வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (02/08/2017)

கடைசி தொடர்பு:18:00 (02/08/2017)

பெட்ரோ கெமிக்கல் மண்டலமா? டெல்டா விவசாயிகள் விரைவில் டெல்லியில் போராட்டம்

petro chemicals reginal in caviri delta

காவிரி டெல்டா மாவட்டங்களை பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 45 இடங்களில் புதிய கிணறுகள் அமைத்து பெட்ரோல் கேஸ் எடுக்க ஓ.என்.ஜி.சி-க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு காவிரி டெல்டா விவசாயிகள் மற்றும் பொதுமக்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஓ.என்.ஜி.சி நிறுவனம் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள விளைநிலங்களில் ராட்சத கிணறுகள் அமைத்து பெட்ரோல் கேஸ் எடுத்து வருகிறது. இதனால் இப்பகுதிகளில் நிலத்தடிநீர் கடுமையாக பாதிக்கப்பட்டதோடு, காற்று மற்றும் மண் உள்ளிட்டவைகள் மாசடைந்து நஞ்சாகியுள்ளது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது. இதுபோன்ற ஆபத்தான திட்டங்கள் இங்கு வராமல் தடுக்கும் நோக்கத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்தது. இந்நிலையில், கொஞ்சமும் எதிர்பாராத பேரிடியாக காவிரி டெல்டாவை, பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பை கைவிடக் கோரி டெல்டா நீர் ஆதார பாதுகாப்பு மையம், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்டவைகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இதன் தலைவர் இளங்கீரனிடம் பேசியபோது, '25-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் டெல்லி சென்று பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை நேரில் சந்தித்து இத்திட்டத்தை கைவிடக்கோரி வலியுறுத்தப் போகிறோம். செவி சாய்க்கவில்லையென்றால், தற்பொழுது டெல்லியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், அங்கு கடுமையான தொடர் போராட்டங்களை நடத்தவுள்ளோம்” என்றார்.