Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

”சிவாஜி சிலையை அகற்றிவிட்டீர்கள்... இனி சிக்கல்தான்!" - கொந்தளிக்கும் சிவாஜி ரசிகர்கள்

சிவாஜி சிலை

'சிவாஜியைப்போன்று நடிக்கக் கூடிய ஒரு நடிகர் அகில உலகிலும் இல்லை. ஒருவேளை, ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோ முயற்சி செய்தால், இவரைப் போல நடிக்கக்கூடும்' என அண்ணாவால் பாராட்டப்பெற்றவர் சிவாஜி கணேசன். “நடிப்புக்கு ஓர் பல்கலைக்கழகம்” என பாராட்டப்பட்டவர். தமிழ்த்திரைப்படத்துறைக்கும் ஓர் அடையாளமாக இன்றளவும் கருதப்படுபவர். ஆனால் தம் நடிப்பால் மக்களின் கவலையை மறக்கவைத்த அந்தக் கலைஞனின் சிலை விவகாரத்தில் அரசு காட்டிய மெத்தனமும், அதனால் சென்னையில் அவருக்கென இருந்த ஒரு சிலையும் நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டதும் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தன் நடிப்பால் திரையுலகைக் கட்டி ஆண்ட அந்த மகாநடிகனை தமிழ்த்திரையுலகமும் தமிழக அரசும் சிலை விவகாரத்தில் அவமதித்துவிட்டதாக குமுறுகின்றனர் அவர்கள்.  இதுகுறித்து நம்மிடம் பேசிய சிவாஜி சமூக நலப் பேரவையின் தலைவரான சந்திரசேகரன், ''தமிழகத்தின் கலை அடையாளங்களில் தவிர்க்கமுடியாதவர் சிவாஜி கணேசன். தமிழகத்தில் சிவாஜிக்கென சென்னை டிஜிபி அலுவலகம் அருகே, இந்த ஒரு சிலை மட்டுமே இருந்தது. மற்ற தலைவர்களுக்கு திரும்புகிற திசையெல்லாம் சென்னையில் சிலைகள் இருக்கின்றன. ஆனால் இந்த ஒரு சிலைதான் அரசின் கண்களை உறுத்தியிருக்கிறது என்பது வேதனை தருகிறது.

கே. சந்திரசேகரன்இதுதொடர்பாக நாகராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு நியாயமானதொரு வாதத்தை வைக்கவில்லை. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அடையாறில் சிவாஜிக்கு கட்டப்பட்டுவரும் மணிமண்டபத்தில் அதை வைக்கப்போவதாக ஒப்புக்கொண்டு அதை நிறைவேற்றியிருக்கிறது இன்று. உண்மையில் கடந்த பத்து வருடங்களில் அந்த சிலையால் எந்த விபத்துக்களும் அங்கு ஏற்பட்டதில்லை. எங்களுக்கு சிலையை அகற்றுவதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. ஆனால் அதை சிவாஜிக்கு மரியாதை செலுத்தும்விதமாக அங்கேயே வேறிடத்தில் வைத்திருக்கலாமே என்றுதான் சொல்கிறோம். விபத்து என்பது சென்னையில் நடக்காத இடம் ஒன்று இருக்கிறதா...நீதிமன்றத்தின் உத்தரவை இன்று கர்மசிரத்தையாக கேட்கும் தமிழக அரசு கடந்த காலத்தில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தையும் நிறைவேற்றிவிட்டதா?...

டாஸ்மாக் கடைகளை மூடச் சொன்ன உயர்நீதிமன்றத்தின் உத்தரவு என்ன ஆனது?...உள்ளாட்சித் தேர்தலை நடத்தச் சொல்லி பல மாதங்கள் ஆகிறது...அதை நடத்திவிட்டார்களா...தங்களுக்கு சின்னம் இல்லாததால் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இன்றுவரை மதிப்பளிக்கவில்லை. அண்ணா நுாலகம் தொடர்பாக எத்தனையோ உத்தரவுகள் இன்றும் நிறைவேற்றப்படாமல் உள்ளன... இத்தனைக்கும் செவிமடுக்காத தமிழக அரசு சிவாஜி சிலை விவகாரத்தில் மட்டும் நீதிமன்ற உத்தரவை பின்பற்றியிருக்கிறது.

சிலையை அதே பகுதியில் பொதுமக்கள் பார்வையில் படும் ஓரிடத்தில் வைக்க நாங்கள் வைத்த கோரிக்கைககு எந்த உத்தரவாதமும் அளிக்காதது சிவாஜி ரசிகர்களை வேதனைப்பட வைத்துள்ளது. இது சிவாஜிக்கான அவமானம் இல்லை; அரசுக்கு ஏற்பட்ட அவமானம்! ஒரு தமிழனுக்கு, தமிழ்த்திரைப்படத்துறைக்கு சேவையாற்றிய கலைஞனுக்கு தமிழக அரசு செய்கிற மரியாதை இதுதானா? அரசு இதில் உறுதியாக இருந்திருந்தால் இன்று சிவாஜிக்கு இந்த அவமானம் நேரிட்டிருக்காது. விபத்து நடக்கும் என்று சிலையை அகற்றியிருக்கிறார்கள். இனி எந்தக் காலத்திலும் அங்கு விபத்து நடக்காது என காவல்துறையும் அரசும் இப்போது உத்தரவாதம் அளிப்பார்களா...?. தலைமைச் செயலகம் உள்ள பகுதியில் அடிக்கடி விபத்து நடக்கிறதென்றால் உடனே அதை அகற்றுவார்களா இவர்கள்...இது சிவாஜியை அவமதிக்க திட்டமிட்டு நடந்த ஒன்று. திருவிளையாடலில் நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே என சிவாஜி பாடியிருப்பார். அது பொய்யல்ல; சிவாஜி சிலையை அகற்றியிருக்கிறார்கள்...இதற்கான விலையை அரசு கொடுப்பார்கள்” என்றார் வேதனையான குரலில்.

சிவாஜி கணேசன்

தொடர்ந்து, “ஆந்திராவில் என்.டி.ஆர் ஓர் அரசியல் கட்சியை சேர்ந்தவரானாலும் அவருக்கான மரியாதையை அந்த மாநில அரசும் மக்களும் தரத்தவறவில்லை. கர்நாடகாவிலும் ராஜ்குமாருக்கு மணிமண்டபம் கட்ட அத்தனை அரசியல் கட்சிகளும் நடிகர்களும் ஒருங்கிணைந்து குரல் கொடுத்தனர். அங்கு யாருக்கும் ராஜ்குமார் சிலையை அகற்றச் சொல்ல துணிச்சல் வரவில்லை. ஆனால் தமிழகத்தில் மட்டும்தான் கலைஞர்களை அரசியலோடு பொருத்திப்பார்க்கிற அவலம் இருக்கிறது. தென்னிந்திய நடிகர் சங்கம் தனது மூத்த கலைஞனுக்கு நடந்த இந்த அவமதிப்பை கண்டுகொள்ளாததும் வேதனை. எல்லாவற்றிலும் இன்று அரசியல் வந்துவிட்டது. தமிழகத்தில் அரசியல்வாதி என்றால் சட்டத்தை வளைத்தாவது மரியாதை செலுத்துவார்கள். கலைஞன் என்றால் அவன் கிள்ளுக்கீரைதான். இதற்கான பலனை அனைவரும் அனுபவிப்பார்கள்” என்று முடித்தார்.

தமிழகத்தில் ஒரு தமிழ்க்கலைஞனுக்கு நேர்ந்த இந்த அவமானத்தை அரசு தவிர்த்திருக்கலாம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement