பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கக்கோரி திருவாடானையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவில் உள்ள 80-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு பயிர் காப்பீடு வழங்காததைக் கண்டித்து, இன்று விவசாயிகள் திருவாடானையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாகத் திகழ்வது திருவாடானை தாலுகா பகுதி. அந்தப் பகுதியில் இந்த ஆண்டு மழை பொய்த்ததால் கடும் வறட்சி நிலவியது. இதனால் விவசாயமும் பொய்த்தது. அப்பகுதி விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். இந்த பாதிப்பில் இருந்து விவசாயிகள் ஓரளவாவது மீள்வதற்கு அரசின் பயிர் காப்பீட்டு திட்டம் உதவி வந்ததது. இதன்படி திருவாடானை தாலுகாவில் உள்ள நீர்க்குன்றம், மங்களகுடி, கடம்பூர், கூகுடி உள்ளிட்ட 14-க்கும் மேற்பட்ட 80 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது பயிர்களை மத்திய அரசின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கடந்த 2016-17-ம் ஆண்டுக்கான காப்பீட்டுத் தொகையைச் செலுத்தியிருந்தனர்.

பயிர் காப்பீடு தொகை கோரி விவசாயிகள் திருவாடானையில் ஆர்ப்பாட்டம்
 

ஆனால், இப்பகுதியைச் சேர்ந்த ஒரு சில கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மட்டுமே பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்தும், பயிர் காப்பீட்டுத் தொகை செலுத்திய அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி திருவாடானையில் இன்று விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவாடானை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்ட முடிவில் திருவாடானை வட்டாட்சியரிடம் கோரிக்கைகள் குறித்த மனுவினை அளிக்கச் சென்றனர். ஆனால் அங்கு வட்டாட்சியர் இல்லாததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த அலுவலர் ஒருவர் விவசாயிகளின் மனுவினை பெற்றதை தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!