ரெபோ வட்டி விகிதக் குறைப்பு பயன்கள் எங்களுக்கு வேண்டும் - திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கோரிக்கை | Tirupur exporters association request to bankers for giving interest rate reduction benefits

வெளியிடப்பட்ட நேரம்: 06:33 (03/08/2017)

கடைசி தொடர்பு:09:54 (03/08/2017)

ரெபோ வட்டி விகிதக் குறைப்பு பயன்கள் எங்களுக்கு வேண்டும் - திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கோரிக்கை

வங்கிகளுக்கான ரெபோ வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருப்பதால், அதற்கான பயன்களை திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு உடனடியாக வங்கிகள் வழங்க வேண்டும் என திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மும்பையில் இன்று ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், வங்கிகளுக்கான ரெபோ வட்டி விகிதம் 6.25 சதவிகிதத்திலிருந்து 6 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி விதிப்பின்மூலம் தினந்தோறும் பல்வேறு விதமான சிக்கல்களைச் சந்திக்கும் திருப்பூர் தொழில்துறையினருக்கு, ரெபோ வட்டி விகிதத்தின் பயன்களைப் பெறுவதற்கான வாய்ப்புகளை வங்கிகள் அளிக்க வேண்டும். எனவே, ரெபோ வட்டி விகிதம் எதிர்பார்த்த அளவுக்கு தற்போது 0.25 சதவிகிதம் அளவு வரை குறைக்கப்பட்டுள்ளதால், அதன் பயன்களை ஏற்றுமதியாளர்களுக்குக் கிடைக்கும் வகையில் வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தினர் முன்வைத்திருக்கிறார்கள்.