வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (03/08/2017)

கடைசி தொடர்பு:11:45 (03/08/2017)

ஆடித் தபசு திருவிழா... சங்கரநாராயண சுவாமி கோயிலில் தேரோட்ட ஏற்பாடுகள் தீவிரம்!

சங்கரன்கோவில்

நெல்லை மாவட்டம் சங்கரநாராயண சுவாமி கோயிலில், ஆடித் தபசு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத் தேரோட்டம், நாளை நடைபெற உள்ளது.  இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

தமிழகத்தில் உள்ள முக்கிய சிவத் தலங்களில், சங்கரன்கோயிலில் உள்ள சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலும் ஒன்று. இங்கு, ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் ஆடித் தபசு திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா, கடந்த 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் பின்னர், ஒவ்வொரு நாளும் சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அலங்கார ஆராதனை மற்றும் அம்மன், சுவாமி வீதிஉலா நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் நடக்கும் மண்டகப்படியில், சிறப்புச் சொற்பொழிவுகள் மற்றும் கலைநிகழ்சிகளும் நடைபெற்றன.
 
’அரியும் சிவனும் ஒன்று’ என்கிற உன்னதமான தத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாகவே, ஆடித் தபசு திருவிழா கொண்டாடப்படுகிறது. இதை விளக்கும் வகையில், ஒற்றைக் காலில் தவம் இருக்கும் கோமதி அம்பாளுக்கு சங்கரலிங்க சுவாமி, தனது உடலின் ஒரு பாதியை சங்கரராகவும் மறுபகுதியை நாராயணராகவும் மாற்றி, சங்கரநாராயணர் கோலத்தில் காட்சி அளித்தார். இந்த அரிய நிகழ்ச்சியே, ஆடித் தபசு திருவிழாவாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.   

கோவில்

விழாவின் 9-ம் நாளான 4-ம் தேதி, தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி, காலை 5 மணிக்கு கோமதி அம்பாள் ரதத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர், 9 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தபசுக் காட்சி 6-ம் தேதி நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு, மூலஸ்தானத்தில் உள்ள சங்கரலிங்க சுவாமி மற்றும் கோமதி அம்பாளுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, கும்ப அபிஷேகம் நடக்க உள்ளது. பகலில், கோமதி அம்பாள் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 6 மணிக்கு தெற்கு ரதவீதியில் சங்கரலிங்க சுவாமி ரிஷப வாகனத்தில் சங்கரநாராயணராகக் காட்சி கொடுக்க உள்ளார்.

தேரோட்டத்தின்போது, லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். அத்துடன், சங்கரநாராயணராகக் காட்சியளிக்கும் தபசுக் காட்சியைக் காணவும் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள். அதனால், இந்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். காவல்துறையினர், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்துவருகின்றனர்.