125 விவசாய குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் ! - நெகிழ வைத்த தனுஷ்!

பருவமழை பொய்த்துவிட்ட சூழலில், கடுமையான வறட்சியின் காரணமாக தமிழக அளவில் பல விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த இயலாத சூழலில் நிகழ்ந்த விவசாயிகளின் தொடர் தற்கொலைகளால் இந்தியாவே தமிழகத்தை உற்று நோக்கியது. பெயரளவில் அரசிடம் இருந்து நிதியுதவி அளிக்கப்பட்ட போதிலும், ஆங்காங்கே சில திரையுலகைச் சேர்ந்தவர்களும் நிதியுதவியளித்ததும் அதை விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள் விமர்சித்ததையும் பார்க்க முடிந்தது.

இந்நிலையில் இன்று குடும்பத்தோடு தனது குலதெய்வம் கோயிலுக்கு வந்திருந்த நடிகர் தனுஷ், தமிழகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 125 விவசாயக் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியளித்தார். அப்போது பேசிய தனுஷ், ``விவசாயிகளுக்கான இந்த உதவியை, என் அம்மா பிறந்த இந்த சங்கராபுரம் கிராமத்தில் கொடுப்பதைப் பெருமையாகவும்  மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன்’’ என்றார் நெகிழ்ச்சியுடன்.

நடிகர் தனுஷ், பத்திரிகையாளர் ராஜீவ் காந்தியின் ‘கொலை விளையும் நிலம்’ என்ற குறும்படத்தைப் பார்த்த பிறகு, நம் விவசாயிகளுக்கு எதாவது உதவி செய்ய வேண்டும் என்று தோன்றியதாகவும், அதன்படி முதல் கட்டமாக, தமிழகம் முழுவதும் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக சுமார் 250 பேரின் தகவல்களை முதலில் திரட்டியிருக்கிறார். பிறகு, இயக்குநர் சுப்பிரமணியம் சிவா மற்றும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஆகியோரின் தலைமையில் 11 பேர் கொண்ட குழுவை அமைத்து, விவசாயக் குடும்பங்களுக்குச் சென்று ஆய்வு நடத்த வைத்தார். அதன்படி 125 விவசாய குடும்பங்களைத் தேர்வுசெய்து, இன்று தலா 50 ஆயிரம் ரூபாயை நேரில் வழங்கினார். 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!