிப்படையாகப் பேசாமல், ரகசியமாக அவ்வப்போது பேசி வருகிறார்கள். அதில், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. "சசிகலா குடும்பத்தை அ.தி.மு.க-வை விட்டே நீக்க வேண்டும்; ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணை வேண்டும்' என்பதுதான் ஓ.பன்னீர்செல்வம் வைத்த இரண்டு நிபந்தனைகள். ஆனால், எடப்பாடி தரப்பினர் அந்த நிபந்தனைகளை ஏற்கவில்லை என்பதால் இரு அணிகளும் இணையாமல் தொடர்ந்து முட்டி மோதிக்கொண்டு இருக்கின்றன. அதையே தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, கட்சியின் தலைமை அலுவலகத்துக்குள் ஆகஸ்ட் 5-ம் தேதி நுழையத் திட்டம் வகுத்துள்ளார் டி.டி.வி.தினகரன்.

இதற்கிடையில், எடப்பாடி பழனிசாமி அதிரடியாக நேற்று (ஆகஸ்ட் 1) ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமைக் கழகத்தில் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டினார். அதில், 'சசிகலா குடும்பத்தை கட்சியை விட்டு அடியோடு நீக்கப்போகிறார். ஓ.பன்னீர்செல்வத்தை பொதுச்செயலாளர் ஆக்கப்போகிறார்' என்றெல்லாம் பரபரப்பு கிளப்பி இருந்தார்கள் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள். ஆனால், மாலை 5.30 மணிக்குக் கூடிய கூட்டம், 6.10 மணிக்கு முடிந்தது. சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் என்று யாருடைய பெயரையும் உச்சரிக்காமல் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை மையப்படுத்தி நிர்வாகிகளுடன் எடப்பாடி பேச்சு நடத்தினார். 'எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மற்றும் இந்த ஆட்சியையும் இன்னும் நான்கு ஆண்டுகள் சிறப்பாக நடத்த ஒவ்வொரு நிர்வாகியும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்' என்ற கோரிக்கையோடு முடிவடைந்தது அந்தக் கூட்டம்.

டிடிவிதினகரன்

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட தினகரன் ஆதரவாளர்கள், அங்கிருந்தபடியே கூட்டத்தின் நிகழ்வுகளை அப்படியே லைவ் ஆக டி.டி.வி.தினகரனுக்கு எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். கூட்டத்தில் தன்னைப்பற்றி எந்தவிதப் பேச்சும் இல்லை என்றாலும் எடப்பாடி மற்றும் அவரது அமைச்சர்கள் மீதான டி.டி.வி.தினகரனின் கோபம் இன்னும் குறையவில்லையாம். அதனால், அவர் ஆகஸ்ட் 5-ம் தேதி தனது ஆதரவாளர்களை சென்னைக்கு வரச் சொல்லி உத்தரவிட்டுள்ளார். ''நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக ஜூலை 31-ம் தேதி தினகரன் அறிவித்தார். அதற்கான ஆலோசனைகளில் ஈடுபடவே தலைமைக்கழகம் வருகிறார்; மாவட்டவாரியாக சுற்றுப்பயணமும் செய்ய இருக்கிறார்" என தினகரன் ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். தேனி, மதுரை, கோவை, ஈரோடு, தஞ்சை, திருவொற்றியூர் என்று அவரது பயணத்திட்டமும் ரெடியாகிக் கொண்டு இருக்கிறது. 'ஆட்சியைக் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை; கட்சி தனது கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும்' என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார் டி.டி.வி. தினகரன். இதற்கு யாரேனும் எதிர்ப்பு தெரிவித்தால், அவர்களைக் கட்சியில் இருந்து நீக்கவும் அவர் தயங்கமாட்டார்' என்கிறார்கள் தினகரனுக்கு நெருக்கமானவர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!