அணி மாறுகிறாரா மாஃபா பாண்டியராஜன்?

மாஃபா பாண்டியராஜன்

''நான், அணி மாறப் போகிறேன் என்று சொல்வது முற்றிலும் வதந்தி. பன்னீர்செல்வம் அணியிலேயே இருக்கிறேன்... அனைத்து நிகழ்ச்சிகளிலும் அவருடன் கலந்துகொள்கிறேன்'' என்கிறார் மாஃபா பாண்டியராஜன் மிகுந்த மகிழ்ச்சியுடன்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தபிறகு, ஓ.பன்னீர்செல்வம் மூன்றாவது முறையாகத் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார். சில நாள்கள் கழிந்த நிலையில், ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான சசிகலா, அ.தி.மு.க நிர்வாகிகளால் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து சசிகலா தரப்பின் கைஓங்க ஆரம்பிக்க... ஆட்சியிலும் இடம்பிடிக்க முயற்சி செய்தார். இதனையடுத்து, பன்னீர்செல்வம் தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன், ஜெயலலிதா சமாதிக்குச் சென்று தியானம் செய்தார். இந்தத் தியானத்துக்குப் பிறகு தமிழக அரசியல் முற்றிலும் தலைகீழாக மாறியது. சசிகலா தலைமையில் ஓர் அணியும், பன்னீர்செல்வம் தலைமையில் மற்றோர் அணியும் என அ.தி.மு.க இரண்டாகப் பிரிந்தது. தியானத்துக்குப் பிறகு பன்னீர்செல்வத்துக்கு மக்கள் ஆதரவு பெருகியதையடுத்து, சசிகலா அணியில் இருந்த முன்னணி நிர்வாகிகள் பலரும் பன்னீர்செல்வத்திடம் தஞ்சம் அடைந்தனர். இதனால், அவருடைய பலம் அதிகமானது. இதன் காரணமாகச் சசிகலா அணியில் அங்கம்வகித்த சில எம்.எல்.ஏ-க்களும், எம்.பி-க்களும் பன்னீர்செல்வத்தைச் சந்தித்து அவருடன் இணைந்துகொண்டனர். இதில், ஜெயலலிதா அமைச்சரவையில் அங்கம் வகித்த, அவருக்கு மிகவும் விசுவாசமாக இருந்த மாஃபா பாண்டியராஜனும் ஒருவர். அவரும் பன்னீர்செல்வம் அணியில் இணைந்தபிறகு, அந்த அணி மேலும் வலுப்பெறத் தொடங்கியது. தொடர்ந்து இரு அணிகளின் இணைப்புப் பேச்சுவார்த்தை குறித்த செயல்களிலும் அவருடைய கருத்துகள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தன. தொடர்ந்து அந்த அணியில் பக்கபலமாக இருந்துகொண்டிருக்கும் மாஃபா பாண்டியராஜனைத் தற்போது பன்னீர்செல்வத்துடன் குறித்த கூட்டங்களில் பார்க்க முடிவதில்லை எனச் செய்திகள் கசிய ஆரம்பித்தன. இதனால், பன்னீர்செல்வத்துக்கும், அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதா அல்லது எடப்பாடி தரப்பு அவரை இழுக்க முயற்சி செய்கிறதா அல்லது அவரும் அணி மாற ஆவலுடன் இருக்கிறாரா என நாளுக்குநாள் அ.தி.மு.க நிர்வாகிகளிடம் சந்தேகங்கள் எழுந்துகொண்டிருந்தன. இதற்குக் காரணம், பன்னீர்செல்வம் கலந்துகொள்ளும் எந்த நிகழ்வுகளிலும் மாஃபா பாண்டியராஜன் இருப்பதற்கான அறிகுறிகளோ, புகைப்படங்களோ இல்லை. இதன் காரணமாகத்தான் அவர் ஒதுங்குகிறாரா... அல்லது ஓரங்கட்டப்படுகிறாரா என்ற கேள்விகள் எழ ஆரம்பித்தன.  

இந்த நிலையில், அ.தி.மு.க அம்மா அணி பேச்சாளரும் தினகரனின் ஆதரவாளருமான நாஞ்சில் சம்பத், ''பாண்டியராஜன் எடப்பாடி அணிக்கு வந்துவிடுவார்" என்று சொல்லியிருந்தார். இதற்கு மறுப்புத் தெரிவிக்கும் விதமாக மாஃபா பாண்டியராஜன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ''அம்மா வழியில் செயல்படும் பன்னீர்செல்வத்துடனே நான் தொடர்ந்து செயல்படுவேன். அணி மாறப்போவதாக வெளியாகும் தகவல்கள் அனைத்தும் வதந்தியே'' என்று பதிவிட்டு இருந்தார்.

தற்போது மாஃபா பாண்டியராஜன் எந்த அணியில் இருக்கிறார்... அவர், வேறு அணிக்குச் சென்றுவிடுவாரா... பன்னீர்செல்வம் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் பங்கெடுக்காதது ஏன் போன்ற  கேள்விகளுக்கு விடை தெரிய அவரிடமே பேசினோம். ''எனக்கு வேறு அணிக்குச் செல்லக்கூடிய எந்த எண்ணமும் இல்லை. இதுபோல் தினமும் பல வதந்திகள் பரவி வருகின்றன. பன்னீர்செல்வம், பங்குகொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் நானும் கலந்துகொள்கிறேன். அப்படிப்பட்ட நிகழ்வுகளில் போட்டோகளுக்கும், வீடியோகளுக்கும் முந்திக்கொண்டு செல்ல விருப்பமில்லாததால், நான் ஒதுங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. டி.டி.வி.தினகரன் தரப்போ, பிரபல செய்தித் தொலைக்காட்சிகளோதான் இதைத் தவறாகச் சொல்லி வருகின்றன. எங்கள் அணியில் மூன்று செய்தித் தொடர்பாளர்கள் இருந்தும், நான் நேரடியாகவே செய்தியாளர்களைச் சந்தித்து வருகிறேன். வதந்தியாகப் பரவிவரும் செய்திகள் அனைத்தும் முற்றிலும் தவறானவை'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!