கிராமப்புற அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்... அரசுப் பள்ளியில் அதிரடி காட்டிய கிரண்பேடி...

 கிரண்பேடி

''அனைத்துக் கிராமப்புற பள்ளிகளிலும் இனி முன்னறிவிப்பின்றி ஆய்வுகள் நடத்தப்படும். அப்போது கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், செயல் குறிப்புகள் தயாரிக்கப்பட்டுக் கிராமப்புற பள்ளிகளின் தரம் மேம்படுத்தப்படும்” என்று பொதுமக்கள் புகாரின் அடிப்படையில், அரசுப் பள்ளியை ஆய்வுசெய்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்திருக்கிறார்.

அரசுப் பள்ளி

புதுச்சேரி, பாகூர் அடுத்த சேலியமேடு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், அங்கிருக்கும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் அவலத்தைப் பற்றித் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், ''மதிப்பிற்குரிய மேடம் அவர்களுக்கு... பாகூர் பாரதி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நல்ல ஆசிரியர்கள் வேண்டும். ஆசிரியர்கள் புரியும்படி பாடம் நடத்துவதில்லை. கடந்த 2016 - 17-ம் கல்வியாண்டில் ப்ளஸ் - 2 பொதுத்தேர்வு எழுதிய 125 மாணவர்களில் 38 பேர்தான் தேர்ச்சியடைந்தார்கள். எனவே, அந்தப் பள்ளியைக் கண்காணிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் (மாணவர்கள் முன்னேற்றத்துக்காக)” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதையடுத்து, சம்பந்தப்பட்ட அந்தப் பள்ளிக்கு முன் அறிவிப்பின்றி அதிரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டார் கிரண்பேடி. அப்போது, அந்தப் பள்ளியில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் கணித ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதைக் கண்டறிந்தார். அதேபோல வகுப்பு நேரத்தில் மாணவர்கள் பள்ளியில் இல்லாமல் வெளியே செல்வதையும் கண்டுபிடித்தார். மேலும், பள்ளி வளாகத்தில் இருந்த கழிவறைகளையும் சென்று பார்வையிட்டவர், அது முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்ததோடு துர்நாற்றம் வீசியதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். அதைத்தொடர்ந்து பள்ளியின் செயல்பாடுகள் குறித்தக் கருத்துகளை அங்கிருந்த மாணவர்களிடம் எழுத்துப்பூர்வமாக எழுதிப் பெற்றுக்கொண்டார். அதில், 'பள்ளியின் செயல்பாடு மிகமிக மோசம்' என்று அதிகப்படியான மாணவர்கள் குறிப்பிட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கிரண்பேடி

தொடர்ந்து அங்கு பணிபுரியும் ஆசிரியர்களிடமும் பள்ளியின் செயல்பாடுகள் குறித்து விவரமாகக் கேட்டறிந்தார். அதையடுத்து, சமூக வலைதளத்தில் கருத்துத் தெரிவித்த அவர், ''கடந்த ஓர் ஆண்டாக முதல்வர் மற்றும் துணை முதல்வர் பதவிகள் காலியாகவே உள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். விரைவில், அந்தப் பள்ளிக்கு மறு ஆய்வுக்குச் செல்வேன். அப்போது, அந்த மாணவர்களை அழைத்துப் பேசி அவர்களின் குறைகள் தீர்க்கப்படும். அதேபோல, அனைத்துக் கிராமப்புற பள்ளிகளிலும் முன்னறிவிப்பின்றி ஆய்வுகள் நடத்தப்படும். அப்போது கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் செயல் குறிப்புகள் தயாரிக்கப்பட்டுக் கிராமப்புற பள்ளிகளின் தரம் மேம்படுத்தப்படும்” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், ''அரசுப் பள்ளிகளின் இந்த நிலைகளை மாற்றுவதற்குக் கல்வித் துறை அதிகாரிகள் தொடர்ச்சியான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோல, மாணவர்களின் பெற்றோர்களும் பள்ளிகளில் உள்ள குறைபாடுகளைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சுட்டிக்காட்ட வேண்டும்” என்றும் அறிவுறுத்தியிருக்கிறார்.

 

அரசுப் பள்ளி

அரசுப் பள்ளிஅத்துடன், மாணவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளையும்... அதற்கு மாணவர்கள் அளித்த பதில்களையும் வெளியிட்டிருக்கிறார்.

1. உங்கள் பள்ளியை எப்படி மதிப்பிடுவீர்கள்?

மோசம், மிக மோசம்

2. உங்கள் பள்ளியில் என்னென்ன தவறுகள் நடக்கின்றன... எந்த வசதிகள் இல்லை?

கற்பிக்கும் விதம் சரியில்லை; ஆசிரியர்கள் பற்றாக்குறை; பள்ளி அசுத்தம்; கழிப்பறைகள் இல்லை; குடி தண்ணீர் மற்றும் மதிய உணவு இல்லை; வேதியியல் ஆசிரியர் சரியில்லை; அவரை நீக்க வேண்டும்; ஆசிரியர்கள் பயமுறுத்துகிறார்கள்; வகுப்பறைகளில் போதுமான வசதிகள் இல்லை.

3. பள்ளியைவிட்டு ஏன் வெளியேறுகிறீர்கள்?

ஆசிரியர்கள் வகுப்புக்கு வருவதில்லை; சரியாகச் சொல்லித் தருவதில்லை; கழிவறைகள் இல்லை; மதிய உணவு இல்லை; வகுப்பறைகள் பற்றாக்குறை.

4. உங்கள் பள்ளியின் தரத்தை உயர்த்த என்னென்ன வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

குடிநீர் வசதி, கழிப்பறைகள், மதிய உணவு, மாணவர்களுக்கு நூலகம், தரமான கல்வி, புதிய ஆசிரியர்கள் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள் மாணவர்களை மரியாதையாக நடத்த வேண்டும், சாதி மோதல்களைத் தடுக்க வேண்டும்; சி.பி.எஸ்.இ மற்றும் சிறப்பு வகுப்புகளைக் கொண்டு வரவேண்டும்.

ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் தனியார் பள்ளிகளைத் தரம் உயர்த்தப் பாடுபட்டுக்கொண்டிருக்கும் நிலையில், ஆளுநர் கிரண்பேடியின் இந்த நடவடிக்கைக்கு மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் இன்று கல்வித் துறை அதிகாரிகளுடன் மீண்டும் அந்தப் பள்ளிக்குச் சென்ற கிரண்பேடி மாணவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது அவர்களுக்கு ஆங்கிலம் கற்கும் திறன் குறைவாக இருப்பதைக் கண்ட அவர், ''அதற்குக் கூடுதல் பயிற்சி எடுக்க வேண்டும்'' என்று அறிவுறுத்தினார். மேலும், ''ஆங்கிலக் கல்வியில் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக நவம்பர் மாதம் முதல் வாரத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பேச்சு, எழுத்துப்போட்டிகள் நடத்தப்படும்'' என்று தெரிவித்தார். அதேபோல, ''அதில் வெற்றிபெறும் மாணவர்கக்கு 'இ-டேப வழங்கப்படும் என்றும், கிராமப்புறம் மட்டுமல்லாமல் நகர்ப்பகுதிகளில் இருக்கும் அரசுப் பள்ளிகளிலும் ஆளுநர் மாளிகை சார்பாக அதிரடி ஆய்வுகள் நடத்தப்படும்'' என்றும் அவர் தெரிவித்தார்.

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!