வெளியிடப்பட்ட நேரம்: 15:59 (02/08/2017)

கடைசி தொடர்பு:15:59 (02/08/2017)

முந்திரி மரங்களைக் கடத்திய வன அதிகாரிகள்! -களமிறங்கிய பொதுமக்கள்

                                                  
ஜெயங்கொண்டத்தில் வனசரக அதிகாரிகள் திருட்டுத்தனமாக முந்திரி மரம் வெட்டிக் கடத்துவதைக் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர் பொதுமக்கள். மரம் கடத்தல் சம்பவத்தால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.             

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் உள்ள சின்ன வளையம், பெரிய வளையம், கடாரங்கொண்டான், ஆயுதகளம், தேவாமங்கலம் ஆகிய கிராமங்களில் நான்காயிரம் ஏக்கர் பரப்பளவில் முந்திரி மரம், தைலமரம் என பல வகையான மரங்கள் வளர்ந்துள்ளன. வனசரகத்துக்குட்பட்ட இந்தக் காடுகளில் முந்திரி மரத்தின் கிளைகள் மற்றும் முட்களை வெட்டுவதற்காக ஆண்டுக்கொரு முறை ஏலம் விடப்படுவது வழக்கம். ஏலத்தில் அதிக விலை கேட்பவர்களுக்கு பணிகள் ஒதுக்கப்பட்டு வந்தன. இதில் வடக்கு ஆயுதகளம் கிராமத்தில் மட்டும் 85 ஏக்கர் பரப்பளவில் முந்திரி மரங்கள் வளர்ந்துள்ளன. இந்த மரங்களின் கிளைகளையும் முட்களையும் வெட்டும் பணியை இப்பகுதி மக்களே ஆண்டுதோறும் ஒப்பந்தம் எடுத்துச் செய்துவந்தனர். 'இந்த ஆண்டும் ஏலம் விடுவார்கள்' என எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், ஏல நடைமுறையைப் பின்பற்றாமல், வனசரக அதிகாரிகளே தாங்களுக்குள் சிண்டிகேட் வைத்துக் கொண்டு மராமத்துப் பணிகளைச் செய்துவந்தனர். 'முந்திரி மரத்தின் கிளைகளை வெட்டுகிறோம்' என்ற பெயரில், அரிய வகை மரங்களையும் வெட்டிக் கடத்துவதாகத் தகவல் வந்துள்ளது. 

இதுகுறித்து வன அதிகாரிகளிடம் சென்று பொதுமக்கள் கேட்டுள்ளனர். அவர்களும், ' நாங்கள் யாருக்கும் ஏலம் விடவில்லை' என உறுதியாகக் கூறிவிட்டனர். இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள், முந்திரி காடுகளைத் தீவிரமாகக் கண்காணித்தனர். அப்போது மரக்கட்டைகளை துண்டுகளாக்கி, லாரியில் லோடு ஏற்றுவதைக் கண்டு அதிர்ந்து போய் சிறைப் பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஜெயங்கொண்டம் போலீஸார், ' லாரியை விட்டுவிடுங்கள்' என சமசரம் பேசினர். இதனை பொதுமக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ' மராமத்துப் பணியை நீங்களே எடுத்துச் செய்கிறீர்கள். யாருடைய உத்தரவின்பேரில் இவ்வாறு செய்கிறீர்கள்' எனக் கேட்டு தகராறில் ஈடுபட்டனர். இதனால் லாரியை எடுக்க முடியாமல் அதிகாரிகள் தவித்தனர். வன அதிகாரிகளின் இந்தச் செயல் ஜெயங்கொண்டம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.