Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'எங்கே செல்கிறார் தினகரன்?' - 'ஆகஸ்ட் 5' அதிர்ச்சி 

அ.தி.மு.க. கட்சித் தலைமை அலுவலகம்

ராயப்பேட்டை கட்சித் தலைமை அலுவலகத்துக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி வரும் முடிவை டி.டி.வி.தினகரன் திடீரென மாற்றிவிட்டதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். அதே நாளில் அவர், தேனியில் தன்னுடைய ஆதரவாளர்களைச் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பும் ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைய 60 நாள் காலக்கெடு விதித்திருந்தார் டி.டி.வி.தினகரன். அவர் விடுத்த காலக்கெடு ஆகஸ்ட் 4-ம் தேதியுடன் முடிவடைகிறது. அந்த அணிகள் இணையவில்லை என்றால், ஆகஸ்ட் 5-ம் தேதி தினகரன் ராயப்பேட்டை கட்சித் தலைமை அலுவலகத்துக்கு வருவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். டி.டி.வி.தினகரனின் வருகையைத் தடுப்பது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் நேற்று மாலை கட்சித் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். அப்போது, ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் இணைவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

கட்சி அலுவலகத்துக்கு தினகரன் ஆதரவாளர்களுடன் வந்தால் அது, சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தினகரனின் நடவடிக்கைகளை உளவுத்துறை போலீஸார் உன்னிப்பாகக் கண்காணித்து வந்தனர். முதல்வர் அலுவலகத்துக்கு தினகரன் குறித்த உளவுத்துறை ரிப்போர்ட் உடனுக்குடன் கொடுக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில் பெங்களூருச் சிறையில் சசிகலாவைச் சந்திக்க தினகரன் சென்றுள்ளார். சசிகலாவுடன் ஆலோசனை நடத்திய பிறகு, தினகரன் அதிரடியான அறிவிப்பை வெளியிடுவார் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தினகரனின் அதிரடி நடவடிக்கையால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் இணைய வழியை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.

தினகரன்

ஆகஸ்ட் 5-ம் தேதி தினகரன், கட்சி அலுவலகத்துக்கு வந்தால் அவர் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் வெளியானது. இதனால் சில தினங்களாக ராயப்பேட்டை அ.தி.மு.க. கட்சித் தலைமை அலுவலகத்துக்குக் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக அவ்வை சண்முகம் சாலையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்படவுள்ளது. இதையெல்லாம் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த தினகரன், தன்னுடைய ரூட்டை மாற்றிவிட்டாராம்.

இதுகுறித்து தினகரனின் நெருக்கமானவர் ஒருவர் கூறுகையில், "கட்சித் தலைமை அலுவலகத்துக்குச் சென்றால் நிச்சயம் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தி, நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி தரப்பு முயற்சி செய்யும். மேலும், அதைக் காரணமாகக் கருதி அ.தி.மு.க. கட்சித் தலைமை அலுவலகத்தையும் முடக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். எனவே, ஆகஸ்ட் 5-ம் தேதி கட்சித் தலைமை அலுவலகத்துக்குச் செல்லாமல் தன்னுடைய ஆதரவாளர்களைச் சந்திக்க முடிவு செய்துள்ளார். முதல்கட்டமாக தேனி மாவட்டத்தில் உள்ள ஆதரவாளர்களைச் சந்திக்கிறார்" என்றனர்.

இதுகுறித்து உளவுத்துறை போலீஸார் கூறுகையில், "ஆகஸ்ட் 5-ம் தேதி தினகரன், கட்சி அலுவலகத்துக்கு வருவதாக எங்களுக்கு முதலில் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அரசுக்கு ரிப்போர்ட் கொடுத்தோம். தினகரன், சசிகலாவைச் சந்தித்த பிறகு, அவர் என்ன முடிவு எடுப்பார் என்று எங்களுக்கு இதுவரை தகவல் தெரியவில்லை. இதற்கிடையில் ஆகஸ்ட் 5-ம் தேதி அவர் தேனிக்குச் செல்லவுள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனால், அவர் கட்சித் தலைமை அலுவலகத்துக்கு வர வாய்ப்பில்லை. மேலும், தினகரனின் ஆதரவாளர்கள்தான் அவர் கட்சித் தலைமை அலுவலகத்துக்கு வருவதாகத் தெரிவித்தனர். எந்தப் பேட்டியிலும் தினகரன், கட்சித் தலைமை அலுவலகத்துக்கு வருவதாகத் தெரிவிக்கவில்லை. ஆகஸ்ட் 5-ம் தேதிக்குப் பிறகு, கட்சிப் பணிகளில் ஈடுபடுவதாகத் தெரிவித்தார்" என்றனர்.

 தினகரன், கட்சி அலுவலகத்துக்கு வராத தகவல் உளவுத்துறை மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவந்துள்ளது. இதனால், அவர் தரப்பினர் நிம்மதியடைந்துள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement